பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

புதுமனை புகுவிழா கொண்டாடலாமா?

 

? புதுமனை புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா?

ஆறாம்பண்ணை அப்துல்காதர், அபுதாபி

புதுமனை புகுவிழா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை. புதுமனை புகுவிழா என்ற பெயரில் பால் காய்ச்சுதல், மவ்லிது பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறுகின்றன. சில இடங்களில் சுப்ஹ் தொழுகையை புது வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றும் வழக்கமும் உள்ளது. இதுவும் பித்அத்தாகும். இவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆனால் அதே சமயம் ஒருவர் புது வீடு கட்டி, அதில் குடிபுகும் போது விருந்தளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் “இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். அதற்கு மற்றொருவர் “கண்கள் தான் உறங்குகின்றனஉள்ளம் விழித்திருக்கிறது” என்று கூறினார். பின்னர் அவர்கள் “உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டுஇவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்” என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் “இவர் உறங்குகிறாரே!” என்றார். மற்றொருவர் “கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது” என்றார். பின்னர் அவர்கள் “இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார் விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லைவிருந்து உண்ணவுமில்லை” என்று கூறினர்.

பின்னர் அவர்கள் “இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்அவர் புரிந்து கொள்ளட்டும்” என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் “இவர் உறங்குகிறாரே!” என்று சொல்ல மற்றொருவர் “கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது” என்றார். அதைத் தொடர்ந்து “அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்” என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 7281

புது வீடு கட்டி, அதில் விருந்துக்கு அழைப்பதை வானவர்கள் உதாரணமாகக் காட்டியதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தான் வானவர்கள் உதாரணமாகக் காட்டுவார்கள் என்ற அடிப்படையில் புது வீடு குடி புகும் போது விருந்துக்கு அழைக்கலாம். எனினும் இது அனுமதிக்கப்பட்ட செயல் தானே தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒருவர் புது வீடு புகும் போது விருந்தளிக்கவில்லை என்றால் அவர் இறைவனிடம் குற்றவாளி ஆகி விட மாட்டார்.

அதிலும் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தால் அவர் கடனை அடைப்பதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற விருந்துகளை அளிக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்யும் போது “யா அல்லாஹ்! உன்னிடம் பாவத்தை விட்டும், கடனை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்”  என்று தொழுகையில் கூறுவார்கள். (இதையறிந்த) ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு  காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மனிதன் கடன் படும் போது பொய் பேசுகின்றான், வாக்குறுதி அளித்து அதற்கு மாறு செய்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி  789

“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனைத் தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் 3498

இந்த ஹதீஸ்களிலும், இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடன் விஷயத்தில் கடும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். கடன் வாங்கி அல்லது கடன் இருக்கும் நிலையில் விருந்து வைப்பது நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்வதாகும்.

No comments:

Post a Comment