தப்லீகின் தஃலீம் தொகுப்பு- 1993 மார்ச்
1993 அல்ஜன்னத் மார்ச் இதழில் வெளியிடப்பட்ட ஒரு தொடர் – தேவையான திருத்தங்களுடன்
மக்களை திசை திருப்பக் கூடியவர்களை அவர்களின் எழுத்துக்களே அடையாளம் காட்டிவிடும். மேலும் சில சான்றுகளைப் பாருங்கள்.
நான்கு இமாம்களிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாத எந்த சிறு மஸ்அலாவும் இல்லை.
அமல்களின் சிறப்பு பக்கம் 377
தராவீஹ் தொழுகை சுன்னத் என்பதாக இமாம்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
அமல்களின் சிறப்பு: 317
ஆயுளில் ஒரு தடவை ஸலவாத் சொல்வது பர்லு என்பதாக எல்லா மத்ஹபுகளுடைய மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
அமல்களின் சிறப்பு: 342
ஸஹர் சாப்பிடுவது முஸ்தஹப் என்பது இமாம்களின் ஏகோபித்த முடிவாகும்.
அமல்களின் சிறப்பு 352
இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இல்லாத எந்த ஒரு சிறு சட்டமும் கிடையாது என்று ஒரு இடத்தில் கூறிவிட்டு இமாம்கள் ஏகோபித்து ஒத்த கருத்துக்கு வந்ததாக பல இடங்களில் பட்டியலிடுகிறார்.
முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதால் தான் இவரை ஷைகுல் ஹதீஸ் என்று கூறுகிறார்கள் போலும் திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் முரணாக இவர் விடுகின்ற பொய்களை இன்னும் கேளுங்கள்.
தொழும் போது உங்களுக்கு உலக நினைவுகள் எவையேனும் வருமா? என்று ஒரு பெரியாரிடம் கேட்கப்பட்ட போது தொழும் போதும் எனக்கு உலக நினைவுகள் வருவதில்லை தொழுது முடித்த பின்பும் வருவதில்லை என்று கூறினார்.
அமல்களின் சிறப்புகள் பக்கம் 147
தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் உலக நினைவுகள் வராத ஒருவர் இருக்க முடியுமா? இவ்வாறு இருப்பது சாத்தியமே இல்லை என்று இந்த ஹதீஸை கலை மேதைக்கு தெரியாதா?
நபி ஸல் அவர்கள் மரணித்த பின்பு யார் ஆட்சித் தலைவராக வருவது என்ற விவகாரத்தில் நபித் தோழர்கள் விவாதம் செய்தார்கள் என்ற செய்தி இவருக்குத் தெரியாதா?
பசியில் வாடிய அபூஹுரைரா பசியைப் போக்கிட எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை அள்ளினார்கள் என்ற செய்தி இவருக்குத் தெரியாதா?
பஹ்ரைன் நாட்டிலிருந்து வந்த பொருட்களில் தங்களுக்குப் பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளியை நோக்கி நபித் தோழர்கள் வந்தததும் நபி ஸல் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் ரலி அவர்கள் எனக்கு அதிக அளவு வேண்டும் என்று கேட்டதும் இவருக்குத் தெரியாதா?
ஏன் நபி ஸல் அவர்கள் கூட நான் தூங்கவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். பெண்களை மணமுடித்திருக்கிறேன். நோன்பு நோற்கவும் செய்கிறேன். சிலவேளை நோன்பை விட்டு விடவும் செய்கிறேன் என்று கூறியது கூட இவருக்குத் தெரியவில்லையா?
இவர்களுக்கெல்லாம் உலக நினைவு இருந்திருக்கிறது. உலக நினைவற்று இருப்பது எந்த மனிதனருக்கும் சாத்தியமானது இல்லை என்று ஷைகுல் ஹதீஸƒக்கு தெரியாமல் போனது ஏன்? ஹதீஸ்களில் ஈடுபாடு உள்ள இவருக்கு நிச்சயம் இவையெல்லாம் தெரியாமலிருக்க முடியாது. உலக நினைவற்று இருப்பது அறவே சாத்தியமில்லை என்று நபியவர்கள் கூறியதும் அவருக்குத் தெரியும்.
தெரிந்து கொண்டே தான் இவ்வாறு எழுதியுள்ளார். பெரியார்கள் மீது பக்தி முற்றிப் போய் வேண்டுமென்றே தான் இவ்வாறு அவர் எழுதியுள்ளார். நாம் கற்பனையாக இதைக் கூறவில்லை. இவ்வாறு அவர் தருகின்ற வாக்கு மூலத்தை வைத்தே இவ்வாறு கூறுகிறோம். இதோ அவரது வாக்கு மூலம்.
நபி ஸல் அவர்கள் உபதேசிக்கும் போது அங்கு கூடியிருக்கும் சமயம் ஏற்படுகின்ற உருக்கமும், கவலையும் வீட்டுக்கு வந்ததும் அகன்று விடுகின்றது. மனைவி மக்களுடன் கலந்து சிரித்துப் பேசி உலகப் பேச்சுக்களில் சிந்தனை சென்று விடுகின்றது. நபி ஸல் அவர்களிடம் இருக்கும் போது ஒரு நிலை . அங்கிருந்து அகன்றதும் இன்னொரு நிலை. இது நயவஞ்சகத்தின் சாயலோ என்ற அச்சம் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கும், ஹன்லழா ரலி அவர்களுக்கும் ஏற்பட்டது. இருவரும் நபி ஸல் அவர்களிடம் விளக்கம் கேட்கச் சென்றார்கள். இதனைச் செவியுற்ற நபி ஸல் உலக நினைவற்ற வாழ்வது சாத்தியமல்ல என்ற கருத்தை அவ்விரு தோழர்களுக்கும் உணர்த்தினார்கள்.
