? தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்கள் தொடர்பாக புகாரியில் இடம் பெறும் 1147வது ஹதீஸ் தராவீஹ் தொடர்புடையது அல்ல! என்று பின்வரும் காரணங்களை கூறுகின்றனர்.
தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்தில் மட்டும்தான் தொழப்படுகிறதே தவிர மற்ற மாதங்களில் தொழப்படுவதில்லை எனவே இந்த ஹதீஸ் தராவீஹ் தொழு கைக்கு பொருந்தாது. இந்த ஹதீஸ் ஒரு ஸலாமைக் கொண்டு நான்கு ரக்அத் தொழுததாகக் கூறப்படுகிறது. ஆனால் தராவீஹ் இரண்டு ரக்அத்க ளுக்கு ஒரு ஸலாம் என்ற அடிப்படையில் தொழப்படுகிறது.
இந்த ஹதீஸ் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றியதாகும். ஏனெனில் தஹஜ்ஜத் தொழுகைதான் ரமாளானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழப்படு கிறது. இந்த ஹதீஸ் ரமலான் தொடர்புடையது அல்ல! என்பதால் தான் இதை தஹஜ்ஜத் (கியாமுல் லைல்) என்ற தலைப்பில்
ஹதீஸ் நூல் ஆசிரியர்கள் கொண்டுவந்துள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன?
! நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களி லும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.(முதல்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.
நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை'' என்று விடையளித்தார்கள்' எனவும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசலமா பின் அப்திர்ரஹ்மான், நூல் :புகாரி (1147)
தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் மட்டும் தொழுவதால் இந்த ஹதீஸ் தராவீஹ் தொழுகையைப் பற்றி கூறுவதாக சொல்லமுடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தை எடுத்து வைப்பவர்கள் முதலில் தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் மட்டும்தான் தொழவேண்டும் என்பதை முதலில் நிரூபித்து விட்டு இந்த கருத்தை அவர்கள் எடுத்து வைக்க வேண்டும். தராவீஹ் தொழுகை (இரவுத் தொழுகை) ரமலான் மாதத்தில் மட்டும்தான் தொழ வேண் டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோது இந்த வாதம் ஏற்புடையது அல்ல.
மேலும் நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தொழுதது ஓரே தொழுகை தான். நேர காலங்களை கவனித்து அதற்கு வெவ்வோறு பெயர்கள் ஹதீஸ் களில் கூறப்பட்டுள்ளது.
இரவில் இந்த தொழுகை நிறைவேற்றப்படுவதால் இதற்கு ஸலாத்துல் லைல், கியாமுல் லைல் (இரவு தொழுகை) என்று கூறப்படுகிறது. உறங்கி எழுந்து இந்த தொழுகை தொழலாம் என்பதால் தஹஜ்ஜத் தொழுகை (இரவில் எழுந்து தொழும் தொழுகை) என்று கூறப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் இரவில் ஒரே தொழுகையைத்தான் தொழுதார்கள் என்பதற்கு பின்வரும் நபிமொழிகள் தெளிவான சான்றுகளாகும்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340
நபி (ஸல்) அவர்கள் இரவின் முழுவதும் தொழுத தொழுகை மொத்தம் (8+3) 11 ரக்அத்துகள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த நபிமொழியில் கூறப்படுவது தஹஜ்ஜத் தொழுகை என்று கூறினால். நபிகளார் தொழுத தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்விக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களால் பதில் சொல்ல முடியாது. இரண்டும் ஓரே தொழுகை என்றால்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பி னுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவுவரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்கு தொழுதோம்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல் : நஸயி (1588)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமலானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம்வரை எங்களுக்குத் தொழவைத்தார்கள். அதன் பிறகு (சில நாட்கள்) தொழவைக்கவில்லை. ரமலானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக் கும்போது மீண்டும் எங்களுக்குத் தொழவித்தார்கள். தம் குடும்பத்தின ரையும் மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு நீண்ட நேரம் தொழவைத்தார்கள். அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : நஸயீ இப்னு மாஜா (1317)
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்றவரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழுவிக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்)இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும்போது இரவின் பாதிவரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் ''ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்றவரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்தபோது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்தபோது தம்முடைய குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்க ளுக்கு ஸஹர்( நேரம்) தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அள விற்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீத முள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நூல் : அபூ தாவூத் (1167)
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் மக்களுக்கு ஜமாஅத்தாக தொழு வித்தார்கள். அது எந்த நேரம்வரை என்று மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. மூன்றுநாட்கள் மீதமுள்ள நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது இறுதி, ஸஹர் நேரம் இறுதிவரை. ஸஹர் நேர இறுதிவரை நபி (ஸல்) அவர்கள் தொழுவித்த இந்த தொழுகை தராவீஹ் என்றால் அவர்கள் தஹஜ்ஜத் எங்கே தொழுதார்கள் என்ற கேள்வி எழும்? தொழுத தஹஜ்ஜத் என்றால் தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்வி எழும்? இரண்டும் வெவ்வேறு பெயர்கள் உள்ள ஒரே தொழுகைதான் என்று கூறினால் மட்டுமே இதற்கு சரியான பதிலை கூற முடியும்.
