பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 3, 2025

பாவங்களை மன்னிக்கும் இறையதிகாரத்தில் இணைவைப்பு


பாவங்களை மன்னிக்கும் இறையதிகாரத்தில் இணைவைப்பு

இறைக்கட்டளைகளுக்கு நாம் மாறு செய்வதே பாவம் எனப்படும். எனவே இறைவனுக்கு நாம் மாறு செய்து பாவம் செய்வதால் இறைவன் மட்டும்தான் நமது பாவங்களை மன்னிப்பதற்கு அதிகாரம் பெற்றவன் என்பது தவ்ஹீதின் அடிப்படையாகும். இறைவன் பாவங்களை மன்னிப்பான் என்பதின் கருத்து நாம் செய்த பாவங்களை அழித்து அதற்காக நம்மைத் தண்டிக்கமாட்டான் என்பதாகும். 

ஆனால் சுப்ஹான மவ்லிதில் ஏராளமான கவிதைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பாவங்களை அழிப்பவர்கள் என்றும், மவ்லித் ஓதுபவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு இறைத்தூதரிடம் பாவமன்னிப்புக் கோருவதகாவும் அமைந்துள்ளது. இதோ அந்த மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் இணைவைப்பு வரிகளைப் பாருங்கள்.

இதில் “சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்” என்ற புத்தகத்தில் மவ்லித் பிரியர்  செய்த மொழிபெயர்ப்பையே குறிப்பிட்டுள்ளோம். 

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும்மீது ஸலாம்!

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا   وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

தவறுகளை மன்னிப்பது தாங்களன்றோ!  அழிவேற்படுத்தும் பாவங்களை மன்னிப்பது தாங்களன்றோ!

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே! சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும்.

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ   تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ   وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக்கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பார்த்துக்கொள்! புனிதம் மிக்க ஹரம் ஷரீபில் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக்கொள்!

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ     مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன்.

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ     وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

மேற்கண்ட மவ்லித் வரிகள் அனைத்துமே இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான இணைவைப்பு வரிகள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது என்பதை திருமறைக் குர்ஆனும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. 

“தமக்குத் தாமே வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் விரக்தியடைந்து விடாதீர்கள்! அல்லாஹ்வே எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று (இறைவன் கூறுகிறான் என நபியே!) கூறுவீராக! 

(அல்குர்ஆன் 39:53)

(அவனே) பாவங்களை மன்னிப்பவன்; பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன்; 

 (அல்குர்ஆன் 40: 3)

அவர்கள் மானக்கேடானதைச் செய்தாலோ, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டாலோ, அல்லாஹ்வை நினைத்துத் தமது பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்?

 (அல்குர்ஆன் 3 : 135)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  (யா அல்லாஹ்)  நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டேன். எனவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! ஏனெனில் உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிப்பவன் யாருமில்லை. 

(அறிவிப்பவர் : அலி (ரலி) நூல் : முஸ்லிம் 1290)

இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்!  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ பக்ர் (ரலி), நூல் : புகாரி (834)

மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதன் காரணமாகத்தான் எல்லா நபிமார்களும், நல்லடியார்களும் தங்களின் பாவங்களுக்கு இறைவனிடமே பிரார்த்தித்துப் பாவமன்னிப்புக் கோரியுள்ளனர் என்பதை ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் எடுத்துரைக்கின்றன. 

நாம் பிறமனிதர்களுக்குச் செய்யும் அநீதிகளும் இறைக்கட்டளைக்கு மாற்றமாகச் செய்கின்ற பாவம்தான். எனவே நாம் பிறமனிதர்களுக்கு அநீதி இழைத்தால் நம்மால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை மன்னித்தால்தான் அல்லாஹ் நமது பாவங்களை அழித்து தண்டனையிலிருந்து நம்மைப் பாதுகாப்பான். 

பிறமனிதர்களிடம் மன்னிப்புக் கோருதல் என்பது அவர்களிடம் நேரடியாகச் சென்று கேட்பதுதான். இறைவனிடம் கேட்பதைப் போன்று அவர்களிடம் பிரார்த்தனை செய்து பாவமன்னிப்புக் கேட்பதல்ல. 

ஆனால் மேற்கண்ட மவ்லித் வாசகங்களைப் படித்துப் பார்த்தால் மவ்லிது ஓதுபவர்கள் தாம் இறைவனுக்குச் செய்த பாவங்களுக்கே நபிகள் நாயகத்தை அழைத்துப் பிரார்த்தித்து பாவமன்னிப்புக் கோருகின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இது எவ்வளவு பெரிய இணைவைப்புக் காரியம் என்பதை இதைச் செய்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment