பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 14, 2010

தடை செய்யப்பட்டவைகளை விற்பது

தடை செய்யப்பட்டவைகளை விற்பது

? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?



தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கூடாது! அது ஹராம்!' எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 2236

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி), 'அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா?' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2223

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது அறியலாம்.

தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கு அனுமதி இல்லை.

ஆயினும் முழுமையாகத் தடை செய்யப்படாமல் ஒரு அளவுக்குத் தடை செய்யப்பட்டிருந்தால் அது போன்ற பொருட்களை விற்கலாம். முஸ்லிமுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் விற்கலாம்.

பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது.

இது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது.

உமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே!' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீள அங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 948

இது போல் உண்பது மட்டும் தடுக்கப்பட்டு வேறு வகையில் பயன்படுத்தத் தடை இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அதையும் விற்கலாம்.

உதாரணமாக, இறந்த ஆட்டை நபித்தோழர்கள் பயன்படுத்தாமல் இருந்த போது, 'இந்த ஆட்டின் தோலை நீங்கள் பயன்படுத்தலாமே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண் ஒருவருக்கு ஓர் ஆடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அது இறந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து சென்ற போது, 'அதனுடைய தோலை எடுத்து, அதைப் பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே?' என்று கேட்டார்கள். அதற்கு, 'அது செத்தது' என்று (தோழர்கள்) பதிலளித்தனர். 'அதைச் சாப்பிடுவது தான் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1492, முஸ்லிம் 542

எனவே உண்பதற்கு மட்டும் தடுக்கப்பட்டு, வேறு வகையில் பயன்படுத்தத் தடையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவற்றையும் விற்கலாம்.

No comments:

Post a Comment