பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 14, 2010

சூனியத்தால் என்ன செய்ய முடியும்

சூனியத்தால் என்ன செய்ய முடியும்????


என் உறவுக்காரப் பெண் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். முடிச்சுக்களில் ஊதும் பெண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு தேடுமாறு 113 வது அத்தியாயம் கூறுகிறது. 2:102 வசனத்திலும் இரண்டு வானவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது





சூனியம் இருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி ஒரு கலை இருப்பதாகவே குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன.

சூனியம் என்றொரு கலை இருக்கின்றது. அக்கலையில் பொய்யும் பித்தலாட்டமும் மட்டுமே அடங்கியிருக்கும். அக்கலையால் தெளிவில்லாதவர்களை ஏமாற்றுவதைத் தவிர வேறெந்த தீங்கும் செய்ய முடியாது என்றே நம்ப வேண்டும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்விதச் சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் உள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுள்ளவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இது பில்லி சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இதை நாம் காண்பதால் மார்க்க அடிப்படையில் இதற்கு ஆதாரத்தைத் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச்சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்று நாம் ஆராயும் போது மக்களை ஏமாற்றுவதற்காகவும் கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம். உண்மையில் சூனியம் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பதை அறியலாம்.

சூனியம் என்பதற்கு அரபுமொழியில் "ஸிஹ்ர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்ட பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பதற்குப் பித்தலாட்டம், மோசடி, பொய் ஏமாற்றும் தந்திர வித்தை கண்கட்டி வித்தை என்பது தான் பொருள் என்பதைச் சந்தேகமின்றி அறிந்து கொள்ளலாம்.

பொய் சொல்லுவதே சூனியக்காரனின் தன்மை. அவன் கூறுவதும் செய்வதும் பொய்யாகவே இருக்கும் என்று இறை மறுப்பாளர்கள் கருதிவந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآَيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ (23) إِلَى فِرْعَوْنَ وَهَامَانَ وَقَارُونَ فَقَالُوا سَاحِرٌ كَذَّابٌ (24) 40

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். "பெரும் பொய்யரான சூனியக்காரர்'' என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (40 : 24)

وَعَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ(4)38

அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். "இவர் பெரும் பொய்யரான சூனியக்காரர்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.

அல்குர்ஆன் (38 : 4)

சூனியம் என்றால் அது பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்தது என்ற கருத்திலே இந்த வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது

فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ(36)28

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

அல்குர்ஆன் (28 : 36)

هَذِهِ النَّارُ الَّتِي كُنتُمْ بِهَا تُكَذِّبُونَ(14)أَفَسِحْرٌ هَذَا أَمْ أَنْتُمْ لَا تُبْصِرُونَ(15)اصْلَوْهَا فَاصْبِرُوا أَوْ لَا تَصْبِرُوا سَوَاءٌ عَلَيْكُمْ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ(16)52

அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள். நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே. இது சூனியமா? அல்லது நீங்கள் பார்க்காதவர்களா? "இதில் கருகுங்கள்! (இதைச்) சகித்துக் கொள்ளுங்கள்! அல்லது சகிக்க முடியாமல் இருங்கள்! (இரண்டும்) உங்களுக்குச் சமமே. நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கே கூலி கொடுக்கப் படுகின்றீர்கள்'' (எனக் கூறப்படும்).

அல்குர்ஆன் (52 : 13)

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் நரகவாசிகள் இந்த உலகத்தில் வாழும் போது நரகவாழ்வு பொய் என கருதிக் கொண்டிருந்தனர். நரகத்தை அவர்கள் சிஹ்ர் அதாவது சூனியம் என்று கூறி மறுத்துள்ளார்கள். எனவே சிஹ்ர் என்றால் பொய் கற்பனை என்பதே அதன் அர்த்தம்.

கண்கட்டி வித்தை என்ற பொருளிலும் சிஹ்ர் என்ற வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنْ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ(14)لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ(15)15

அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், "எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்'' என்றே கூறுவார்கள்.

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு, தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான். உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும் எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதமாகும்.

கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து, அதைத் தொட்டுப் பார்த்தாலோ அல்லது சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாகவே இருந்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அது தந்திர வித்தை மேஜிக் என்று கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டியது முதல் வகையானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும் ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாதவாறு தந்திரம் செய்கிறார். நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் (சூனியம்) என்ற சொல்லையே பயன்படுத்தினர்.

ஸிஹ்ர் என்பதற்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள். இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார் என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறி நிராகரித்தனர்.

