தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?
ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லது அவள் தனது தந்தை, மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகளை அரபியில் மஹ்ரம் என்று கூறுவர். ஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளார்; ஆனால் அவளுடன் செல்வதற்குக் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லை என்றால் அவளுக்கு ஹஜ் கடமையில்லை. இது தான் அந்தக் கூடுதல் நிபந்தனையாகும்.
அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இந்தக் கருத்தை நிலைநிறுத்த குர்ஆன், ஹதீஸிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
ஒரு பெண் மஹ்ரம் அல்லது கணவன் இல்லாமல் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். அவர்களும் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
நாம் இப்போது இரு சாராரின் கருத்தையும் அதை நிலைநாட்ட அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் பார்ப்போம்.
முதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள்
ஆண்களைப் போன்று பெண்கள் எந்தத் துணையுமின்றி தன்னந்தனியாக ஹஜ் செய்ய முடியுமா? என்றால் செய்ய முடியாது. ஏனென்றால் துணையின்றி மக்காவுக்குச் செல்ல முடியாது.
ஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ قُلْتُ لِأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ
'திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1086, 1087
ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம்.
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرٍو عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسَافِرْ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ وَلَا يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا وَامْرَأَتِي تُرِيدُ الْحَجَّ فَقَالَ اخْرُجْ مَعَهَا
'ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து 'அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரிடம், 'உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா? அல்லது அழகில்லாதவளா? அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா? அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா? இல்லையா?' என்றெல்லாம் விசாரிக்கவில்லை. உன் மனைவியுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதிலிருந்து ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள்.
இவையே முதல் சாராரின் வாதங்களாகும்.
பெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம்.
(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)
இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது. ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டும் என்றால் ஒரு மஹ்ரமான துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இடவில்லை. இது இரண்டாவது சாராரின் வாதமாகும்.
மஹ்ரமான துணை அல்லது கணவனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களுக்கு இவர்களின் பதில் வருமாறு:
பெண்கள் மஹ்ரமானவருடன் பயணிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் பொதுவான பயணத்தையே குறிக்கின்றன. அந்த ஹதீஸ்களுக்கு 3:97 வசனம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி விடுகின்றது. அதாவது ஹஜ் பயணத்தைத் தவிர மற்ற பயணங்களில் மஹ்ரமானவர் அல்லது கணவர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றனர்.
இதற்குச் சான்றாகப் பின்வரும் ஹதீஸையும் சமர்ப்பிக்கின்றனர்.
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْحَكَمِ أَخْبَرَنَا النَّضْرُ أَخْبَرَنَا إِسْرَائِيلُ أَخْبَرَنَا سَعْدٌ الطَّائِيُّ أَخْبَرَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ بَيْنَا أَنَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَاهُ رَجُلٌ فَشَكَا إِلَيْهِ الْفَاقَةَ ثُمَّ أَتَاهُ آخَرُ فَشَكَا إِلَيْهِ قَطْعَ السَّبِيلِ فَقَالَ يَا عَدِيُّ هَلْ رَأَيْتَ الْحِيرَةَ قُلْتُ لَمْ أَرَهَا وَقَدْ أُنْبِئْتُ عَنْهَا قَالَ فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنْ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ أَحَدًا إِلَّا اللَّهَ قُلْتُ فِيمَا بَيْنِي وَبَيْنَ نَفْسِي فَأَيْنَ دُعَّارُ طَيِّئٍ الَّذِينَ قَدْ سَعَّرُوا الْبِلَادَ وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتُفْتَحَنَّ كُنُوزُ كِسْرَى قُلْتُ كِسْرَى بْنِ هُرْمُزَ قَالَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الرَّجُلَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ يَطْلُبُ مَنْ يَقْبَلُهُ مِنْهُ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهُ مِنْهُ وَلَيَلْقَيَنَّ اللَّهَ أَحَدُكُمْ يَوْمَ يَلْقَاهُ وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ فَلَيَقُولَنَّ لَهُ أَلَمْ أَبْعَثْ إِلَيْكَ رَسُولًا فَيُبَلِّغَكَ فَيَقُولُ بَلَى فَيَقُولُ أَلَمْ أُعْطِكَ مَالًا وَأُفْضِلْ عَلَيْكَ فَيَقُولُ بَلَى فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلَا يَرَى إِلَّا جَهَنَّمَ وَيَنْظُرُ عَنْ يَسَارِهِ فَلَا يَرَى إِلَّا جَهَنَّمَ قَالَ عَدِيٌّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقَّةِ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ شِقَّةَ تَمْرَةٍ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ قَالَ عَدِيٌّ فَرَأَيْتُ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنْ الْحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ إِلَّا اللَّهَ وَكُنْتُ فِيمَنْ افْتَتَحَ كُنُوزَ كِسْرَى بْنِ هُرْمُزَ وَلَئِنْ طَالَتْ بِكُمْ حَيَاةٌ لَتَرَوُنَّ مَا قَالَ النَّبِيُّ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا سَعْدَانُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ سَمِعْتُ عَدِيًّا كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?' என்று கேட்டார்கள். 'நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது' என்று பதிலளித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்' என்று சொன்னார்கள். 'அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?' என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்' என்று சொன்னார்கள். நான், '(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?' என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி 3595
வந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழிப்பறி கொள்ளையைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தன்னுடைய ஆட்சிக் காலத்திலும் தனக்குப் பின்னால் ஆட்சி செய்யவிருக்கும் அபூபக்ர், உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தலைநகராகத் திகழும் மதீனாவை நோக்கி ஒரு பெண் வருவாள் என்று குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் மதீனாவைக் குறிப்பிடுவதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வந்தவர் வழிப்பறி பற்றிக் கேட்கிறார். 'அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்; இஸ்லாம் உலகெங்கும் பரவும்; அப்போது வழிப்பறி போய் விடும்; எனவே அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை' இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பதிலின் நோக்கம்.
அதற்கு அவர்கள் மதீனாவைக் கூட உதாரணமாகக் கூறத் தேவையில்லை. புகாரியின் 3612வது அறிவிப்பில் கூறுவது போல், 'ஒருவர் ஸன்ஆவிலிருந்து ஹள்ர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார்' என்று பதில் சொல்லியிருக்கலாம். இன்னும் குறிப்பாக, இந்த ஹதீஸில் சொன்னது போல் புகாரி 3595 ஹதீஸிலும் ஒருவர்' என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா?
மதீனாவைக் கூறாமல் கஅபாவுக்கு வருவாள் என்று கூறுவதிலிருந்தும்,
பொருள்களைச் சுமந்து வரும் வாணிபக் கூட்டத்தை உதாரணமாகக் காட்டாமல் ஒரு பெண்ணை உதாரணமாகக் காட்டி, அவள் கஅபாவை வலம் வருவாள் என்று கூறுவதிலிருந்தும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முன்னறிவிப்பை மட்டும் செய்யவில்லை; ஹஜ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தையும் சமுதாயத்திற்கு முன் வைக்கின்றார்கள்.
அது தான், 'ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம்' என்பதாகும்.
கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண், அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே, 'ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்' என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 3595)
எனவே ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ்ஜுக்குச் செல்வது இகழுக்குரிய செயல் அல்ல; மாறாக புகழுக்குரிய செயல் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்து பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.
இவ்வாறு இரண்டாவது சாரார், 'ஒரு பெண் மஹ்ரமான உறவினர் அல்லது கணவன் இல்லாமல் தனியாக ஹஜ் செய்யலாம்' என்ற தங்களது வாதத்தை நிலை நிறுத்துகின்றார்கள்.
தன் மனைவியை ஹஜ்ஜுக்கு அனுப்ப அனுமதி கோரும் ஹதீஸில் அந்த நபித்தோழரிடம், 'உன் மனைவி அழகுள்ள வாலிபப் பெண்ணா? அவளுடன் மற்ற பெண்கள் இருக்கிறார்களா? அவளுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கின்றதா?' என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரிக்காமலேயே அந்த நபித் தோழரை அவரது மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு கட்டளையிடுகின்றார்கள். எனவே ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்துகின்றார்கள் என்று முதல் சாரார் எடுத்து வைத்த வாதத்திற்கு இரண்டாவது சாரார் அளிக்கும் பதில்:
புகாரியின் 3595வது ஹதீஸ் இல்லாவிட்டால் தான் இந்த வாதம் ஏற்புடையது; இந்த ஹதீஸில் வருங்காலத்தில் நடக்கக் கூடிய ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்கின்றார்கள்.
பெண்கள் ஹஜ் செய்வது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள். இதில் முதல் சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இரண்டாவது சாராரின் கருத்தை ஏற்றுக் கொண்டால் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஒரு சட்டம் சம்பந்தமாக இரண்டு மாறுபட்ட ஹதீஸ்கள் இருக்கும் போது இரண்டையும் இணைத்து ஓர் இணக்கமான கருத்தைக் காண்பதும் அதன்படி அமல் செய்வதும் ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவாகும்.
உதாரணமாக, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது தொடர்பாக மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன.
நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 3771)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான் பார்த்தேன் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 5615, 5616)
இப்படி மாறுபட்ட இரண்டு செய்திகள் வரும் போது, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாது; அதே சமயம் உட்கார முடியாத கட்டத்தில் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் தவறில்லை என்று இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.
இதே போல் பெண்கள் தனியாக ஹஜ் செய்வது தொடர்பான இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
ஒரு பெண் தனியாக ஹஜ் செய்யச் செல்லலாமா? என்றால் புகாரி 3595 ஹதீஸின் அடிப்படையில் செல்லலாம்; மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளது; தடையில்லை; அதே சமயம் புகாரி 3006 ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும்.
இப்படி ஒரு முடிவுக்கு வரும் போது இரண்டு விதமான ஹதீஸ்களில் எதையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படவில்லை; நாம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி விடுகின்றோம்.
ஒருவருக்கு ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம், உடல் வலிமை போன்றவை வந்து விடும் போது ஹஜ் கடமையாகின்றது என்று பார்த்தோம். பெண்களும் இதே நிபந்தனைகளை அடைந்து விட்டால் ஹஜ் செய்ய வேண்டும்.
எனினும் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லாமல் ஹஜ் செய்வது பாதுகாப்பானதில்லை என்று ஒரு பெண் கருதினால் அவர்களுக்குக் கடமையில்லை.
ஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
இந்த விஷயத்தில் தங்கள் பயணம் பாதுகாப்பானதா? என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் இறையச்சத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment