? இகாமத் சொன்ன பிறகு எந்தத் தொழுகையும் தொழக்கூடாது என்று தடை உள்ளதாகக் கூறி வருகின்றீர்கள். முஸ்லிம் 565வது ஹதீஸில் இகாமத் சொல்லப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் சுப்ஹு தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது முன் சுன்னத்தைத் தொழுது விட்டு ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிகின்றதே! விளக்கவும்.
''(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1281
கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகை தொழக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது.
நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தோழர்கள் தூங்கும் வரை அந்த மனிதருடன் பேசிக் கொண்டு இருந்தார்கள். பின்னர் வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.
நூல்கள்: புகாரி 642, முஸ்லிம் 565
இந்த ஹதீஸில் இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகையைத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இகாமத் சொல்லப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பேசிக் கொண்டு இருப்பதற்கு அனுமதி இருக்கும் போது சுன்னத் தொழுதால் என்ன தவறு என்ற அடிப்படையில் இவ்வாறு கேட்டுள்ளீர்கள்.
இகாமத் சொல்லப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றால் அப்போது தொழுகையும் நடைபெறவில்லை. பேசி முடித்த பின் நபி (ஸல்) அவர்கள் சென்று தான் தொழுவித்துள்ளார்கள். இகாமத் சொன்ன பிறகும் வேறு காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்துவதற்கு இமாமிற்கு அனுமதி உண்டு.
ஆனால் நமக்கு இடப்பட்ட கட்டளை இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகையைத் தொழக் கூடாது என்பது தான். இதற்கு மாற்றமாக தொழலாம் என்று ஒருவர் கூறினால் அதற்கு நேரடி ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அவ்வாறு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில் நபி (ஸல்) அவர்கள் விதித்த தடையைப் பேணுவது தான் முஃமின்களின் கடமையாகும்.
--Q/A Ehathuvam Magazine Mar 06
No comments:
Post a Comment