! இன்னொருவரின் குழந்தையை எடுத்து வளர்ப்பது அடிப்படையில் தவறானது அல்ல. அவ்வாறு எடுத்து வளர்ப்பதால் ஏற்படும் விபரீதங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். யாருக்கோ பிறந்த குழந்தையைத் தனது குழந்தை என்று கூறுவதோ, தனது தகப்பன் அல்லாத இன்னொருவனை தகப்பன் என்று கூறுவதோ மார்க்கத்தில் கண்டிப்பாகத் தடுக்கப்பட்டுள்ளது.
எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 33:4,5)
எவ்வளவு பாசமாக எடுத்து வளர்த்தாலும் அதன் காரணமாக அக்குழந்தை வளர்த்தவனின் மகனாக முடியாது. வளர்த்தவன் இறந்து விட்டால் அவனது சொத்தில் அந்தக் குழந்தைக்கு வாரிசுரிமை அடிப்படையில் ஒரு சல்லிக்காசும் கிடைக்காது. நம்மால் வளர்த்த குழந்தைக்கு சட்டப்படி வாரிசுரிமை கிடைக்காதே என்பதை விளங்கி உயிருடன் இருக்கும் போதே சொத்துக்களை எழுதி வைக்கத் தடை ஏதும் இல்லை. அடுத்தவர் குழந்தையை எடுத்து வளர்ப்பவர்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு பெண் குழந்தையை ஒருவன் எடுத்து வளர்த்தால் சிறுமியாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை.
அச்சிறுமி பருவம் அடைந்து விட்டால் வளர்த்தவனுக்கும் அவளுக்கும் இடையே அந்நியன் என்ற உறவு தான் உண்டு. அதாவது அந்நிய ஆணுடன் எவ்வாறு தனிமையில் இருக்க முடியாதோ மேலோட்டமான ஆடைகளுடன் அந்நிய ஆணுடன் இருக்க முடியாதோ அது போல் அவளுடன் வளர்ந்தவன் தனிமையில் இருக்க முடியாது. இன்னும் சொல்வதாக இருந்தால் வளர்த்தவன் அவளைத் திருமணம் செய்வது கூட குற்றமாகாது. அது போல் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையை வளர்த்தாலும் அக்குழந்தை பருவமடைந்து விட்டால் இதே நிலை தான் ஏற்படும். மேலும் வளர்த்தவனின் வீட்டில் புதல்விகள், தங்கைகள் இருந்தால் அச்சிறுவன் வயதுக்கு வந்தவுடன் வாசலுடன் நிறுத்தும் அவசியம் ஏற்படும். ஒருவனை நாம் வளர்க்கிறோம். அவனுக்கு திருமணமும் செய்து வைக்கிறோம். அவன் தன் மனைவியை விவாக ரத்துச் செய்து விட்டால் அப்பெண்ணை அவனது வளர்ப்புத் தந்தையே திருமணம் செய்யலாம். அவள் மகனின் மனைவி என்ற நிலைக்கு வர மாட்டாள். (பார்க்க திருக்குர்ஆன் 33:37)
இதைத் தவிர்க்க நினைத்தால் அண்ணன் பிள்ளை, தம்பி பிள்ளை என்று எடுத்து வளர்த்தால் அவர்கள் தனித்திருக்கத் தடை ஏற்படாது. இதைக் கவனத்தில் கொண்டு எடுத்து வளர்த்தால் அது குற்றமாகாது.
No comments:
Post a Comment