நபி (ஸல்) அவர்கள் எல்லா காலங்களில் இதே எண்ணிக்கையில் தொழு திருந்தால் நீங்கள் மட்டும் ஏன் ரமளான் மாத்ததில் மட்டும் தொழுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
எல்லா காலங்களிலும் இந்த தொழுகையை இந்த எண்ணிக்கையில் தொழலாம் என்றிருந்தாலும் ரமலான் மாத்தில் கிடைக்கும் நன்மையை எண்ணி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நபிகளாரும் இந்த மாதத்தில் இந்த தொழுகைக்க முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரப் பூர்வமான பல சான்றுகள் உள்ளன.
எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவரா கவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (37), முஸ்லிம் (1391)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நின்று வழிபடுவதைக் கட்டாயப்படுத்தாமல் அதை மக்களுக்கு ஆர்வமூட்டிவந் தார்கள். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்றுவழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (1392)
மற்ற மாதங்களில் இரவுத் தொழுகையை ரமலான் மாதத்தின் இரவுத் தொழுகை அளவுக்கு ஆர்வுமூட்டாத நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை அதிகம் வலியுறுத்தி அதற்கு ஏராளமான நன்மைகள் உள்ளதையும் குறிப்பிட்டதால் நாமும் ரமலான் மாதத்தில் இதற்கு முக்கியத்து வம் கொடுத்து வருகிறோம்.
எட்டு ரக்அத்கள் என்று வரும் ஹதீஸில் நான்கு ரக்அத்களில் ஸலாம் கொடுத்தாக வருகிறது. ஆனால் நீங்கள் ஏன் இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுக்கிறீர்கள் என்ற அடுத்த வாதத்தை வைக்கிறார்கள்.
அந்த நபிமொழியில் நான்கு ரக்அத்களில் ஸலாம் கொடுத்தார்கள் என்று தெளிவாக கூறப்படவில்லை. முதலில் நான்கு ரக்அத் தொழுவார்கள். என்று கூறப்பட்டுள்ளது. அது எத்தனை ஸலாத்தைக் கொண்டு தொழுவார்கள் என்று தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும் இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாக தொழவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட் டுள்ளார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால், சுபஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி (1137)
மற்றவர்களுக்கு இரண்டு ரக்அத்தாக தொழவேண்டும் என்று கட்டளை யிட்ட நபிகளார் இரவில் இரண்டிண்டாகத்தான் தொழுதார்கள் என்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
நான் இப்னு உமர் (ர) அவர்கடம், வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)கல் நீண்ட அத்தியாயங்களை ஓதலாமா?'' என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ர) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக் அத்களா கத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுத வற்றை) ஒற் றையாக ஆக்குவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் சீரீன், நூல் : புகாரி (995)
முதலில் நான்க ரக்அத்கள் தொழுவார்கள் என்று அறிவிக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் இப்னுமாஜா (1348) நபிக ளார் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களில் ஸலாம் சொல்வார்கள் என்று அன்னை ஆயிஷா அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
இந்த செய்திகளை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் அந்த நபிமொழி யில் நான்கு என்று கூறப்பட்டது. ஒரே ஸலாத்தில் என்று முடிவு எடுக்கக் கூடாது. மற்ற நபிமொழிகளையும் கவனத்தில் கொண்டு இரண்டு ரக்அத்களின் ஸலாம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். நபிமொழி தொகுப்புகளில் இந்த செய்தி தராவீஹ் என்ற தலைப்பில் நபிமொழி தொகுப்பாளர்கள் கொண்டு வரவில்லை எனவே எட்டு ரக்அத் தொடர்பான நபிமொழி தராவீஹ் குறிக்காது என்று வாதிடுகின்றனர்.
நபிமொழி நூல் ஆசிரியர் கொடுக்கும் தலைப்பை வைத்து மட்டும் ஒரு காரியத்தை நிரூபிப்பது நகைப்பிக்குரியதாகும். அந்த ஆசிரியர், நபிமொழியில் என்ன கருத்து இருக்கிறது என்று அவர் எண்ணுகிறாரோ அந்த கருத்தைத் தான் அவர் அதற்கு தலைப்பிடுவார். அதுவே சரியானது என்று கூறமுடியாது. சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்த நபிமொழியை இமாம் புகாரி அவர்கள் 1147 ஆவது செய்திக்கு ரமளானிலும் ரமளான் அல்லாத மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை. என்று தலைப்பிட்டுவிட்டு தராவீஹ் தொழுகை என்ற அத்தியாயத்தின் கீழ் 2013 வது ஹதீஸாக இதே செய்தியை கொண்டு வந்துள் ளார்கள் என்பதையும் பார்வையிடவும்.
--> Q/A Dheengula Penmani Sep 2008
No comments:
Post a Comment