பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, December 23, 2010

ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம்


ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம்
 காலம் சென்ற  ரஹ்மத் எனும் மாத இதழின் ஆசிரியரும் அன்றைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத்தலைவருமான கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்களுடன் நாம் நடத்திய எழுத்துப் போரை ஆரம்ப கால கொள்கைவாதிகள் மறந்திருக்க மாட்டார்கள். அவரது கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே தவ்ஹீத் இயக்கம் இருப்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியக் காரணமாக இருந்தது.

மத்ஹபை எதிர்த்து நாம் பிரச்சாரம் செய்வதைக் கண்டு  கொந்தளித்த கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்கள் தமது ரஹ்மத் இதழில் நமக்கு அளித்த பதில் தான் மக்களை விழிப்படையச் செய்தது. உதாரணமாக அபூ ஹனீபா இமாமின் பெயரால் உருவாக்கப்பட்டது ஹனபி மத்ஹப். ஆனால் அவர் எழுதிய எந்த நூலும் உலகில் இல்லை. அப்படியானால் ஹனபி மத்ஹபுக்கும் அபூஹனீபா இமாமுக்கும் என்ன சம்மந்தம் என்று நாம் கேட்ட போது கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்கள் அளித்த பதில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அபூஹனீபா அவர்கள் ஏராளமான நூல்கள் எழுதினார்கள். ஆனால் அவற்றை எதிரிகள் எரித்து விட்டனர். ஆகவே இப்போது அபூ ஹனீபா இமாமின் நூல் உலகில் இல்லை என்று அவர் பதில் அளித்த போது தான் அபூஹனீபாவுக்கும் ஹனபி மத்ஹபுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை மக்கள் விளங்கிக் கொண்டனர்.
ஆதம் அலை அவர்கள் முதன் முதலில் ஜவ்வரிசி பயிரிட்டார்கள் என்று அவர் எழுதிய போது ஜவ்வரிசி பயிரிடும் பொருளா? தயாரிக்கப்படும் பொருளா என்று நாம் எழுப்பிய கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்தது. அது போல் அவரை நோக்கி நேயர் ஒருவர் எழுதிய கடிதத்தை அல்ஜன்னத் இதழில் நாம் வெளியிடோம். அதில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பக் கட்டத்தில் எவ்வாறு வீரியமாக இருந்தது என்ப்தை அறிந்து கொள்ள உதவும் என்பதால அதை இப்போது வெளியிடுகிறோம்.
 
 பெருமதிப்பிற்குரிய  ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .
ஒரு மாத இதழ் உங்ளுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தையும் அதற்கு தாங்கள் அளித்துள்ள பதிலையும் கண்டேன்.
எனக்குள்ள சில சந்தேகங்கள் பற்றியும் பகிரங்கமாக உங்களுக்குக் கடிதம் எழுதினால் முறையான விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த மடல் வரைகிறேன். நான் இஸ்லாமிய மாத இதழ்கள் அனைத்தையும் படித்து அவற்றில்  நல்லதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
நீங்கள் அளித்துள்ள பதிலில் எனக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றை நீஙகள் பகிரங்கமாகவே தீர்த்து வைத்தால் சமுதாயத்தில் நல்ல பயன் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஜமாஅத்துல் உலமா சபையினரின் கருத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு நீஙகள் அளித்துள்ள பதிலையும் அதில் எனக்கு எழும் ஐயங்களையும் இந்தக் கடிதத்தில் நான் வரிசைப்படுத்தி உள்ளேன்.
சந்தேகம்-1
அரபு மொழியில் இலக்கணம், இலக்கியம், அணி இலக்கணம், கவியாக்கும் முறை இவையெல்லாம் தெரியாத காரணத்தால் அவர்கள் (தவ்ஹீத்வாதிகள்) புர்தா ஷரீப் மவ்லிது கிதாபுகளிலும் கூறப்பட்டுள்ள கவிதைகளுக்கு அர்த்தம் செய்யத் தெரியாது அனர்த்தப்படுத்திக் கொண்டிக்கின்றார்கள்.
