? நான் உடல் நலத்திற்காகவும், ஞாபக சக்திக்காகவும் யோகாசனம் செய்கின்றேன். மேலும் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுக்களை விளையாடவும், பார்க்கவும் செய்கின்றேன். இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா?
யோகாசனத்தைப் பொறுத்த வரை அதில் செய்யப்படும் பயிற்சிகள் சரியானவையாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு முறைகள் நுழைக்கப் படுகின்றன. அதிலுள்ள செயல்கள் இந்து மதத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. எனவே இது போன்ற மத அனுஷ்டானங்களைத் தவிர்த்து, உடற்பயிற்சிக்கான செயல்களை மட்டும் செய்வது தவறில்லை.
கிரிக்கெட், கபடி உட்பட எந்த விளையாட்டாக இருந்தாலும் அதை விளையாடுவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
அபீஸீனியர்கள் தங்கள் ஈட்டி மூலம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது அதன் அருகில் நபி (ஸல்) அவர்கள் இருக்க நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 455
ஒரு பெருநாüன் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ ''நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ''ஆம்'' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்கüன் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது ''உனக்குப் போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ''ஆம்'' என்றேன். ''அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 950
உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் களுக்கு மார்க்கத்தில் தடையில்லை என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் இவ்வாறு விளையாடுவதைப் பார்ப்பதற்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளிக்கின்றார்கள்.
எனவே கிரிக்கெட், கபடி உள்ளிட்ட எந்த விளையாட்டையும் விளையாடவோ, அதைப் பார்க்கவோ செய்யலாம்.
ஆனால் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் மார்க்கத்திற்கு விரோதமான செயல்கள் இருக்கக் கூடாது.
விளையாட்டு என்றாலே அதில் சூதாட்டமும் இணைந்து விடும். பந்தயம் கட்டி, போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, தோல்வியுறும் அணியினர் பந்தயத் தொகையை அளிப்பது போன்ற செயல்கள் நடந்தால் அது சூதாட்டம் என்ற வட்டத்திற்குள் வந்து விடும். இது போன்ற சூதாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90,91)
பொதுவாக எந்த விளையாட்டைப் பார்ப்பதற்கும் அனுமதி உள்ளது என்றாலும் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை அதில் அதிகமான நேர விரயம் செய்யப்படுகின்றது. இதனால் இந்தக் கிரிக்கெட்டைப் பார்ப்பவர்கள், தன் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மறந்து விடும் நிலைக்கு ஆளாகின்றனர்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63:9)
இந்த வசனங்களில் வியாபாரமோ, பொருட் செல்வமோ, பிள்ளை குட்டிகளோ, குடும்பமோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுத்து விடக் கூடாது என்று கூறுகின்றான். ஆனால் இந்தக் கிரிக்கெட், விளையாடுபவர்களையும் பார்ப்பவர்களையும் அல்லாஹ்வின் நினைவை விட்டு முற்றிலும் தடுத்து விடுவதைப் பார்க்க முடிகின்றது.
ஒருநாள் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி என்று நாள் கணக்கில் இந்த விளையாட்டு நடப்பதால் மனிதனின் பொன்னான நேரம் வீணாகின்றது என்பதை மறுக்க முடியாது.
எனவே இறைவனுக்குச் செய்யும் கடமை, குடும்பத்திற்குச் செய்யும் கடமை போன்றவற்றுக்குப் பங்கம் ஏற்படாத வரை மட்டுமே எந்த விளையாட்டிற்கும் அனுமதி என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
-Q/A Ehathuvam May 06
No comments:
Post a Comment