பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

உறவினர் (அன்பளிப்புச் செய்தவர்) அந்த இடத்தை விற்று, பணத்தை என்னிடம் தர வேண்டும் என்று கேட்கிறார். இதற்கு மார்க்கத் தீர்வு என்ன?

 

? வீடு இல்லாமல் கஷ்டப்படும் எங்களுக்கு உதவி செய்யும் நோக்கில், பண வசதி படைத்த தூரத்து உறவினர் ஒருவர் அவருக்குரிய ஒரு இடத்தை எங்களுக்கு அன்பளிப்புச் செய்தார். அதை விற்று விட்டு வீடு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதை நம்பி நாங்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டோம். பிறகு ஒரு வருடம் கழித்து, அந்த உறவினர் (அன்பளிப்புச் செய்தவர்) அந்த இடத்தை விற்று, பணத்தை என்னிடம் தர வேண்டும் என்று கேட்கிறார். இதற்கு மார்க்கத் தீர்வு என்ன?

எம். தவுலத் நிஸா, நாகப்பட்டினம்

அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால் அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கி விட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அதை வாங்காதீர்! உமது தர்மத்தை நீர் திரும்பப் பெற்றுக் கொள்ளாதீர்! அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன் தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 1490

இந்த ஹதீஸில், அன்பளிப்புச் செய்த பொருளை விலை கொடுத்து மீண்டும் வாங்குவதற்கே நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள். அப்படியானால் விலை எதுவும் கொடுக்காமல் திரும்பப் பெறுவது எத்தகைய குற்றம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அன்பளிப்புச் செய்து விட்டால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்ள அவருக்கு உரிமையில்லை. மார்க்க அடிப்படையில் அந்த இடம் உங்களுக்குரியது தான். அதை விற்று அந்தக் கிரயத்தை அன்பளிப்புச் செய்தவரிடம் கொடுக்கத் தேவையில்லை.

எனினும், இந்நாட்டின் சட்டப்படி அன்பளிப்பை உரிய முறையில் பதிவு செய்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும். பதிவு செய்யாத பட்சத்தில் நிலத்தின் உரிமையாளர், நிலத்தை உங்களிடமிருந்து பறித்துக் கொண்டால் அவரை இந்நாட்டின் சட்டப்படி தண்டிக்க முடியாது. எனினும், அவ்வாறு செய்தால் அவர் இறைவனிடத்தில் குற்றவாளியாவார்.

No comments:

Post a Comment