 என்று நீங்கள் உங்கள் எதிராளிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் இரு சாராரில் யாருடைய அரபு மொழி அறிவு அதிகம் என்ற பிரச்சனை பற்றி நான் ஆராய விரும்பவில்லை . வருமானத்தைத் தருகின்ற துறையாக மவ்லிது இருப்பதால் தான் அதற்கு முதலிடம் தந்து வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள் என்று உங்கள் எதிராளிரகள் கூறுவதைப் பற்றியும் நான் அலச விரும்பவில்லை.
நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் மவ்லிதுக்குத் தப்பான அர்த்தத்தைச் செய்து கொண்டு மவ்லிதை மறுப்பதாக நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஏன் ஒரு ஆதாரத்தையும் காட்டாமல் விட்டுவிட்டீர்கள்? எந்தெந்த வரிகளுக்கு அவர்கள் தப்பர்த்தம் செய்து விட்டார்கள்? அதன் உண்மை அர்த்தம் என்ன? என்ற விபரங்களைத்  தந்திருந்தால் என் போன்றவர்கள் தெளிவடையலாமே?
ஒரு ஆதாரமும் காட்டாமல் உங்கள் எதிராளிகள் தப்பர்த்தம் செய்து விட்டார்கள் என்பதை நம்புவது சிரமமாக இருக்கிறதே? விரிவாக அவர்கள் செய்துள்ள தப்பர்த்தங்களைப் பட்டியல் போட்டு அடையாளம் காட்டுவது உங்கள் கடமை அல்லவா? அதைச் செய்வீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
சந்தேகம்-2
அரபு நாடுகளில் ஊதியம் பெற்று அந்த ஊதியத்திற்குத் தன் கடமை நிறைவேற்றுவதற்காக அவர்களில் சிலர் கூறும் தப்பர்த்தங்களை இவர்கள் தமிழகத்திலும் பரப்ப முயலுகிறார்கள் என்று உங்கள் எதிராளிகள் மீது இரண்டாம் குற்றச் சாட்டைச் சுமத்தியுள்ளீர்கள்.
அரபு நாடுகளில் ஊதியம் பெறுகிறார்களா? இல்லையா என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை. அரபு நாடுகளில் ஊதியம் வாங்குவதாக வைத்துக் கொண்டாலும் நீங்கள் தமிழ் நாட்டில் ஊதியம் பெறாமலா சேவை செய்கிறீர்கள் என்றும் நான் கேட்க மாட்டேன். கூட்டங்களில் பேசுவதற்கு 100, 500 என்று கட்டணம் பேசாமலா மார்க்கத்தைச் சொல்கிறீர்கள் என்றெல்லாம் கேட்க நான் விரும்பவில்லை.
நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் சொந்தமாக மவ்லிதுக்குத் தப்பர்த்தம் செய்யவில்லை. அரபு நாட்டு அறிஞர்கள் சிலர் கூறும் அர்த்தத்தையே கூறுகிறார்கள் என்று இதன் மூலம் ஒப்புக் கொள்கிறீர்கள்.
இந்தக் குற்றச் சாட்டு முதல் குற்றச் சாட்டை முற்றாக மறுக்கிறதே அது ஏன்? இது தான் என் கேள்வி.
உங்கள் எதிராளிக்கு அரபு மொழி ஞானம் இல்லாமல் தப்பர்த்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று முதல் சந்தேகத்தில் தெரிவித்துள்ளீர்கள். அவர்களுக்குத் தான் அரபு மொழி ஞானம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாலும் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு அதில் புலமையும் திறமையும் கொண்ட அரபு நாட்டு அறிஞர்களை விட நீங்களோ உங்கள் எதிராளிகளோ அந்த மொழி பற்றி அதிகம் அறிந்திருக்க முடியாது என்பது என் எண்ணம்.
அரபு நாட்டு அறிஞர்கள் கூறும் அர்த்தத்தை நாலு வார்த்தை அரபியில் பேச முடியாத தமிழ்நாட்டு அறிஞர்கள் தப்பு என்று கூறுவது சரியாகத் தெரியவில்லை. உங்கள் எதிராளிகளோ அரபு நாட்டு அறிஞர்களின் கூற்றைத் தான் எடுத்துச் சொல்வதாக நீங்கள் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். அப்படியே அரபு நாட்டு அறிஞர் பெருமக்களும் உங்கள் எதிராளியான உலமாக்களும் அரபு மொழிக்குச் சரியான அர்த்தம் தரும் அளவுக்கு ஞானம் இல்லாதவர்கள் என்று உரை கல்லில் உரசிப் பார்த்தால் உங்கள் அர்த்தத்தை விட உங்கள் எதிராளிகள் அர்த்தம் செய்வது தானே சரியாக இருக்க முடியும். இதைக் கொஞ்சம் விளக்குவீர்களா?
