வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்
நவம்பர் 1994 அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம்.
ஒருவரை விசாராணையின்றி எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். உச்ச நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதி மன்றங்களில் இது பற்றி மேல்முறையீடு செய்ய முடியாது. என்ற ஜனநாயகத்துக்கு எதிரான கொடுமையான சட்டம் கடந்த சில ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவில் அமுல் படுத்தப்பட்டடு வருகிறது.
பயங்கரவாத மற்றும் பிரிவினைவாதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (தடா) என்று கூறப்படும் இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் குற்றம் செய்யாவிட்டாலும் பல ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தடுத்து நிறுத்த இந்தச் சட்டம் அவசியமானது தான் என்று அரசுத் தரப்பில் காரணம் கூறப்படுகின்றது.
சாதாரணச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தும் காவல் துறையினராலும் அரசியல் வாதிகளாலும் தான் மக்கள் பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் பலியாகி வருகிறார்கள். அவர்களுக்கு நீதி மறுக்கப்படுவது தான் இந்த நிலைக்கு அவர்களைத் தள்ளி விடுகின்றது என்ற அடிப்படைக் காரணத்தை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இருக்கின்ற சட்டங்களைக் கொண்டே கொலை, கொள்ளை கற்பழிப்புகளில் ஈடுபடும் காவல் துறையினரின் கையில் இந்தக் கொடுமையான அதிகாரம் வழங்கப்பட்டால் என்னவாகும்?
எதிர்க்கட்சியினர், சிறுபான்மை மக்கள், மற்றும் தவறுகளைக் தட்டிக் கேட்போர் ஆகியோரைப் பழிவாங்கத் தான் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும். பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தடா வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சதவீதத்துக்கு குறைவானவர்களே தண்டனை பெறுகிறார்கள் என்று ஓய்வு பெற்ற நீதிபதி எச்.சுரேஷ் கூறுகிறார். (தினமணி 25.06.1994)
இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டுப் பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளானோரில் நூற்றுக்கு 99 பேர் குற்றமற்றவர்கள் என்று இறுதித் தீர்ப்பின் போது விடுவிக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் நீதிபதியே கூறுகிறார்.
இந்தச் சட்டத்தின் படி கைது செய்யத் தேவையில்லாத 99 சதவீதம் பேர் அநியாயமாகப் பல ஆண்டுகள் சிறையில் வாடியுள்ளனர். இது உலகத்தில் எங்குமே காண முடியாத மிகப் பெரிய அக்கிரமம்.
ஆட்சியாளர்களுக்கும் காவல் துறைக்கும் பிடிக்காத அப்பாவிகளை ஒடுக்கத் தான் இந்தக் கொடிய சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது எனும் அடிப்படையில் சட்டம் வகுக்கப்பட்டதாகக் கூறும் நாட்டில் 99 சதவீதம் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் . இது இந்த நாட்டுக்கே அவமானம்.
இந்தக் கொடிய சட்டம் முஸ்லிம்கள் மீதே குறிவைத்துப் பாய்கிறது என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் திரு.ஜஃபர் ஷரீப் இந்தச் சட்டம் முஸ்லிம்கள் மீதே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது என்று குட்டை உடைத்திருக்கிறார்.
இஸ்லாமியப் பற்றுள்ள ஒருவர் அவ்வாறு கூறினால் மிகைப் படுத்திக் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம் . பள்ளிவாசலை இடித்த போதும் அதற்குக் காரணமான காங்கிரஸைத் தாங்கிப் பிடித்தவர் .பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் சமுதாய நலனைப் பின்னுக்கு தள்ளியவர் .அதே காரணத்துக்காக கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்திவருபவர் ஜஃபர் ஷரீப் . காங்கிரஸ் அரசில் அங்கம் வகிப்பவர். அவரே இவ்வாறு கூறினால் நிலைமை அவர் கூறுவதை விட மிக மோசமாகவே இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
முன்னாள் நீதிபதி சுரேஷ் இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
சில மாநிலங்களில் வகுப்புக் கலவரங்களின் போது ஒருவகுப்புக்கு ஆதரவாகவும் மற்றொரு வகுப்புக்கு எதிராகவும் (இந்தச் சட்டம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்தச் சட்டம் இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதை விட அதிகமான அளவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பம்பாயில் கலவரங்கள் நடந்த போதும் இதே நிலைதான் (தினமணி 25.06.94)
இந்தக் கலவரங்களின் போது முஸ்லிம்கள் தாம் பெருமளவு பலியானார்கள். அவர்களின் உடைமைகள் தாம் பெருமளவு சூறையாடப்பட்டன. அவர்களின் கற்பு தான் பெருமளவு அழிக்கப்பட்டது . அவர்களுக்கெதிராகத் தான் பயங்கரவாதம் தலை விரித்தாடியது. இந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அவர்கள் மீதே பாய்கிறது என்றால் என்ன காரணம்? நரசிம்மராவ் பழைய ஆர்.எஸ்எஸ் காரராக இருப்பது தான் காரணம்.