இந்த சம்பவத்தை 902, 903 பக்கங்களில் கூறுகிறார் .
அது மட்டுமில்லை. இதைத் தொடர்ந்து அவர் கூறுவதையும் கேளுங்கள்.
மனிதனுக்கு அவனுக்குரிய அவசியத் தேவைகள் இருக்கின்றன. அவற்றைப் பூர்த்தி செய்வதும் அவசியமாகும். சாப்பிடுதல், குடித்தல், மனைவி மக்களைப் பராமரித்தல் போன்றவை கட்டாயத் தேவைகளாகும். எனவே மறுமைமையைப் பற்றிய சிந்தனை சிற்சில நேரங்களில் தான் இருக்க முடியும். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இருப்பது முடியாது. அவ்வாறு இருக்க வேண்டுமென விரும்புவதும் சரியில்லை. மறுமையைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது மலக்குகளுடைய நிலையாகும். ஏனெனில் அவர்களுக்கு மனைவி மக்களின் சிந்தனையோ உலகவாழ்வின் பிரச்சனைகளோ எதுவும் கிடையாது. மாறாக மனிதர்களுக்கு மனிதத் தேவைகள் இருப்பதால் மலக்குகளைப் போன்று ஒரே சிந்தனையில் இருக்க முடியாது.
அமல்களின் சிறப்புகள் பக்கம் 904
இவ்வாறெல்லாம் எழுதியவர் எப்படி அந்தப் பெரியாரைப் பற்றி உலக சிந்தனையற்றவர் என்று வர்ணித்தார்?
இந்த நபித்தோழர்களை விட இந்தப் பெரியார் உயர்ந்து விட்டாரா? மலக்காக ஆகி விட்டாரா? சாத்தியமற்ற ஒரு தன்மைக்கு உரிமை கொண்டாடியவரை - பொய்யரை - பெரியார் என்று ஸகரிய்யா சாஹிப் சிறப்புப்படுத்திக் கூறுகிறார் என்றால் இவர் நபித் தோழர்களை விட அந்தப் பெரியார் உயர்ந்தவர் என்று சொல்ல வருகிறாரா?
உலக நினைவே வராத அந்தப் பெரியார் சம்பவத்தைத் தொடர்ந்து ஸகரியா சாஹிப் கூறுவதைப் பார்க்கும் போது குழப்பத்தின் மறுவடிவமாகவோ அவர் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் சந்தேகங்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் முதலாவதாக இந்தச் சம்பவங்களெல்லாம் சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவிப்புத் தொடர்களுடன் கூறப்பட்டுள்ளன. நாம் இவற்றை சந்தேகிப்போமானால் சரித்திரம் முழுவதுமே நம்பிக்கையற்றதாக ஆகிவிடும்.
அமல்களின் சிறப்பு பக்கம் 147
பெரியார் சம்பவத்தை எவ்வளவு தைரியமாக நியாயப்படுத்துகிறார். இதைச் சந்தேகித்தால் சரித்திரம் முழுவதையுமே சந்தேகிக்க வேண்டி வரும்.
சரி இதை சந்தேகிக்காமல் ஏற்றுக் கொண்டால் நாம் மேலே எடுத்துக் காட்டிய அத்தனை செய்திகளும் சந்தேகத்திற்குரியதாகி விடுமே. ஸகரியா சாஹிபையும் சந்தேகிக்க வேண்டி வருமே? அதற்கு என்ன பதில்? இந்தச் சம்பவத்தை அவரே சந்தேகித்துத் தானே இது மலக்ககளின் தன்மை என்கிறார். அப்படியானால் சரித்தரம் முழுவதையும் சந்தேகித்தவர் ஸகரியா சாஹிப் தானே.
இது அதிகமான அறிவிப்புத் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளதாம். இது ஆதாரப்பூர்வமான சம்பவமாம். பூச்சுற்றுகிறார் ஸகரியா ஸாஹிப்.
இந்தப் பெரியார் யார் என்ற விபரம் இல்லை. அவர் வாழ்ந்த ஆண்டு இல்லை. அவர் பிறந்த வளர்ந்த மரணித்த ஊர் கூறப்படவில்லை. அவரது திருநாமமும் இல்லை. அது ஆதாரப்பூர்வமானதாம். ஆதாரப்பூர்வமானது என்பதற்கே இலக்கணம் தெரியாதவர்.
அவரது ஆதரவாளர்களாவது அந்த ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர்களை வெளியிடுவார்களா?
பக்கங்களை நிரப்ப வேண்டும். தலையணை அளவுக்கு பெரிய புத்தகமாக வர வேண்டும். எழுத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதையோ குழப்பமாக இருப்பதையோ பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் ஸகரியா சாஹிபுக்கு நிச்சயம் முதலிடம் உண்டு.
ஸகரியா ஸாஹிப் பக்தர்களிடம் நாம் கேட்பது ஒன்று தான். 147 ஆம் பக்கத்தில் அவர் செய்யும் போதனை சரியா. அல்லது 904 ஆம் பக்கத்தில் செய்யும் போதனை சரியா? இதை மட்டும் அவர்கள் விளக்கட்டும்.
No comments:
Post a Comment