சந்தேகம்-3
இதற்குரிய விளக்கங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச் சொல்லியும் எடுத்து விளக்கியும் தங்களின் அறியாமைமையை அறியாதிருக்கும் அவர்கள் மீண்டும் மீண்டும் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடுத்தக் குற்றச் சாட்டை எழுதியுள்ளீர்கள்.
சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்குரிய விளக்கங்களை எடுத்துச் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் என்றால் யார்? யார்? என்பதை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே? அதைத் தான் குறிப்பிடாவிட்டாலும் அவர்களுக்கு எடுத்து விளக்கிய விளக்கங்கள் எவை? எப்போது விளக்கினீர்கள்? என்ற விபரங்களை என் போன்றவர்கள் அறிந்து கொள்ள பகிரங்கப்படுத்தலாமே? குழம்பி நிற்பவர்கள் தெளிவு அடையலாமே செய்வீர்களா?
சந்தேகம் -4
 திருக்குர்ஆன் ஆயத்துக்களுக்கு முன் பின் ஆயத்துக்களின் தொடரை விட்டுத் தனிமைப்படுத்தி திருக்குர்ஆன் விரிவுரையாளர்களான ஸஹாபாக்கள் முன்னோர்களால் அங்கீகரிக்கப்பட்ட விளக்கங்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை கூறும் இவர்கள் தாங்கள் தான் திருக்குர்ஆனுக்கு வாரிசுகளைப் போன்று பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்று எழுதியுள்ளீர்கள்.
திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு நீங்கள் தான் முன் பின் தொடரை விட்டுவிட்டு அர்த்தம் செய்வதாக உங்கள் எதிராளிகள் கூறுகிறார்கள்.
உதாரணத்திற்கு 4;59 வசனத்தைப் பாதியோடு நிறுத்திக் கொள்வதாக அவர்கள் குறறம் சுமத்துகிறார்கள்.
ஸஹாபாக்களின் விரிவுரைகளை விட்டுவிட்டு பிற்காலத்தில் வந்தவர்களிடன் கருத்துக்களுக்கு நீங்கள் தான் முக்கியத்துவம் அளித்து விட்டீர்கள் என்று உங்கள் எதிராளிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.
 உதாரணமாக நன்டு சாப்பிடலாம் என்ற விஷயத்தில் ஸஹாபாக்களின் கருத்தை விட்டுவிட்டு பின்னால் வந்தவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று கூறுகிறார்கள். அது பற்றி நான் சந்தேகம் தெரிவிக்க விரும்பவில்லை.
 நான் கேட்க விரும்புவது என்னவென்றால் உங்கள் எதிராளிகள் தங்கள் கூற்றுக்கு ஆதாரங்கள் எடுத்து வைத்தது போல் நீங்கள் உதாரணத்திற்கு ஒன்று கூட கூறவில்லையே அது ஏன்? மற்ற குற்றச் சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கூறாதது போல் இதற்கும் கூறவில்லையே? என் போன்றவர்களுக்கு இதில் சந்தேகம் ஏற்படுகிறதே தீர்த்து வைப்பீர்களா?
சந்தேகம் -5
எனது வழிமுறையையும் எனது குலபாக்களின் வழி முறைகளையும் இறுக்கப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை மறுத்து வருவதாக உங்கள் எதிராளிகள் மீது குறறம் சுமத்தியுள்ளீர்கள்.
 நபிமொழியை மறுக்கக் கூடாது என்று தான் உங்கள் எதிராளிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த நபிமொழியை எங்கே எப்போது மறுத்தார்கள் என்று விபரம் கூறினால் குழம்பிக்கிடக்கும் மக்கள் தெளிவு அடைவார்கள் அல்லவா? அதைச் செய்வீர்களா?
சந்தேகம் -6
எனது தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர் வழி பெறுவீர்கள் என்று ஹதீஸை இருட்டடிப்புச் செய்து...........
என்று குற்றம் சுமத்தியுள்ளீர்கள் உங்கள் எதிராளிகளோ அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்கிறார்களே இதன் உண்மை என்ன என்பதைத் தெளிவாக்கலாம் அல்லவா?
(ஆசிரியர் குறிப்பு: இந்த ஹதீஸ் எவ்வாறு இட்டுக் கட்டப்பட்டது  என்பது பற்றி தனிக் கட்டுரை இந்த இதழில் பிரசுரமாகி உள்ளது)
அது இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க
 சந்தேகம் -7
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சரித்திரம் உலக மக்களுக்குத் தெரிந்துவிட்டால் ததங்களின் தகிடு தத்தங்கள் வெளியாகிவிடும் என்பதற்காக மீலாது விழாக்களைப் புறக்கணித்து.........................
என்று உங்கள் எதிராளிகளின் செயலுக்குக் காரணம் கற்பிக்கிறீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் கூறுவதை நம்புவதற்கு எவருக்கும் சிரமமாகவே இருக்கும். மற்ற எந்தக் கூட்டங்களை விடவும் உங்கள் எதிராளிகள் நடத்தும் கூட்டங்களில் தான் நபி ஸல் அவர்களின் வரலாறு அதிகமாகக் கூறப்படுகிறது. அவர்களின் பொன் மொழிகள் அதிகமாகக் கூறப்படுவதும் உங்கள் எதிராளிகள் கூட்டங்களில் தான். உங்கள் அணியினரின் கூட்டங்களில் தனி நபர் துதியும் பெரியார்களின் அற்புதங்களும் தானே கூறப்படுகிறது. இப்படி ஒரு அவதூரை உங்களைப் போன்றவர்கள் கூறலாமா?
நபித் தோழர்களான ஸஹாபாக்களோ இமாம்களோ யாருடைய பிறந்தநாள் விழாவையும் கொண்டாடவில்லை என்ற காரணத்தினால் தானே அவர்கள் மீலாதை மறுப்பதாகக் கூறுகிறார்கள். நபித்தோழர்களோ இமாம்களோ மீலாது விழாக் கொண்டாட சொல்லி இருந்தால் அதை நீங்கள் தெளிவுபடுத்தலாம் அல்லவா? அதன் மூலம் உங்கள் எதிராளிகளை அடையாளம் காட்டலாம் அல்லவா?
 சந்தேகம் -8
போலீஸ் பாராவுடன் கொள்கைப் பிரச்சாரம் செய்யும் இவர்கள்.............
என்று அடுத்த குற்றச் சாட்டை எடுத்து வீசி இருக்கிறீர்கள். அந்த நிலையை ஏற்படுத்தியது யார்? கொல்லுங்கள் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் அளவுக்கு உங்கள் அணியினர் ரவுடித்தனமான பிரச்சாரம் செய்வது தானே இதற்குக் காரணம். உங்கள் எதிரணியினரின் பொறுப்பில் உள்ள பள்ளிவாசலையே அடித்து நொறுக்கித் தள்ளுங்கள் என்று கூட மக்கள் மத்தியில் பேசப்பட்டதே? கருத்தை கருத்தால் சந்திப்பதை விடுத்து வன்முறையைத் தூண்டிவிட்டுவிட்டு இந்த நிலையைத் தோற்றுவித்துவிட்டு குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? .
சந்தேகம் -9
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பேசித் தீர்த்து முடிவாக அறிவிக்கப்பட்ட தராவீஹ் போன்ற பிரச்சனைகளை மீண்டும் கிளப்பி.............
என்கிறீர்கள் பேசித்தீர்த்து முடிவு அறிவித்தவர் யார்? எப்போது எங்கே பேசித் தீர்க்கப்பட்டது? யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற விபரங்களை எல்லாம் இது வரை நீங்கள் சொல்லியதாகத் தெரியவில்லையே.
பேசித் தீர்க்கப்பட்டது என்பதை வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும் அதில் அவர்கள் கிளப்புகின்ற சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் கடமை உங்களுக்கு இல்லையா? அவர்கள் தராவீஹ் பற்றி கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே தராவீஹ் 20 ரக்அத்களா? என்று உங்கள் அணியினர் வெளியிட்ட நூலைப்படித்தாலே தராவீஹ் எட்டு ரக்அத்கள் தான் என்று தெளிவாகத் தெரிகின்றதே? அந்த லெட்சணத்தில் தானே உங்கள் மறுப்பு நூல் அமைந்திருக்கிறது.
