பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, December 24, 2010

சொத்தை எவ்வாறு பிரிப்பது??

சொத்தை எவ்வாறு பிரிப்பது??

என் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். என் தந்தையின் தாயும் உள்ளார். முதல் மனைவிக்கு ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இரண்டாம் மனைவிக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கின்றது. இவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. என் தந்தையின் சொத்தை இவர்களுக்கு எவ்வாறு பங்கு வைப்பது?
 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.
அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.
அல்குர்ஆன் (4 : 11)
இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.
உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு.
அல்குர்ஆன் (4 : 12)
மீதமுள்ள சொத்துக்கள் மகனுக்கு இரண்டு பங்கு மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.
"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
அல்குர்ஆன் (4 : 11)
எனவே தாய்க்கு ஆறில் ஒரு பாகமும் இரண்டு மனைவிகளுக்கும் சேர்த்து எட்டில் ஒருபாகமும் உண்டு. இப்போது 6ம் 8ம் மீதமின்றி வகுபடும் பொதுவான ஒரு எண்ணை நாம் தேர்வு செய்ய வேண்டும். அதாவது 24 என்ற எண்ணால் 6ம் 8ம் மீதமின்றி வகுபடும் என்பதால் மொத்த சொத்தை 24 பங்குகளாக வைத்துக் கொள்வோம்.
தாய்க்கு ஆறில் ஒன்று என்ற கணக்கில் பார்த்தால் 24 பங்குகளில் 4 பங்குகள் தாய்க்கு உண்டு.
இரண்டு மனைவிமார்களுக்கும் எட்டில் ஒன்று என்ற கணக்கில் பார்த்தால் 24 பங்குகளில் 3 பங்குகள் கிடைக்கும்.
இந்த மூன்று பங்குகளை சமஅளவில் பாதியாக இரண்டு மனைவிமார்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்.
இப்போது மொத்தம் உள்ள 24 பங்குகளில் தாய்க்கும் மனைவிமார்களுக்கும் சேர்த்து 7 பங்குகள் தரப்பட்டுவிட்டதால் தற்போது 17 பங்குகள் எஞ்சியுள்ளன. இந்த 17 பங்குகளை எஞ்சியுள்ள சொத்தாக வைத்துக் கொள்வோம்.
இறந்தவருக்கு மொத்தம் மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். எனவே ஒரு ஆணை இரண்டு பெண்ணாகக் கணக்கிட்டால் எஞ்சியுள்ள சொத்தை 5 பங்காக வைத்து ஆணுக்கு இரண்டு பங்குகளையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பங்கு வீதம் 3 பங்குகளையும் கொடுக்க வேண்டும்.
17 பங்கை ஐந்து பாகமாகப் பிரிக்க முடியாது என்பதால் மொத்த பங்கை 24 ஆக ஆக்காமல் 24*5=120 பங்குகளாக வைத்தால் பங்கு வைப்பது எளிதாகும்
மொத்த சொத்தை 120 பங்காக வைத்து அதில் எட்டில் ஒரு பங்கு 15 ஆகும். இது இரு மனைவிகளுக்கும் உரியது
120 ல் ஆறில் ஒன்று 20 ஆகும் இது தாய்க்கு உரியதாகும்
மீதி 85 பங்குகளில் ஆணுக்கு 34 பங்கும் பெண்களுக்கு தலா 17 வீதம் 51 கொடுத்தால் கணக்கு சரியாகி விடும்.

No comments:

Post a Comment