?குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதற்கு நேரடியான ஆதாரம் தரவும். மேலும், ''என்னுடைய தோழர்கள் நட்சத்திரத்தைப் போன்றவர்கள்'' என்ற ஹதீஸை ஆராயவும். ஸஹீஹாக இருந்தால் ஸஹாபாக்களையும் பின்பற்றவும்.
குர்ஆன், ஹதீஸ் அல்லாத மற்றவற்றைப் பின்பற்றுவதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பதை விட்டு விட்டு, குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதற்கே ஆதாரம் கேட்பது ஆச்சரியமாக உள்ளது.
இவை இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். இவற்றை ஒருவர் நம்பினால் தான் அவர் முஸ்லிம். இந்த நம்பிக்கை இருப்பவருக்குத் தான் மார்க்க ஆதாரங்களான குர்ஆன், ஹதீஸிலிருந்து சான்றைக் காட்ட முடியும். ஆனால் நீங்களோ அடிப்படைகள் மீதே சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பியுள்ளீர்கள். இதற்கு வேறு எதிலிருந்து ஆதாரம் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
அல்குர்ஆன் 33:36
ஒன்றை நான் உங்களிடம் விடுகின்றேன். அதைப் பற்றிப் பிடிக்கின்ற வரை ஒருபோதும் நீங்கள் வழிகெட மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும், அவனது நபியின் வழிமுறையுமாகும்.
நூல்: ஹாகிம் 318, பாகம்: 1, பக்கம்: 171
இது போன்ற கருத்தில் அமைந்த திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் தான் ஆதாரமாகக் காட்ட முடியும். உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த ஆதாரங்கள் போதுமானவை என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம்.
''என்னுடைய தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள்; இவர்களில் யாரைப் பின்பற்றினாலும் வழி தவற மாட்டீர்கள்'' என்ற கருத்தில் அமைந்த ஹதீஸின் தரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள்.
இந்த ஹதீஸ் பைஹகீயில் 381வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. இதே கருத்தில் இப்னு அப்பாஸ் வழியாக தைலமீயும் அறிவிக்கின்றார் என்று கஸ்ஃபுல் கஃபா என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸாகும். இந்த ஹதீஸின் தரம் குறித்து ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் குறை கூறியுள்ளனர்.
இதை இப்னு உமர் (ரலி)யிடமிருந்து அப்து பின் ஹமீது என்பாரும், மற்றவர்கள் உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை அனைத்துமே பலவீனமானவை. இது போன்ற கருத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல் என்று கூறுவதே தவறு என்று இமாம் பஸ்ஸார் குறிப்பிடுகின்றார்கள். இது இட்டுக் கட்டப்பட்ட அப்பட்டமான பொய் என்று இப்னு ஹஸ்ம் குறிப்பிடுகின்றார் என குவாஸா அல்பத்ருல் முனீர் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் ஜாஃபர் பின் அப்துல் வாஹித் அல்ஹாஷிமில் காழி எனபவரால் அறிவிக்கப் படுகின்றது. இவர் இட்டுக்கட்டுபவர் என்று இமாம் தாரகுத்னீ குறிப்பிடுகின்றார்கள். இவர் அடிப்படையில்லாத ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று அபூசுர்ஆ குறிப்பிடுகின்றார். இவர் ஹதீஸ் திருடர், நம்பகமானவர் பெயரைப் பயன்படுத்தி மோசமான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னுஅதீ கூறுகின்றார்.
(நூல்: மீஸானுல் இஃதிதால்)
இந்த ஹதீஸ் குறித்த விமர்சனங்களில் சிலவற்றை மட்டுமே இங்கு தந்துள்ளோம். இச்செய்தி பற்றிய அனைத்து விமர்சனங்களும் மேற்கண்டவாறு அல்லது அதைவிட மோசமாகவே அமைந்துள்ளன. எனவே இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை
--> Q/A Ehathuvam Sep 2007
No comments:
Post a Comment