பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

இருவரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை முறிக்கலாமா??

 இருவரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை முறிக்கலாமா??

பதில்:

ஒப்பந்தம் என்பது இருவரோ அல்லது இரு தரப்பினரோ தங்களுக்கு மத்தியில் பரஸ்பர நிபந்தனைகளை வகுத்து அதன் அடிப்படையில் இருவரும் நடப்போம் என்று ஒப்புக்கொண்டு எழுத்திலோ வாய்மொழியாகவோ வாக்குறுதியளிப்பதாகும்.

ஒப்பந்தத்தை நிறைவேற்ற இருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை போல தங்களுக்கு மத்தியில் உள்ள ஒப்பந்தத்தை முறிப்பதாக இருந்தால் இருவரும் ஒப்புக் கொண்டு பிரிவதில் எவ்வித குற்றமும் இல்லை.

ஒருவர் தன்னால் இயலாமல் பிரிய நினைத்தால் கூட இருவரும் பேசி பிரிந்து விடுவதிலும் எவ்வித குற்றமும் இல்லை.

ஒப்பந்தம் குறித்து மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படையான தகவல்களை அறிந்துக் கொள்வோம்.

ஒப்பந்தம் செய்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது.

இறைநம்பிக்கை கொண்டோரே! உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

அல்குர்ஆன் 5: 1

அநாதையின் செல்வத்தை, அவர் பருவமடையும் வரை சரியான முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாகும்.

அல்குர்ஆன் 17: 34

ஒரு சமுதாயத்தவர், இன்னொரு சமுதாயத்தவரைவிடப் பெரும்பான்மையாக இருப்பதால் (இவர்களுக்கு ஆதரவாக) உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையே மோசடியாக்கி, (அவற்றை முறித்து விடாதீர்கள். இதன் மூலம்) நூலை நூற்று, அது உறுதியான பின் அதைத் தனித்தனியாகப் பிரித்து விட்டவளைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இதைக் கொண்டு உங்களை அல்லாஹ் சோதிக்கிறான். நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் மறுமை நாளில் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.

அல்குர்ஆன் 16: 92

ஒப்பந்தத்தை பரஸ்பரமில்லாமல் முறிப்பதை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 15)

34- حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا ، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ ، وَإِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا عَاهَدَ غَدَرَ ، وَإِذَا خَاصَمَ فَجَرَ.

நான்கு குணங்கள் எவனிடம் குடி கொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடி கொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (அந்த நான்கு குணங்களாகிறது) 1. (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், 2. பேசும் போது பொய் சொல்வதும், 3. ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், 4. வழக்காடினால் அவமதிப்பதும் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 34

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْغَادِرَ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلَانِ بْنِ فُلَانٍ

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 6177

தமது உடன்படிக்கையை அவர்கள் முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை மறுத்ததாலும், நபிமார்களை அநியாயமாகக் கொன்றதாலும், “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்.) மேலும் அவர்களின் இறைமறுப்பின் காரணமாக அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டான். எனவே சிலரைத் தவிர அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அல்குர்ஆன் 4: 155

அவர்கள் தமது வாக்குறுதிக்கு மாறு செய்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்தோம். அவர்கள் (வேத) வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் மாற்றுகின்றனர். அவர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையின் ஒரு பகுதியை மறந்தனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் ஒரு மோசடியைக் கண்டுகொண்டே இருப்பீர். எனவே அவர்களை மன்னித்து, அலட்சியம் செய்வீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 5: 13

உங்கள் சத்தியங்களை, உங்களுக்கிடையே மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! அவ்வாறு செய்தால், (உங்கள்) பாதம் நிலைபெற்ற பின் அது சறுக்கி விடும். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்ததால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

அல்குர்ஆன் 16: 94

No comments:

Post a Comment