பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

திருமறையின் 46:15 வசனத்தில் ??

? திருமறையின் 46:15 வசனத்தில், 40 வயதை அடைந்ததும் ஒருவர் செய்யும் துஆவைப் பற்றியும், முஸ்லிமாக இருப்பது பற்றியும் இறைவன் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் ஒருவர், நாற்பது வயதைக் கடந்து மரணிக்கும் ஒருவருக்குத் தான் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு. அதற்கு முன் மரணிப்பவர்கள் அனைவரும் சுவனம் செல்வர். இதைத் தான் இந்த வசனம் கூறுகின்றது என்று கூறுகின்றார். இதற்கு விளக்கம் என்ன?


தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகிறான்.

அல்குர்ஆன் 46:15

நாற்பது வயது வரை மனிதன் மீது எந்தக் கடமையும் கிடையாது; நாற்பது வயது வரை மனிதன் எப்படி வாழ்ந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்று இந்த வசனம் கூறுவதாகச் சில அறிவீனர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த வசனம் அந்தக் கருத்தைத் தரவில்லை. நன்மை, தீமைகள் இந்த வயதிலிருந்து பதியப்படுகின்றன என்பது பற்றி இந்த வசனத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.

பருவ வயதை அடையும் வரை குழந்தைகளுக்குப் பாவங்கள் பதியப்படுவதில்லை; ஒருவன் பருவ வயதை அடைந்து விட்டால் அவன் செய்யும் நன்மை, தீமைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அதற்காக அவனுக்குக் கூலி வழங்கப்படும். இது தான் இஸ்லாமிய அடிப்படையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை. 2. சிறுவன் பெரியவராகும் வரை. 3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர)

நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

அப்படியானால், நாற்பது வயதை அடையும் போது என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்படுவது ஏன்? என்ற கேள்வி எழலாம்.

பொதுவாக மனிதன் பருவம் அடையும் போது பெற்றோரின் மகத்துவத்தை உணராதவனாக இருக்கிறான். தாய் அவனைக் கஷ்டப்பட்டு சுமந்ததையும், பெற்றதையும் கூட அவன் நினைப்பதில்லை.

அவனுக்குத் திருமணம் ஆகும் போது பெற்றோர் மேலும் தேவையற்றவர்களாக மனிதனுக்குத் தோன்றுகிறார்கள். உடல் சுகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பெற்றோரை அவன் உதாசீனம் செய்கிறான். அவனுக்கு ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறக்கின்றன. அப்போதாவது பெற்றோரின் மதிப்பை உணர்கின்றானா என்றால் அதுவுமில்லை.

அவன் பெற்ற பிள்ளை பருவ வயதை அடைந்து அவனையே எதிர்த்துப் பேசும் போது தான் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. நாம் நமது தந்தையை நடத்தியது போலவே நமது மகன் நம்மை நடத்த ஆரம்பித்து விட்டானே என்று அதிர்ச்சியடைந்து காலம் கடந்து பெற்றோரின் மதிப்பை உணர்கிறான்.

இந்த நிலையை சராசரியாக மனிதன் நாற்பது வயதில் அடைகிறான். இருபது வயதில் அவன் திருமணம் செய்திருந்தால் தனது நாற்பதாவது வயதில் 20 வயது மகனைப் பெறுகிறான். 25 வயதில் தாமதமாகத் திருமணம் செய்தால் கூட நாற்பதாவது வயதில் 15 வயது மகனைப் பெற்றிருப்பான்.

தனது பிள்ளை தன்னை உதாசீனம் செய்யும் போது தான் தந்தையின் மதிப்பை மனிதன் உணர்கிறான். இதற்கு இவ்வளவு காலம் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

* பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளை!

* கருவில் சுமந்த போது, தாய் பட்ட கஷ்டம்!

* பெற்றெடுக்கும் போது அவள் படுகின்ற சிரமம்!

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டிய பின் நாற்பது வயதை அடையும் போது என்று கூறுவதிலிரிருந்து அறிவுடைய யாரும் இதை அறியலாம்.

என் பிள்ளைகளை எனக்கேற்றவாறு ஆக்கு என்று நாற்பது வயதில் மனிதன் வேண்டுவதாகவும் இவ்வசனம் கூறுகிறது. பிள்ளை பெற்று அவன் பருவ வயதை அடையும் போது தான் மனிதன் தனது பெற்றோரை நினைத்துப் பார்க்கிறான் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

நான் பெற்றோரை மதிக்காதது போல என் பிள்ளைகள் என்னை மதிக்காதவாறு செய்திடாதே! நான் நல்ல முஸ்லிமாக நடந்து கொள்கிறேன் எனக் கூறித் திருந்துகிறான். இவ்வசனத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கவனமாக வாசித்தால் நாற்பது வயதை அடையும் போது பெற்றோரின் மகிமையை மனிதன் உணர்கிறான் என்பது தான் கூறப்படுகிறதே தவிர, நாற்பது வயது வரை ஆட்டம் போட எந்த அனுமதியும் இவ்வசனத்தில் இல்லை.

உடல் முறுக்குடன் மனிதன் இருக்கும் போது தான் அவனை நெறிப்படுத்திட ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவைப்படுகிறது. உடல் தளர்ந்த பின் பல தீமைகளைச் செய்வதற்குரிய வலுவை உடல் தானாக இழந்து விடும்.

நாற்பது வயது வரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை உலகில் உள்ள அனைவரும் கடைப்பிடித்தால் என்னவாகும் எனக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் கூட இது எந்த அளவு ஆபத்தான கருத்து என்பதை உணர்வார்கள்.

இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் தங்கள் மனைவி, மக்கள் இதைச் செயல்படுத்த அனுமதிப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும். நாற்பது வயதை அடையாத தனது மனைவி அடுத்த ஆணுடன் இருக்கலாம்; அல்லது தனது மகள், பிற ஆண்களுடன் ஊர் சுற்றலாம் என்று இவர்கள் அனுமதிப்பதில்லை. இதிலிருந்து இவர்கள் தங்கள் மனோ இச்சைக்காக, தாங்கள் செய்யும் குற்றச் செயல்களை நியாயப்படுத்துவதற்காக மார்க்கத்தை வளைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

--> Q/A Ehathuvam Magazine Aug 2009

No comments:

Post a Comment