உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?
தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய வேண்டும் என்ற சட்டம் தொழுகைக்கு மட்டும் உரியது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 5:6)
உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : புகாரி (135,), முஸ்லிம் (330), திர்மிதீ (71), அபூதாவூத் (55), அஹ்மத் (7732)
ஆயினும் கட்டாயம் என்ற அடிப்படையில் இல்லாமல் பல காரியங்களுக்கு உளூ விரும்பத்தக்கதாக மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
படுக்கைக்குச் செல்லும் போது உளூவுடன் இருப்பது விரும்பத்தக்கது. பார்க்க புகாரி 247, 6311,
குளிப்பு கடமையாகி அதாவது இல்லறத்தில் ஈடுபட்ட பின் உறங்கினால் உளூ செய்து விட்டு உறங்குவது சுன்னதாகும். பார்க்க புகாரி 286, 267, 288, 289, 290
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு முன் உளூ செய்வது நபிவழியாகும். பார்க்க புகாரி 248, 249, 260, 273, 281
மாதவிடாய் நின்று குளிக்கும் போது உளூச் செய்வது சுன்னத்தாகும். பார்க்க புகாரி 315,
உளூ இருந்தாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்வது சுன்னத்தாகும். பார்க்க புகாரி 214
ஒரு தடவை உடலுறவு கொண்ட பின் மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினால் அதற்காக உளூச் செய்வது சிறந்தது. பார்க்க முஸ்லிம் 518
குளிப்பு கடமையான நிலையில் உண்ணவோ பருகவோ விரும்பினால் உளுச் செய்வது நல்லது. பார்க்க முஸ்லிம் 512, 513
13.12.2010. 07:25
No comments:
Post a Comment