? சில சுன்னத் ஜமாஅத் நூற்களில் ஏதேனும் ஒரு ஹதீசுக்கு ஆதாரமாக புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ போன்ற நூற்களை மேற்கோள் காட்டுவதுடன், நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவற்றில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதியப்பட்டுள்ளனவா? விளக்கவும்.
ரூஹுல் பயான், தப்ஸீர் ஜலாலைன், நுஜ்ஹதுல் மஜாலிஸ், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், மிஷ்காத், பைஹகீ என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நூற்களில் பைஹகீ தவிர மற்றவை நேரடி ஹதீஸ் நூற்கள் அல்ல!
நேரடி ஹதீஸ் நூல் என்றால், நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர் கேட்டதை சங்கிலித் தொடராக அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டு, நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்வார். இது தான் ஹதீஸ் நூல் எனப்படுகின்றது.
ரூஹுல் பயான், தப்ஸீர் ஜலாலைன் போன்றவை தப்ஸீர் நூற்களாகும். இந்த நூற்களில் ஹதீஸ்கள் மட்டுமின்றி திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் பல்வேறு கதைகளும் எழுதப்பட்டுள்ளன. ரியாளுஸ்ஸாலிஹீன், மிஷ்காத் போன்ற நூற்கள், புகாரி, முஸ்லிம் திர்மிதி, நஸயீ போன்ற நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து முழு அறிவிப்பாளர்கள் வரிசையை நீக்கி விட்டு, தலைப்பு வாரியாக ஹதீஸ்களைத் தொகுத்து எழுதப்பட்டவையாகும். நுஜ்ஹதுல் மஜாலிஸ் என்பது கட்டுக் கதைகளின் தொகுப்பு.
தப்ஸீர்களாக இருந்தாலும், ஹதீஸ் விரிவுரை நூற்களாக இருந்தாலும் அல்லது ஹதீஸ் தொகுப்பு நூற்களாக இருந்தாலும் அவை நேரடி ஹதீஸ் நூற்களைப் போன்று ஆதாரம் காட்டுவதற்கு ஏற்றதல்ல.
காரணம், ஹதீஸ் நூற்களை ஆதாரமாகக் காட்டும் போது அந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து அது சரியான ஹதீஸா? அல்லது பலவீனமான ஹதீஸா என்பதை முடிவு செய்ய முடியும்.
ஆனால் மேற்கண்ட நூற்களில் எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ்களை அவ்வாறு தீர்மானிக்க இயலாது. ஏனெனில் அந்நூற்களில் இடம் பெறும் ஹதீஸ்கள், நூலாசிரியர் நேரடியாகக் கேட்டுப் பதிவு செய்தவை அல்ல. மாறாக நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து எடுத்து எழுதப்பட்டவை தான்.
நாம் நம்முடைய நூற்களில் ஹதீஸ்களை எழுதி விட்டு புகாரி, முஸ்லிம் என்று மேற்கோள் காட்டுவது போன்று இந்த நூற்களிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். எனவே இந்த நூற்கள் ஒரு போதும் ஆதார நூற்கள் ஆகாது. நேரடி ஹதீஸ் நூற்கள் மட்டுமே ஆதார நூற்களாகும்.
--> Q/A Ehathuvam Magazine Nov 2009
No comments:
Post a Comment