இறைத் தூதர்கள் செய்து காட்டிய அற்புதங்கள்

இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்களுக்கு அற்புதங்களை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவற்றை ஏற்க மறுத்தவர்கள் அதை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறியே மறுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. "இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 7:107

"மக்களை எச்சரிப்பீராக'' என்றும், "நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக'' என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? "இவர் தேர்ந்த சூனியக்காரர்'' (ஸிஹ்ர் செய்பவர்) என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 10:2

5:110, 6:7, 7:116, 10:75, 20:66, 20:69, 21:3, 26:31, 28:36, 28:48, 34:43, 37:14, 38:4, 40:23, 43:30, 46:7, 61:6 ஆகிய வசனங்களிலும் ஸிஹ்ர் என்ற வார்த்தை தந்திரம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூனியத்தை தெளிவாக விவரிக்கும் நிகழ்வு

சூனியம் என்றால் என்ன? சூனியத்தால் அதிகபட்சமாக என்ன செய்ய முடியும்? என்பதைத் தெள்ளத் தெளிவாக மூசா (அலை) அவர்களின் சம்பவம் எடுத்துரைக்கின்றது.

மூசா (அலை) அவர்களின் காலத்தில் சூனியக் கலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருந்தது. இக்கலையில் பாண்டித்துவம் பெற்ற எத்தனையோ பேர் இக்கலையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தச் சமுதாயத்தில் மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியுடன் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதை அற்புதம் என்று எதிரிகள் நம்ப மறுத்தனர். மூசா செய்வது தந்திர வித்தை தான் அதாவது சூனியம் தான் என நம்பினர். ஃபிர்அவ்னுடன் இருந்த சூனியக்காரர்களும் மூசா நம்மைப் போன்ற ஒரு சூனியக்காரர் என்றே நம்பினர்.

எனவே சூனியக் கலையில் மூசா நபியை தங்களால் வென்றுவிட முடியும் என நம்பினர். மூசா (அலை) அவர்களைப் போட்டிக்கு அழைத்தனர். இந்தப் போட்டியில் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த அத்தனை சூனியக்காரர்களும் அழைக்கப்பட்டனர்.

وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ(79)10

"திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

அல்குர்ஆன் (10 : 79)

يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ(112)7

"இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.

அல்குர்ஆன் (7 : 111)

உலத்தில் உள்ள திறமையுள்ள அனைத்து சூனியக்காரர்களும் மூசா (அலை) அவர்களுக்கு எதிராக ஒன்று திரள்கிறார்கள். இவ்வாறு திரண்ட இவர்களால் மூசா (அலை) அவர்களைப் பைத்தியமாக்கவோ அவர்களது கை கால்களை முடக்கவோ முடியவில்லை. மாறாக போலி வித்தையைத் தான் செய்ய முடிந்தது.

قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ(116)7

"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று கேட்டனர். "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர்.

சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். "அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர்.

அல்குர்ஆன் (7 : 115)

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى(66)20

"இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

அல்குர்ஆன் (20 : 66)

சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் பாம்பாக மாற்றிக் காட்டவில்லை. மாறாக சீறுவது போல் ஒரு பொய்யான தோற்றத்தையே ஏற்படுத்தினர். இதைத் தான் பிரம்மாண்டமான சூனியம் என்று அல்லாஹ் வர்ணிக்கிறான்.

இன்றைக்கு இதையெல்லாம் விட பன்மடங்கு விஞ்சும் வகையில் மேஜிக்காரர்கள் வியத்தகு வித்தைகளைச் செய்து வருகின்றனர். எனவே சூனியம் என்பது சாதாரண கண்கட்டி வித்தையாகும் என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அடுத்து 113 ஆவது அத்தியாயத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று கூறப்படுகின்றது. இது சூனியம் செய்யும் பெண்களைக் குறிப்பதாக உங்கள் உறவினர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக சரியான விளக்கத்தை கேட்டுள்ளீர்கள்.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

"முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்'' (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர்.

முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர்.

இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.

இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிட மிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.

"முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்'' என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.

ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)

நாம் நல்லறங்கள் செய்து விடாதவாறு ஷைத்தான் தடைகளை ஏற்படுத்துகிறான். அந்தத் தடைகளைத் தான் இங்கே முடிச்சுக்களில் ஊதுதல் எனப்படுகிறது. அதிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் இறைவன் இவ்வசனத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தருகிறான்.

முடிச்சு என்றவுடன் நூலில் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள குறைபாட்டை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது முடிச்சு என்று தான் கூறினார்கள்.

எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். (திருக்குர்ஆன் 20:26, 27)

நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஹதீஸ்களில் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.

ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 651)

தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண்பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண் பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

2 : 102 ஆவது வசனத்தைப் பற்றி விளக்கம் கேட்டுள்ளீர்கள்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். "நாங்கள் படிப் பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் (2 : 102)

ஹாரூத் மாரூத் வானவர்களா?

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் ஹாரூத் மாரூத் என்பவர்கள் வானவர்கள் என்றும் இந்த வானவர்களே சூனியத்தை கற்றுக் கொடுத்ததாக தவறான நம்பிக்கை மக்களிடம் இருக்கின்றது. முதலில் இந்த நம்பிக்கை சரியானதா? என்று பார்ப்போம்.

அதாவது சூனியத்தை இறைவன் புறத்திலிருந்து மலக்குகள் கற்றுக் கொண்டு அதை அம்மலக்குகள் மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக நம்புகின்றனர்.

ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்பிப்பது, குப்ர் எனும் இறை மறுப்பாகும். இத்தகைய இறை மறுப்பான காரியங்களை மலக்குகள் ஒரு போதும் செய்திருக்க முடியாது.

இந்த வசனம் சூனியம் தொடர்பாக அன்று நிலவிய பல தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கிறது.

1 ஸுலைமான் நபியுடன் இதைத் தொடர்புபடுத்துதல்

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த யூத குருமார்கள் சூனியத்தின் மூலமும், பிற தவறான வழிகளிலும் பொருளீட்டிக் கொண்டிருந்தனர். மேலும், இதை நியாயப்படுத்த பொய்யான வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

"இந்தக் கலை தங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதன்று; மாறாக, சுலைமான் நபி அவர்கள் வழியாகவே எங்களை வந்தடைந்துள்ளது. எனவே இந்தக் கலையில் ஈடுபடுவதும், இதன் மூலம் பொருளீட்டுவதும் தவறானதல்ல'' என்பது அவர்களின் முதல் வாதம்.

"சுலைமான் நிராகரிப்பவராக இருந்ததில்லை. சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்களாக இருந்தனர்'' என்று அவர்களின் வாதம் இங்கே மறுக்கப்படுகிறது.

சூனியம் என்பது இறை மறுப்பாகும். இதற்கும் சுலைமான் நபிக்கும் சம்மந்தம் இல்லை. ஸுலைமான் நபி காஃபிராக இருந்தால் தான் இதைக் கற்றுக் கொடுத்திருக்க முடியும். அவர் காஃபிர் அல்ல. மாறாக ஷைத்தான்கள் தான் இதைக் கற்றுக் கொடுத்தனர் என்பது இதன் கருத்து.

2-வானவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுப்பார்களா

அடுத்து இந்தக் கலையை ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய இரு வானவர்கள் வழியாகவே நாங்கள் கற்றிருக்கிறோம் என்றும் கூறி அன்றைய யூதர்கள் மக்களை ஏமாற்றி வந்தனர்.

அதுவும் இவ்வசனத்தில் மறுக்கப்படுகிறது.

"அந்த இரு வானவர்கள் மீது சூனியம் அருளப்படவில்லை'' என்ற வாக்கியத்தின் மூலம் அவர்களின் இந்த வாதமும் மறுக்கப்படுகிறது.

அந்த இரண்டு மலக்குகள் என்பது எப்படி ஜிப்ரீல் மீகாயீலைக் குறிக்கும்? இவ்வசனத்தில் அந்தப் பெயர்களைக் காணவில்லையே? இதற்குப் பின் ஹாரூத் மாரூத் என்ற பெயர்கள் தானே இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளன? என்று பல கேள்விகள் பிறக்கின்றன.

இவ்வசனத்தில் மலகைனி எனக் கூறாமல் அல்மலகைனி என்று கூறப்படுகிறது. மலகைனி என்றால் இரு வானவர்கள் என்பது பொருள். அல்மலகைனி என்றால் அந்த இரு வானவர்கள் என்பது பொருள்.

"அந்த இரு வானவர்கள்' என்று எப்போது கூற முடியும்? முன்னரே கூறப்பட்டிருந்தால் தான் அவ்வாறு கூற முடியும். எனவே அந்த இரு வானவர்கள் என்ற சொல் பின்னால் கூறப்படும் ஹாரூத், மாரூத்தைக் குறிக்காது.

ஐந்து வசனங்களுக்கு முன்னால் கூறப்பட்டுள்ள ஜிப்ரீல் மீகாயீல் ஆகிய இரு வானவர்களையே அந்த இரு வானவர்கள் என்ற சொல் குறிக்கும்.

