பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் ??

? அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அழியாமல் இருக்கும் என்று சொல்கிறார்களே இது உண்மையா? இதற்கு ஆதாரம் உண்டா?


உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம்(அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)
நூற்கள்: நஸயீ 1387, அபூதாவூத் 883, இப்னுமாஜா 1626, அஹ்மத் 15575

இறைத் தூதர்களின் உடல்களைத் தான் மண் சாப்பிடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இறைவழியில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மண் சாப்பிடாது என்பதற்கு நபிகளாரிகள் நேரடிக் கூற்றில் எந்தச் சான்றும் இல்லை. ஆனால் சிலர் பின்வரும் வரலாற்றுச் சம்பவத்தை சான்றாகக் காட்டுகிறார்கள்.

உஹுதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (நாளைய போரில்) முதலில் நான் தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகின்றேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உனது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்! என்றார். மறுநாள் (போரில்) அவர் தாம் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரைக் கப்ரில் விட்டு வைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்று தான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல - அவரது காதைத் தவிர - உடம்பு அப்படியே இருந்தது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி (1351)

அம்ர் பின் ஜமூஹ்(ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோரின் கப்ரை நீரோட்டம் அரித்து விட்டது என்ற செய்தி கிடைத்தது. அவ்விருவருடைய கப்ர் நீரோடைக்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. அவ்விருவரும் ஒரே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவ்விருவரும் உஹத் போரில் உயிர் தியாகிகளாவார்கள். எனவே அவ்விருவரையும் வேறு இடத்தில் அடக்கம் செய்வதற்குத் தோண்டிய போது நேற்று இறந்தவர்களைப் போன்று எந்த மாற்றமும் (சேதமும்) இல்லாதவர்களாகப் பெற்றோம். அவ்விருவரில் ஒருவர் காயம்பட்ட நிலையில் காயத்தின் மீது கை வைத்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். (இப்போதும்) அதே போன்றே இருந்தார். காயத்தில் வைக்கப்பட்ட கையை அகற்றிய போது திரும்பவும் அதே இடத்திற்கு அந்தக் கை சென்றது. உஹுத் போருக்கும் இன்று தோண்டப்பட்ட நாளுக்கும் இடைப்பட்ட கால அளவு நாற்பத்தி ஆறு வருடங்களாகும்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ ஸஃஸா
நூல்: முஅத்தா (893)

இந்த இரண்டு செய்திகளும் போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல் பல வருடங்கள் கழிந்த பின்பும் அப்படியே இருந்ததைக் கூறுகிறது.

(புகாரியின் அறிவிப்பும், முஅத்தாவின் அறிவிப்பும் சற்று முரண்பட்டது போன்று இடம் பெற்றுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பின் தனி இடத்தில் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அடக்கம் செய்ததாக அவர்களது மகன் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் முஅத்தாவில் நாற்பத்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு அப்துல்லாஹ் (ரலி), அம்ர் பின் ஜமூஹ் (ரலி) ஆகியோரின் உடல் ஒரே கப்ரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜாபிர் அவர்களால் தனியாக அடக்கம் செய்யப்பட்ட அவரது தந்தையின் உடல் எப்படி ஒரே கப்ரில் வந்தது? என்ற கேள்வி எழலாம். இதற்கு ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறது. ஜாபிர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து, பக்கத்தில் அடக்கம் செய்திருக்க வேண்டும். நீரோட்டத்தால் கப்ர் அரிக்கப்பட்டு இரு கப்ருகளும் ஒன்றாகி இருவரின் உடலும் ஒரே கப்ரில் இருப்பதைப் போன்று அமைந்திருக்கும்.)

சில வகை மண்கள் மனித உடல்களைத் திண்பதற்கு சற்றுக் கூடுதல் காலம் எடுத்துக் கொண்டிருக்கலாம். அதனால் அவர்களின் உடல்கள் அவ்வாறு இருந்திருக்கும். அவர்களின் உடல்கள் இன்று வரையில் அவ்வாறு இருக்கும் என்று நாம் கூற முடியாது. அதற்கு எந்தச் சான்றும் இல்லை. இறைத் தூதர்களின் உடல்களை மட்டும் தான் மண் சாப்பிடாது என்று நபியவர்கள் கூறியிருப்பதால் இவ்வாறே நாம் கருத வேண்டும்.

அதே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தில் பறவைகள் வடிவில் சுற்றித் திரிவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், (நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர் (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்து விட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள், நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே! என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: முஸ்லிம் 3834

--> Q/A Dheengula Penmani Jan 2008

No comments:

Post a Comment