பயங்கரவாதத்தில் ஈடுபடாவிட்டாலும் அல்லது பயங்கரவாதத்துக்கு பலியானாலும் நம் மீது தான் இந்தச் சட்டம் பாய்கிறது. எதுவும் செய்யாமல் உள்ளே போய்க் கிடப்பதற்கு எதையாவது செய்து விட்டு உள்ளே போவோம் என்ற எண்ணத்தை சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகத் தான் ராவ் அரசு இப்படி நடக்கிறதோ என்னவோ?
தமிழ்நாடு அமைதிப் பூங்கா (?) மட்டும் என்ன வாழ்கிறது. இங்கேயும் இதே நிலை தான்.
ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்ததைக் காரணம் காட்டி, காயல்பட்டினத்தில் நடந்த கலவரத்தைக் காரணம் காட்டி, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்று காரணம் காட்டி அந்தச் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளப்பட்டவர்கள் முஸ்லிம்கள் தாம். இந்தச் சட்டத்தின் கீழ் ஏராளமான தமிழ் முஸ்லிம்கள் சிறையில் வாடுகின்றனர்.
ஏ.கே.ஏ அப்துஸ் ஸமது தமது மானத்தையும் மரியாதையையும் சமுதாய நலனையும் மலிவான விலைபேசி ஜெயலலிதாவிடம் விற்றதை நாம் அறிவோம். முஸ்லிம்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்குவதாக முதல்வரிடம் உத்தரவாதம் பெற்று விட்டேன் என்று பேட்டியளிப்பதையும் நாம் அறிவோம். உத்தரவாதம் என்பதற்கு என்ன பொருள் என்பது மூன்றாவது நாளே தெரிந்து விட்டது.
ஆம் இந்த வியாபாரம் முடிந்த மூன்றாம் நாள் அப்துஸ்ஸமது கட்சியைத் சேர்ந்த அக்கட்சியின் சிதம்பரனார் மாவட்டச் செயலாளர் காயல் மஹ்பூப் என்றோ நடந்த காயல் பட்டினம் கலவரத்தைக் காரணம் காட்டி குண்டர் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்படுகிறார்.
இந்தச் சட்டத்தில் இன்னும் பலரை உள்ளே தள்ளுவதற்குத் தான் பேரம் நடந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
முஸ்லீம் லீக் மலிவான தள்ளுபடி விலைக்கு விற்கப்பட்ட நிலையிலேயே அக்கட்சியின் முக்கியப் பிரமுகருக்கு இந்த நிலை என்றால் அதற்கு முன் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்க.
யாருக்கோ வந்த விருந்து என்று இனியும் இருந்தால் எல்லா முஸ்லிம்களும் சிறையில் தான் இருக்க வேண்டி வரும்.
சிறையில் வாடுவோருக்குச் சட்ட உதவிகள் செய்யும் கடமைûயும் உச்ச நீதிமன்றம் வரை சென்று அவர்களை விடுவிக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது என்பதை இந்தச் சமுதாயம் உணர்ந்து கொண்டால் சரி.
ஒவ்வொரு பகுதியிலும் தடாமற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களின் பெயர், அவர்களது தந்தையின் ,பெயர், முகவரி, குடும்பநிலை, கைது செய்யப்பட்ட நாள் ஆகிய விபரங்களைச் சிரமம் பாராது திரட்டி உடன் அனுப்புக. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய இந்த விபரங்கள் உடனடியாகத் தேவை.
குறிப்பு: இன்றைக்கு இது போல் யாரும் எழுத முடியும். ஆனால் 1995ல் நாம் தமுமுகவை துவங்குவதற்கு முன்பே தடாவுக்கு எதிராக நாம் அழுத்தமாக நம் கருத்தைப் பதிவு செய்துள்ளதையும், சிறைவாசிகள் பற்றி பேசினாலே தடா என்ற நிலை இருந்த போது சிறைப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு நாம் பகிரங்க அறிவிப்பு செய்துள்ளதையும் கவனிக்க!
No comments:
Post a Comment