பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் ??கடைக்குப் பக்கத்திலேயே அதே போல் மற்றொரு கடை உருவாக்கலாமா?

? வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம். ஒரு கடைக்குப் பக்கத்திலேயே அதே போல் மற்றொரு கடை உருவாக்கலாமா? பக்கத்துக் கடையின் விலையை அறிந்து நாம் குறைத்துக் கொடுக்கலாமா?

வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை.

அது போன்று பக்கத்துக் கடைகளில் என்ன விலை வைக்கின்றார்கள் என்று பார்த்து அதற்குத் தக்க விலை வைத்துக் கொள்வதற்கும் தடை ஏதும் இல்லை.

விற்பவரும், வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் பொருந்திக் கொண்டால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் தான்.

நமது கடையில் விலை அதிகம் என்று ஒருவருக்குத் தெரிந்தால் நிச்சயம் அவர் நம்மிடம் வாங்க மாட்டார். அதே போல் பக்கத்துக் கடைக்காரரின் விலையை விடக் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்று கருதி லாபம் இல்லாமல் நாமும் விற்பனை செய்ய மாட்டோம்.

''விற்பவரும் வாங்குபவரும் பிரியாமல் இருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தி இருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப் படும். குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), நூல்: புகாரி 2079

வியாபாரி கூறும் விலையை வாங்குபவர் ஏற்றுக் கொண்டால் பொருளை வாங்கலாம். அந்த விலையில் உடன்பாடில்லை என்றால் அந்தப் பொருளை வாங்காமல் விட்டு விடலாம். இதில் இவ்வளவு தான் விலை வைக்க வேண்டும் என்று மார்க்கம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஆனால் அதே சமயம் மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுவது போல், குறைகளை மறைக்காமல், பொய் சொல்லாமல் விற்க வேண்டும்.

அதே போல் அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பதுக்கி வைக்கவும் கூடாது.

''யார் விலையை ஏற்றுவதற்காக வியாபாரம் செய்யாமல் பதுக்கி வைக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஃமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 3012

ஒரு கடைக்குப் பக்கத்தில் அதே போன்ற மற்றொரு கடையை உருவாக்குவதற்கும் மார்க்கத்தில் தடை இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கடைவீதிகள் இருந்ததற்கும், சந்தை கூடி வியாபாரம் நடைபெற்றதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் வியாபாரிகளிடம் வழி மறித்து வாங்கிக் கொண்டிருந்தனர். 'உணவுப் பொருட்களை விற்பனை செய்யப்படும் இடத்திற்கு (சந்தைக்கு) கொண்டு சென்ற பிறகு தான் விற்க வேண்டும். வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்கக் கூடாது' என்று வியாபாரிகளைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைத்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2123

சந்தை போன்ற இடங்களில் ஒரே வியாபாரம் செய்யக் கூடிய கடைகள் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும். எனவே ஒரு கடைக்குப் பக்கத்தில் அதே போன்ற கடை வைப்பது தவறில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

-- QA - Ehathuvam Magazine Mar 06

No comments:

Post a Comment