பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, December 23, 2010

பால்ய விவாகம் கூடுமா


பால்ய விவாகம் கூடுமா
அல்ஜன்னத்தில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய பதில்
கேள்வி
சிறு வயது ஆயிஷா ரலி அவர்களை நபிகள் நாயகம் ஸல அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாமா

ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் குறித்து சில விமர்சனங்களும் உள்ளன.  
அந்த விமர்சனங்களுக்குக் காரணம் இதனால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும், பால்ய விவாகத்தை அனுமதிக்கும் நிலை ஏற்படுமே என்ற தயக்கமும் தான் காரணம்.
இது குறித்த செய்தியை விமர்சனம் செய்யும் அறிஞர்கள் இதை விட மோசமான விமர்சனத்துக்கு உரிய ஹதீஸ்களை எல்லாம் ஆதாரமாக ஏற்றுச் செயல்படுபவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தச் சம்பவம் உண்மை என்பதால் இவர்கள் அஞ்சக்கூடிய நிலை ஏற்படாது. இதை ஆதாரமாகக் கொண்டு ஆறு வயது சிறுமியை நாம் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது.  
இதைப் புரிந்து கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் சில அடிப்படை உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.   இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் இறைவனால் நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இவ்வுண்மையை அறிந்து வைத்துள்ளனர்.  
இறைவனால் கடமையாக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் யாவும் ஒரே நேரத்தில் முழுமையாக நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டதா? என்றால் அவ்வாறு வழங்கப்படவில்லை.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் இறைவனிடத்தில் செய்திகள் வரத் துவங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை 23 வருடங்கள் சிறிது, சிறிதாக இச்சட்டங்கள் அருளப்பட்டன.  
இச்சட்டங்கள் அருளப்படுவதற்கு முன்னால் அந்தச் சமுதாயத்தில் நிலவிய வழக்கப்படியே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்து கொண்டார்கள்.
அக்காவையும், தங்கையையும் ஒரே நேரத்தில் மணந்து கொள்ளும் வழக்கம் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் முஸ்லிம்களில் சிலர் இவ்வழக்கத்தின் படியே மணந்து கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடாது என்று தடை வரும் வரை இந்த நிலை நிலவியது.  
ஆரம்ப காலத்தில் போதைப் பொருட்கள் தடுக்கப்படாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் ஏற்கனவே போதை பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைத் தொடர்ந்தார்கள். போதைப் பொருள் தடை செய்யப்படும் வரை இதே நிலை நிலவியது.  
இது போல திருமணத்தின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் இறைவனால் வழங்கப்படுவதற்கு முன் அன்றைய அரபுச் சமுதாயம் சிறுமிகளைத் திருமணம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்று சட்டம் வருவதற்கு முன்னர் பலரும் இவ்வாறு செய்து வந்தனர்.   இதன் பின்னர் சிறுமிகளை திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் வந்தது. இவ்வாறு சட்டம் வந்த பின் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வது அறவே தடுக்கப்பட்டு விட்டது. 
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.  
(அல்குர்ஆன் 2:228)  
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. 
(அல்குர்ஆன் 4:19)  
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள். 
(அல்குர்ஆன் 4:21)
கண்ணிப்பெண்ணாக இருந்தாலும் விதவையாக இருந்தாலும் அவளின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது நபிமொழி
நூல் : முஸ்லிம் (2545)  
திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் என்றும், பெண்களின் சம்மதம் அவசியம் என்றும் மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் அறிவிக்கின்றன.  
ஒரு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதில் பங்கெடுப்பவர்கள் அது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். சாதக பாதகங்களை உணர்ந்து ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது ஒப்பந்தமாகக் கருதப்படும்.   ஐந்து வயதுச் சிறுவன் தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்தால் எவ்விடத்திலும் அது செல்லாது. உலகில் எந்தச் சட்டத்தின் படியும் அது செல்லாது.  
திருமண வாழ்வு என்பது சொத்தை விட முக்கியமானது. திருமணம் என்றால் என்ன?, அதன் கடமைகள் என்ன?, அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத சிறுமி அது குறித்து எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்?.  
எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வதும், சிறுவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.   இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாம் எனக் கூறுவது தவறாகும்.     
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த மார்க்கத்தைச் சுயமாக கற்பனை செய்து கூறவில்லை; இறைவன் புறத்தில் இருந்து சட்டங்கள் வரும் வரையில் ஊரில் உள்ள வழக்கப்படி தான் நடந்து கொண்டார்கள். இறைவன் புறத்தில் இருந்து மேற்கண்ட கட்டளை வந்த பின்னர் அவர்கள் சிறுமியைத் திரும்ணம் செய்திருந்தால் தான் அது விமர்சனத்துக்கு உரியதாக ஆகும். தனக்கு மட்டும் அனுமதித்துக் கொண்டு மற்றவர்களுக்குத் தடை செய்திருந்தாலும் அது விமர்சனத்துக்கு உரியதாக ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  சிறு வயதுப் பெண்ணை திருமணம் செய்த போது அந்தச் சமுதாயமே இதை அங்கீகரித்து வந்தது என்பதைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.

No comments:

Post a Comment