எதற்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே ஆற்றல் பெற்றுள்ளானோ அது போன்ற முறைகளில் இறைவன் அல்லாதவர்கள் நமது கவலை, துன்பம், நோய்களை நீக்குவார்கள் என்றோ உதவி செய்வார்கள் என்றோ நம்பிக்கை வைப்பது மாபெரும் இணைவைப்பாகும்.
கவலை, துன்பம், நோய்களை நீக்குவதற்கும், உதவி வேண்டியும் நாம் பிரார்த்தனை செய்தால் நமக்கு உதவி செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும். இது போன்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
அது போன்று படைப்பினங்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவி செய்ய முடியுமோ அந்த முறையில் ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்வதாக இருந்தாலும் இறைவனுடைய நாட்டம் இல்லாமல் உதவி செய்ய முடியாது என்று நம்பிக்கை வைப்பதும் தவ்ஹீதின் அடிப்படை ஆகும்.
ஆனால் சுப்ஹான மவ்லிதை ஓதக் கூடியவர்கள் கவலை துன்பம் நோய்களை நீக்குவதற்காக நபிகள் நாயகத்திடம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைப் போன்று பிரார்த்தனை செய்து உதவி வேண்டுகின்றனர்.
இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கத்தை இறைத்தூதருக்கு செய்து மாபெரும் இணைவைப்பை அரங்கேற்றுகின்றனர்.
இதோ சுப்ஹான மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் இணைவைப்பு வரிகளைப் பாருங்கள்.
இதில் சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட மொழிபெயர்ப்பையே குறிப்பிடப்பட்டுள்ளது.
اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
கவலைகளை அகற்றுபவரே! நும்மீது ஸலாம்!
اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ
எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.
ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ
எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தஙகளின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்
فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ
எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.
فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்
بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.
اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்
.اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ
நீ நோயாளியாக இருப்பதால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.
مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ
மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.
நாம் மேற்குறிப்பிட்ட அனைத்துமே சுப்ஹான மவ்லித் பாடல்களில் உள்ள வரிகளாககும.
மனிதர்களுக்கு ஏற்படும் நோய், துன்பம், கவலை, அனைத்தையும் நீக்கும் அதிகாரமும், உதவி செய்யும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாகும். இதோ திருமறைக்குர்ஆன் எடுத்துரைக்கும் வசனங்களைப் பாருங்கள்.
உதவி என்பது மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர வேறில்லை.
(அல்குர்ஆன் 3 : 126, 8:10)
உங்களுக்கு அல்லாஹ் உதவினால் உங்களை வெல்பவர் யாருமில்லை. அவன் உங்களைக் கைவிட்டால் அதன் பிறகு உங்களுக்கு உதவுபவர் யார்? எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்கட்டும்.
(அல்குர்ஆன் 3: 160)
அளவிலா அருளாளனைத் தவிர உங்களுக்கு உதவும் உங்களுக்கான படையினர் யாரேனும் உள்ளனரா? இறைமறுப்பாளர்கள் ஏமாற்றத்திலேயே உள்ளனர்.
(அல்குர்ஆன் 67 : 20)
மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும், இன்னும் பல இறைவசனங்களும் உதவி செய்யும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
அது போன்று துன்பங்களிலிருந்து காப்பாற்றுபவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் என்ற அடிப்படையையும் திருமறையின் பல வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
“அல்லாஹ்வே உங்களை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகிறான். (இதன்)பின்னரும் நீங்கள் இணை வைக்கிறீர்கள்”
(அல்குர்ஆன் 6 : 64)
அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தினால், ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றல் மிக்கவன்.
(அல்குர்ஆன் 6:17)
“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு நானே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு நான் சக்தி பெற மாட்டேன்.” என்று (நபியே) கூறுவீராக!
(அல்குர்ஆன் 10 : 49)
(அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது துன்பத்திற்கு உள்ளானவன் பிரார்த்திக்கும்போது அவனுக்குப் பதிலளித்து, அத்துன்பத்தை நீக்கி, பூமியில் உங்களைத் தலைமுறைகளாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? நீங்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
(அல்குர்ஆன் 27:62)
“அவனையன்றி நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அவர்களிடம் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் துன்பத்தை நீக்கவோ, திருப்பவோ அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 17 : 56)
அவனே உங்கள் இறைவனான அல்லாஹ். அவனுக்கே அதிகாரம் உரியது. அவனையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் சிறிதளவு கூட அதிகாரம் பெற மாட்டார்கள். நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனையை அவர்கள் செவியுற மாட்டார்கள். (ஒரு வாதத்திற்கு) அவர்கள் செவியுறுவதாக இருந்தாலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். நீங்கள் இணை வைத்ததை மறுமை நாளில் அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போன்று உமக்கு யாரும் அறிவிக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 35 : 13, 14)
“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! வானங்களிலும் பூமியிலும் அணுவளவு கூட அவர்கள் அதிகாரம் பெறமாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு உதவியாளர் யாருமில்லை” என்று (நபியே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 34 : 22)
இவ்வாறு ஏராளமான வசனங்கள் எல்லாத் துன்பங்களிலும் நமக்கு உதவி செய்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் என்ற தவ்ஹீதின் அடிப்படையை தெளிவாக எடுத்துரைக்கிறது.
துன்பங்களை நீக்குதல் என்பதில் நோய்களும் உள்ளடங்கிவிடும் என்றாலும் நோய்களை நீக்கும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்று குறிப்பிட்டுக் கூறும் வசனங்களும் உள்ளன. இதோ இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக திருமறைக் குர்ஆன் எடுத்துரைப்பதைப் பாருங்கள்.
நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
(அல்குர்ஆன் 26 : 80)
பின்வரும் நபிமொழியும் நோய் நீக்கும் அதிகாரம் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே என்பதை எடுத்துரைக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5675)
“நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை“ என்ற வாசகம் நோய் நீக்கும் அதிகாரம் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைகள் தெள்ளத் தெளிவாக திருமறைக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் போது அந்த தவ்ஹீதின் அடிப்படைகளுக்கு எதிரான இந்த மவ்லிதை ஒரு உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆதரிக்க முடியுமா? என்பதை இதை ஓதக் கூடியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment