பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

தவ்ராத், இஞ்சீல், ஸபூர் போன்ற வேதங்களை ??

? தவ்ராத், இஞ்சீல், ஸபூர் போன்ற வேதங்களை அல்லாஹ் எந்த வழியில் ஓதிக் காட்டினான்? அவற்றில் என்ன உள்ளது? நபி (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் அருளப்பட்டது போன்று மற்ற நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதங்கள் என்ன?




நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம். (அல்குர்ஆன் 4:163)

(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப் படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 3:3)

நபி (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டதைப் போன்றே எல்லா வேதங்களும் அருளப்பட்டன என்பதையும், அந்த வேதங்களில் உள்ளவற்றை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்பதையும் இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)

இறைத் தூதர்களிடம் அல்லாஹ் பேசுவதற்கு மூன்று விதமான வழிகளைக் கையாள்வதாக இந்த வசனம் தெரிவிக்கின்றது. எனவே இந்த மூன்று வழிகளின் அடிப்படையில் தான் தவ்ராத், இஞ்சீல், ஸபூர் உள்ளிட்ட எல்லா வேதங்களும் அருளப்பட்டுள்ளன.

முந்தைய வேதங்களிலுள்ளவற்றை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்று கூறப்படுவதால் திருக்குர்ஆன் கூறும் இதே ஓரிறைக் கொள்கையைத் தான் அனைத்து வேதங்களும் கொண்டிருந்தன என்பது தெளிவாகின்றது.

அந்த வேதங்களில் உள்ள சட்ட திட்டங்கள் வேண்டுமானால் காலத்திற்கு ஏற்றபடி வேறு பட்டிருக்கலாம். கொள்கையைப் பொறுத்த வரை திருக்குர்ஆனிலும் அதற்கு முந்தைய வேதங்களிலும் ஒரே விதமாகத் தான் இருந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களுக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 14:4)

திருக்குர்ஆனில் நான்கு வேதங் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு:

1. ஸபூர்: தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)

2. தவ்ராத்: மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (நூல்: புகாரீ 4116, 4367)

3. இஞ்சில்: ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)

4. திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)

இந்த நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு வேதங்கள் இல்லை என்று எண்ணி விடக் கூடாது. எல்லா இறைத் தூதர்களுக்கும் அல்லாஹ் வேதங்களை அருளியுள்ளான். ஆனால், அவற்றின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். (அல்குர்ஆன் 2:213)

எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டுள்ளன என்றாலும் அவற்றில் நாம் பின்பற்ற வேண்டிய வேதம் திருக்குர்ஆன் மட்டுமே! முந்தைய வேதங்களை நாம் நம்ப வேண்டுமே தவிர அவற்றைப் பின்பற்றக் கூடாது.

முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன, மாற்றப்பட்டன, மறைக்கப்பட்டன, திருத்தப்பட்டன எனவும் பல இடங்களில் கூறுகிறது.

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ் வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (அல்குர்ஆன் 2:75)

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். ''இது அல்லாஹ் விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)

திருக்குர்ஆனைத் தவிர எந்த வித மாறுதலுக்கும் உள்ளாகாத ஒரு வேதமும் உலகில் கிடையாது. அல்லாஹ் இதனைப் பாதுகாத்து உள்ளான். கியாமத் நாள் வரை இது தான் பின்பற்றப்பட வேண்டும்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (அல்குர்ஆன் 15:9)

-> Q/A Ehathuvam June 06

No comments:

Post a Comment