பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

குடும்பக் கட்டுப்பாடு ???

? பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளார். ஆனால் தற்சமயம் மார்க்கத்தில் இது அனுமதி இல்லை என்று தெரிந்த பிறகு மிகவும் வருத்தப்படுவதாக கூறுகிறார். இவர் தவ்பா செய்தால் அவரின் தவறு மன்னிக்கப்படுமா? அல்லது பாவமான காரியத்தை செய்தவராகக் கருதப்படுவரா?


மனிதன் தெரியாமல் செய்யும் பாவங்களை, அவை பாவம் என்று தெரிந்த பின்னர் அதை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்டு, தம் செயல்களை சீர்திருத்திக் கொண்டால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)

உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 6:54)

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி, திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான்.அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:119)

? எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். இது சரியா? சர்மிளா, மதுரை

நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2932)

அல்லாஹ்வின் தூதர் காலத்தில் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருத்தப்பட்டுள்ளதால். நபிவழியின்படி முத்தலாக் ஒரு தலாக்காவே எடுத்துக் கொள்ளப்படும். என்றாலும் உங்கள் கணவர் தலாக் கூறி ஏழு மாதங்கள் ஆகி விட்டதால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நீங்கி விடுகிறது. இதைத் தெரிந்து கொள்ள சுருக்கமாக தலாக்கின் சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் தன் மனைவியை தலாக் கூறினால் அவர்களின் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம்.

இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

மூன்று மாதவிடாய் காலத்திற்குள் உங்கள் கணவர் உங்களிடம் சேர்ந்து கொள்ளாததால் அவர் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை இழந்து விடுகிறார். நீங்கள் இருவரும் விரும்பினால் புதிதாக அவரையே திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் புதிதாக இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

--> Q/A Dheengula Penmani Apr 2008

No comments:

Post a Comment