பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

பெண் ஜனாஸாவை கணவர் குளிப்பாட்டலாமா?

 

? சில கிராமங்களில் பெண் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதற்காக பெண் ஆலிமாக்களை அழைக்கிறார்கள். இது சரியாகுமா? இது ஆலிமாக்களுக்குக் கண்ணியத்தைக் குறைக்கும் விஷயமா? பெண் ஜனாஸாவை கணவர் குளிப்பாட்டலாமா? விளக்கவும்.

ஏ. சித்திக், கீழக்கரை

சில இடங்களில் ஜனாஸா குளிப்பாட்டுதல் என்பது ஒரு இழிவான வேலை என்று கூறி, ஆண் ஜனாஸாவை பள்ளிவாசல் முஅத்தின் தான் குளிப்பாட்ட வேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இதற்கென தனியாக ஊழியர்களை நியமித்து இந்தக் காரியத்தைச் செய்ததில்லை. நபித்தோழர்கள் தான் செய்துள்ளனர்.

முஅத்தின்கள் பள்ளிவாசல் ஊழியர் என்பதால், அவரை ஜமாஅத்தினர் அடிமையாகப் பாவித்து, இது போன்ற பணிகளை ஒப்படைப்பது வழக்கம். ஆனால் பெண் ஆலிமாக்களுக்கு அந்த நிலை இல்லை. அவர்கள் ஊர் ஜமாஅத்துக்குக் கட்டுப்பட்ட ஊழியர்களாக இருப்பதில்லை. எனவே முஅத்தின்களை அழைப்பதற்கும், ஆலிமாக்களை அழைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

நபி (ஸல்) அவர்களின் ஒரு மகள் மரணித்து விட்டதும் நபி (ஸல்) அவர்கள் வந்து “அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது தேவையென நீங்கள் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினார்கள். நீராட்டிய பின் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்ததும் தமது கீழாடையைத் தந்து “இதை அவரது உடம்பில் சுற்றுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்: புகாரி 1258

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளை, நபித்தோழியரான பெண்கள் குளிப்பாட்டியுள்ளனர். எனவே ஆலிமாக்கள் என்றால் அவர்களுக்குக் குளிப்பாட்டும் சட்டம் தெரிந்திருக்கும் என்பதற்காக அவ்வாறு அழைத்தால் அதில் தவறில்லை. குறிப்பிட்ட பிரிவினர் தான் செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு அழைத்தால் அதைத் தவிர்க்க வேண்டும்.

ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் இல்லை.

ஆயினும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.

கணவனை மனைவியும் மனைவியை கணவனும் குளிப்பாட்ட விரும்பினால் அவர்களிடையே எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் இதைத் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment