நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்களே! ஸலாமைப் பரப்புங்கள்! (மகிழ்ச்சியை காட்டும் முகமாக) உணவு வழங்குங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), நூற்கள் : திர்மிதி, இப்னுமாஜா, தாரமீ, அஹமது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உணவளிப்பது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல், நபிவழி என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்குத் தெளிவு படுத்துகிறது. எனவே மீலாது, மவ்லிது பண்டிகையின் போது பலவிதமான உணவு பதார்த்தங்களை ருசிபார்க்கலாம், விளம்பலாம் என மவ்லிதுக் காவலர்கள் கூறுகின்றனர்.
முறையான விளக்கம் :
மேற்கண்ட நபிமொழியில் மீலாது விழா, மவ்லித் அனாச்சாரங்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.
“மனிதர்களே ஸலாத்தைப் பரப்புங்கள், உணவளியுங்கள்” என்பதுதான் நபியவர்கள் கூறிய வார்த்தையாகும்.
“மகிழ்ச்சியை காட்டும் முகமாக” என்பது இந்த வழிகேடர்கள் தமது வழிகேட்டிற்குத் தோதுவாகவும், இந்த நபிமொழியைத் திரித்து விளக்கம் கூறுவதற்காகவும் சேர்த்துக் கொண்ட வாசகமாகும்.
நபியவர்கள் காலத்தில் மீலாது விழா என்றோ, மவ்லித் என்றோ எதுவுமே இல்லாத போது அதற்கு உணவளியுங்கள் என்று நபியவர்கள் எப்படிக் கூறியிருக்க முடியும்? என்பதைக் கூட இந்த மவ்லித் பிரியர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.
மவ்லித் என்ற பெயரில் இவர்கள் எப்படியெல்லாம் உண்டு ருசிக்கிறார்களோ அது போன்று நபியவர்கள் காலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றதாக ஓர் ஆதாரத்தையேனும் இவர்கள் காட்ட இயலுமா?
இதிலிருந்தே இவர்கள் தமது வழிகேட்டை நியாயப்படுத்துவற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் என்பது தெளிவாகிறது.
“உணவளியுங்கள்“ என்று நபியவர்கள் குறிப்பிடுவது குடும்பத்தினர், ஏழைகள், உறவினர்கள், விருந்தினரகள் மற்றும் அது போன்றவர்களைத்தான் குறிக்கும் என்பதை ஏராளமான இறைவசனங்களும், நபிமொழிகளும் தெளிவுபடுத்தியுள்ளன.
மாறாக நபியர்கள் காட்டித்தராத ஒரு பித்அத்தான காரியத்தை மார்க்கம் என்ற பெயரில் உருவாக்கி அதில் ஓர் அம்சமாக உணவளிக்க வேண்டும் என்று நபியவர்கள் குறிப்பிடவில்லை. எனவே இவர்கள் செய்யும் அனாச்சாரங்களுக்கும், இந்த நபிமொழிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
No comments:
Post a Comment