சந்தேகம் -10
பித்அத்களை உலமாக்கள் கண்டிப்பதாகவும் முறையான பதில்கள் அளித்துள்ளதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்
பித்அத் ஒருபுறம் இருக்கட்டும். பச்சை ஷிர்க் என்று உங்கள் அணி உலாமாக்களில் பலர் உங்கள் அணிச் செயலாளர் ஆகியோர் தீர்ப்பளித்த குத்பிய்யத் என்ற இருட்டு திக்ரை நீங்களே சாட்சாத் நீங்களே தான் ஷிர்க் அல்ல என்று தீர்ப்பி வழங்கினீர்கள். உங்கள் பத்வாவின் ஜெராக்ஸ் காப்பியை நானும் பார்த்திருக்கிறேன். பச்சை ஷிர்க் என்று உங்கள் உலமாக்களில் பலர் தீர்ப்பளித்ததையே நியாயப்படுத்தும் நீங்களா பித்அத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறீர்கள்.?
மவ்லிது பற்றி பல மதரஸாக்கள் கூடாது என்று தீர்ப்பு அளித்தது உங்கள் கைக்குக் கிடைத்த பின்பும் அதையும் நியாயப்படுத்ததும் நீங்களா பித்அத்தை எதிர்ப்பதாகக் கூறுகிறீர்கள்?
(குறிப்பு: ஜ,,தலைவரின் முறையற்ற பதில்களை நாம் விரைவில் வெளியிடுகிறோம்.. ஆசிரியர் 
)
சந்தேகம் -10
மஸ்ஜிதுன் நபியில் தொழக் கூடாது என்று உங்கள் எதிரணியினர் கூறுவதாகக் குற்றம் சுமத்துகிறீர்கள்.
இது அபாண்டம் இல்லையா? வீண் அவதூறு இல்லையா? இதை உங்களால் நிரூபிக்க முடியுமா 
?
சந்தேகம் -11
பிக்ஹஎன்று இன்றைக்குக் கூறப்படுவது குர்ஆனுக்கும் ஹதீஸுக்கு முரணானவைகளே என் ஏற்படுத்தி வருவதாக உங்கள் எதிராளிகள் மீது சாடி இருக்கிறீர்கள்.
அவர்கள் பல பிக்ஹசட்டங்களை எடுத்துக்காட்டி அவை குர்ஆன் ஹதீஸுடன் எப்படி முரண்படுகின்றன என்று பட்டியல் போட்டார்களே? நேரடியாக இது பற்றி விவாதம் செய்யத் தயாரா? என்று சவால் விட்டார்களே இன்று வரை அதை நீங்கள் ஏற்காததன் காரணம் என்ன?
குறைந்த பட்சம் அவர்கள் காட்டிய உங்கள் மஸாலாக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை எழுதியிருக்கலாம் அல்லவா? அதையாவது செய்தீர்களா? இனியாவது செய்வீர்களா 
?
சந்தேகம் -11
 அவர்கள் எழுப்பும் சந்தேகங்கள் அனைத்துக்கும் நேரடியாகவும் பத்திரிக்கையின் மூலமாகவும் பதில் தரப்பட்டன என்கிறீர்கள்.
 இது உண்மைதானா? நேரடியாக யாரிடம் பதில் கூறினீர்கள்? என்ன பதில் கூறினீர்கள்? பத்திரிக்கையில் அவர்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் உண்மையிலேயே பதில் கூறி விட்டீர்களா? எந்தப் பத்திரிக்கையில் ? சொல்வீர்களா? நாங்களும் வாங்கிப் படித்து உண்மையை விளங்கலாம் அல்லவா? ஒரு வேளை வேறு மொழிப் பத்திரிக்கையில் பதில் இருக்கிறீர்களோ என்னவோ?
மொத்தத்தில் உங்கள் பதிலைப் படிக்கும் சாதாரண அறிவு படைத்தவனும் அர்த்தமும் ஆதாரமும் இல்லாத வெற்றுக் குற்றச் சாட்டுகள் என்று புரிந்து கொள்வான் . அந்த நிலையிலேயே உங்கள் பதில் அமைந்துள்ளது 
.
அன்புடன்
அப்துல் அஸீஸ் நாகர் கோவில்  

No comments:

Post a Comment