? ஹஜ் செல்பவர் கண்டிப்பாக மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்ல வேண்டுமா? அங்கு 100 ரக்அத்கள் தொழ வேண்டுமா?
ஹஜ் செல்பவர் மதீனாவிற்கு - மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்ல வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது கட்டாயம் என்றும் கூறவில்லை. ஒருவர் ஹஜ் செய்யச் சென்று எல்லா கடமைகளையும் நிறைவேற்றிய பின்னர் மதீனா செல்லாமல் ஊர் திரும்பினாலும் அவருடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். ஹஜ் கடமைகளில் மதீனா செல்வதும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதும் இல்லை.
எனினும் ஒருவர் நன்மையை நாடி மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று தொழுது வந்தால் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. அவருக்கு மற்ற பள்ளியில் தொழும் தொழுகையை விடக் கூடுதல் நன்மை கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது.
நூல்: புகாரி 1189
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
நூல்: புகாரி 1190
மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட சிறந்தது என்பதால் எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாம். இத்தனை ரக்அத்கள் தொழ வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
--> Q/A Dheengula Penmani Jan 2008
No comments:
Post a Comment