ஜிப்ரீல், மீகாயீல் என்ற வானவர்களுக்கும், சூனியக் கலைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று இங்கே தெளிவுபடுத்தப்படுகின்றது.

அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.

ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று இவ்வசனம் துவங்குகின்றது.

ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் ஷைத்தான்களே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது தீய மனிதர்களை இங்கே ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றதா?

இதை முதலில் நாம் விளங்க வேண்டும்.

"ஷைத்தான்' என்ற சொல் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்தப்படுவது போலவே, மோசமான மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. (பார்க்க : அல்குர்ஆன் 2:14, 6:112, 114:5,6)

தனியாகப் பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும் (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597) கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்லிம் 4193) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை அகற்றுவதற்கே இறைவன் "ஹாரூத் மாரூத்'' என்கிறான்.

அதாவது இவர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் அவர்கள் ஹாரூத் மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்களாவர் என்று அடையாளம் காட்டுகிறான்.

அரபு மொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை "பத்ல்' என்று அரபு இலக்கணம் கூறும். ஷைத்தான்கள் என்பதன் விளக்கமே ஹாரூத், மாரூத் என்பது.

யூதர்களுக்கு சூனியக் கலையைக் கற்றுத் தந்தது சுலைமான் நபியுமன்று. ஜிப்ரீல், மீகாயீல் என்ற மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற (மனித) ஷைத்தான்களே கற்றுத் தந்தனர் என்பது இது வரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.

தப்ஸீர் கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் "இந்த வசனத்திற்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

குர்துபி அவர்கள் குறிப்பிட்ட இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள்.

சூனியத்தால் ஏற்படும் பாதிப்பு என்ன?

2 : 102 ஆவது வசனத்தில் சூனியக்கலை என ஒன்று இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை நாம் மறுக்கவில்லை. சூனியக்கலை என ஒரு கலை இருப்பதாகவே நாமும் நம்புகிறோம். ஆனால் சூனியத்தால் உடலில் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று கூறுவதற்கு இந்த வசனத்தில் எந்த முகாந்தரமும் இல்லை.

சூனியக்கலையில் ஈடுபட்ட ஹாரூத் மாரூத் ஆகிய இருவரும் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் காரியத்தை கற்றுக் கொடுத்ததாக இவ்வசனம் கூறுகின்றது.

சூனியம் என்றால் பொய்யை உண்மை போல் காட்டும் வித்தை என்று முன்பு விளக்கம் அளித்திருந்தோம். இந்த விளக்கம் இந்த வசனத்திலும் பொருந்திப் போகின்றது.

பேச்சில் சூனியம் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

5146حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ جَاءَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், " பேச்சில் சூனியம் (கவர்ச்சி) உள்ளது'' என்று சொன்னார்கள்.

புகாரி (5146)

கவர்ச்சியாகப் பேசினால் பொய்யைக் கூட உண்மை என்று நம்பவைத்து விடலாம். இதுவும் சூனியக் கலையின் ஒரு அம்சமாகும். கவர்ச்சியான பேச்சின் மூலம் கணவனிடம் மனைவியைப் பற்றி தவறான அப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். இதே போன்று கவர்ச்சியாகப் பேசி மனைவியிடம் கணவனைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். முடிவில் கணவன் மனைவி பிரியும் சூழல் இதனால் ஏற்படும்.

இப்பாவத்தைச் செய்யக்கூடிய பலர் சமுதாயத்தில் இருக்கின்றனர். இவர்கள் எத்தனையோ குடும்பங்களை தங்களது நாவால் பிரித்திருக்கின்றனர். ஷைத்தான் இவ்வாறே கணவன் மனைவியைப் பிரிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற(ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (5419)

எனவே சூனியக்கலை ஒன்று இருக்கின்றது. இக்கலையால் பொய்யை உண்மையாக காண்பிக்கும் வித்தையை மட்டுமே செய்ய முடியும். ஒருவரின் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தவோ உறுப்புக்களை செயலிழக்கச் செய்யவோ இதன் மூலம் முடியாது. பாமரர்களை ஏமாற்றி கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும். .இக்கருத்தையே மேலுள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.

சூனியம் குறித்து முழுமையாக அறிய கீழ்க்காணும் செய்திகளையும் வாசிக்கவும்

பில்லி சூனியம் உண்மையா

ஸிஹ்ர் ஓர் ஆய்வு

சூனியம் என்பது கற்பனையே

நபிகள் நாயகத்துக்கு சூனியமா

ஹாரூத் மாரூத் மலக்குக்ளா

இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்

ஸிஹ்ர் ஓர் விளக்கம்

******************************************************************************************************

No comments:

Post a Comment