பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 19, 2010

கலா நோன்பு(விடுபட்ட நோன்பு)-ஏழெட்டு ஆண்டுகள் ??

? படிக்கும் காலத்தில் பகுத்தறிவு வாதம் பேசிய எங்கள் பள்ளி ஆசிரியர்களால் பாதை மாற்றப் பட்டு இறை நிராகரிப்பில் இருந்த நாங்கள் ஏகத்துவ சிந்தனை எங்களை எட்டும் வரை ஏழெட்டு ஆண்டுகள் நோன்பு நோற்காமல் இருந்துள்ளோம். மேலும் நோன் பைப் பாரமாகக் கருதி நோன்பு நோற்காதவர்களும் உள்ளனர். திருந்தி விட்ட நிலையில் விடுபட்ட அத்தனை வருட நோன்பையும் நாங்கள் இப்போது நோற்க வேண்டுமா





! கடமையான வணக்கங்கள் இரண்டு வகைகளில் உள்ளன.

வணக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் தான் நிறைவேற்ற வேண்டும் என்பது ஒரு வகை. இயன்ற வரை அதற்கான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இயலாவிட்டால் வேறு நேரத்திலும் நிறைவேற்றலாம் என்பது இரண்டாவது வகை. தொழுகை முதல் வகையாகும்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது. (திருக்குர்ஆன் 4: 103)

தூக்கம், மறதி, நிர்ப்பந்தம் ஆகிய மூன்று காரணங்கள் இருந்தால் தவிர மற்ற சமயங்களில் ஒவ்வொரு தொழுகையையும் அதற்கான நேரத்தில் தான் நிறைவேற்ற வேண்டும். நேரம் தவறி வேறு நேரத்தில் நிறைவேற்றினால் அது தொழுகையாக ஆகாது. 10 மணிக்கு அலுவலகம் வரவேண்டும் என்று ஒரு நிறுவனம் நிர்ணயித்திருக்கும் போது மாலை 3 மணிக்குச் சென்று ''விடிய விடிய பணிபுரிகிறேன்'' என்று நாம் கூறினால் அந்த நிறுவனம் அதை ஏற்காது. அது போல் தொழுகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மாதவிடாயின் போது தொழுகையையும் நோன்பையும் விட்டு விட வேண்டும் எனக் கூறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுபட்ட நோன்பை பிரிதொரு நாளில் நோற்க வேண்டும் என்றும், விடுபட்ட தொழுகையை பிரிதொரு நாளில் தொழக்கூடாது என்றும் வழி காட்டினார்கள். (முஸ்லிம் 506 507 508 ஹதீஸ்களைப் பார்க்கவும்.)

மேலும் நேரம் தான் முக்கியம் என்ற காரணத்தால் தான் தண்ணீர் கிடைக்காவிட்டால், தண்ணீர் கிடைக்கும் போது தொழுங்கள் என்று கூறாமல் தயம்மும் செய்து தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழி காட்டினார்கள். நின்று தொழ இயலாவிட்டால் எப்போது நிற்க இயலுமோ அப்போது தொழுங்கள் எனக் கூறாமல் குறித்த நேரத்தில் உட்கார்ந்தாவது தொழுங்கள் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. எனவே உங்களைப் போன்றவர்கள் ஏழெட்டு ஆண்டுகள் தொழுகையை விட்டிருந்தால் என்ன செய்வது? தொழுகையை விட்டவர்கள் அதற்காக அழுது இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டு விட்டு இனிமேல் உரிய நேரத்தில் தொழுது விடுவேன் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். திருக்குர்ஆன் 19:59,60 ஆகிய வசனங்களிலிருந்து இதை நாம் அறியலாம். தூக்கம், மறதி போன்ற நம் கைமீறிய காரணங்களால் ஒருவர் தொழுகையை விட்டிருந்தால் எழுந்தவுடன் அல்லது நினைவு வந்தவுடன் தொழுது விட வேண்டும். (புகாரி 597 முஸ்லிம் 1103)

ஆனால் நோன்பைப் பொருத்தவரை மாதவிடாய் போன்ற காரணங்களால் விட்ட நோன்பைக் கூட வேறு நாட்களில் நோற்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 2:184 185)

எனவே விடுபட்ட நோன்புகளைக் கணக்கிட்டு நோற்பது அவசியமாகும். ஆயினும் தளர்ந்து விட்ட நிலையில் ஏழெட்டு வருட நோன்பை வைப்பது ஒருவருக்கு இயலாமல் போகலாம். உண்மையாகவே அவருக்கு அது இயலாவிட்டால் ஒரு நோன்பை விட்டதற்காக ஒரு ஏழைக்கு ஒரு நாள் உணவு அளித்தால் அக்கடமை நீங்கி விடும். ஏழு வருடத்திற்கு 7 x 30 = 210 நோன்புகள் என்று கணக்கு வைத்துக் கொண்டு ஒரு ஏழைக்கு ஒரு நாள் உணவளித்து விட்டு ஒன்றைக் கழித்துக் கொள்ளலாம். அல்லாஹ் தாராளமாகப் பொருள் வசதியைத் தந்திருந்தால் ஒரே நாளில் (மூன்று வேளையும்) 210 ஏழைகளுக்கு உணவளித்து அக்கடமையிலிருந்து விடுபடலாம். உடல் வலுவும் பொருள் வசதியும் இல்லாவிட்டால் எந்த ஆத்மாவையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். இது பற்றி அல்லாஹ்விடம் முறையிட்டால் அவன் தனது கருணையால் மன்னிப்பான்.

ஒருவர் ரமளானில் நோன்பு வைத்துக் கொண்டு பகலில் மனைவியுடன் கூடிவிட்டார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார். பரிகாரமாக அறுபது நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். தனக்கு இயலாது என்று அவர் கூறிய போது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்றார்கள். அதற்கும் வசதியில்லை என்று அவர் கூறியபோது அவருக்காக உணவைத் திரட்டி ஏழைகளுக்கு வழங்கச் சொன்னார்கள். அதற்கு அவர் என்னை விட இங்கு பெரிய ஏழை யாருமில்லை என்றார். இதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். அந்த உணவை அவரே பயன்படுத்திக் கொள்ளுமாறும் கூறினார்கள். (புகாரி 6087)

எனவே இயலாதவர்களின் இயலாமையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். உள்ளங்கள் திருந்தி விட்டதையும் அவன் நன்றாக அறிவான். அவனிடம் முறை யிட்டால் தனது கருணையால் மன்னிப்பான்.
  

No comments:

Post a Comment