? ஜகாத் நிதியைத் திரட்டி தேவைப்படுவோருக்குக் கடனாகக் கொடுக்கிறோம் என்று பித்தலாட்டம் செய்வோருக்கு தக்க பதில் கொடுத்தீர்கள். ஆனால் அவர்கள் ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். 09:60 வசனத்தில் கடனாளிகள் என்பதைக் குறிப்பதற்கு 'அல்காரிமீன்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது முக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. கடன் வாங்கியவன், கடன் வாங்குபவன், கடன் வாங்குகிறவன் என்று மூன்று பொருள் உள்ளது. எனவே ஜகாத்தைக் கொடுத்து இனிமேல் கடனாளியாக ஆக்கலாம் என்று புதுமையான வாதத்தை எடுத்து வைக்கின்றனர். இதற்கு உங்கள் பதில் என்ன?
''மூடர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்பார்கள். அவர்கள் தவறான தீர்ப்பளித்து தாமும் கெட்டு மக்களையும் கெடுப்பார்கள்'' என்ற நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. அரபு இலக்கணத்தை அரை குறையாக விளங்கிக் கொண்டு உளறிக் கொட்டியுள்ளனர். அவ்வாறு கூறுவோர் யாராக இருந்தாலும் இது குறித்து அவர்கள் விவாதத்துக்கு தயார் என்றால் நமது இஸ்லாமியக் கல்லூரி மாணவர்களில் ஒருவரை அதில் பங்கேற்கச் செய்து நாம் கூறுவதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்.
திருடனின் கையை வெட்டுங்கள் என்பதில் திருடன் என்ற சொல்லும் இது போன்ற முக்காலத்தைக் குறிக்கும் சொல்லாகத் தான் உள்ளது. எனவே இனிமேல் திருடுவான் என்று கூறி ஒருவனின் கையை வெட்ட முடியாது. முஸ்லிம் என்ற சொல் கூட இது போல் முக்காலத்தைக் குறிக்கும் சொல் தான். இனிமேல் முஸ்லிமாவார்கள் என்று கருதிக் கொண்டு இஸ்லாத்தை இப்போது ஏற்காத ஒருவரை முஸ்லிம் என்று கூற முடியாது. ஜகாத்தை பற்றிக் கூறும் 9:60 வசனத்தில் கடனாளிகள் என்பது போல் ''ஃபுகராக்கள்'' என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளது. தேவையுள்ளவர்கள் என்பது இதன் பொருள். இதுவும் கூட முக்காலத்தைக் குறிக்கும் சொல் தான். வசதியான ஒருவருக்கு ஜகாத்தைக் கொடுத்து எதிர்காலத்தில் இவர் ஏழையாகி விடக்கூடிய நிலை இருந்ததால் கொடுத்தேன் என்று கூற முடியாது. முக்காலத்தையும் குறிக்கும் சொல் என்பதை உரிய விதத்தில் விளங்காதவர்களின் உளறலில் ஏமாந்து விட வேண்டாம்.
ஏழைகளுக்கும், ஏற்கனவே கடன்பட்டவர்களுக்கும் கொடுக்க வேண்டிய ஜகாத்தை அவர்களுக்குச் சொந்தமாக்காமல் தங்கள் கையில் வைத்துக் கொள்ள மார்க்கத்தை வளைக்கும் சிலர் திருச்சியிலும், சேலத்திலும் இருப்பதாக அறிகிறோம். இவர்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
No comments:
Post a Comment