பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

திருக்குர்ஆன் பகரா அத்தியாயத்தின் 54வது வசனத்தில் ??

? திருக்குர்ஆன் பகரா அத்தியாயத்தின் 54வது வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் கூட்டத்தைப் பார்த்து, உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளுங்கள் என்று இடம் பெறும் வசனத்தின் விளக்கமாக பி.ஜே. அவர்களின் மொழிபெயர்ப்பில் கடுமையான கோபம் வரும் போது செத்துத் தொலையுங்கள் என்று கூறுவது மனிதரின் இயல்பு! அது போன்று தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில் பக்கம் 165, 167ல் வேறுவிதமாக இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு ஜரீர், சுயூத்தி, இப்னு இஸ்ஹாக் ஆகியோர் வேறு விதமான விளக்கத்தைத் தந்துள்ளார்களே! இவற்றில் எது சரி?


திருக்குர்ஆனின் பெரும்பான்மையான வசனங்களுக்கு அதன் நேரடிப் பொருளிலேயே நாம் தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம். சில வசனங்களுக்கு வேறு சில வசனங்கள் அதற்கு விளக்கமாக அமைந்திருக்கும்.

சொர்க்கத்தில் இருந்த ஆதம் (அலை) அவர்கள் குறிப்பிட்ட மரத்தை நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டிருந்தான். ஆனால் ஷைத்தானின் சதிவலையில் சிக்கிய ஆதம் (அலை) அவர்கள் இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்தார்கள். பின்னர் அவர்கள் சில வார்த்தைகளைக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டு இறை மன்னிப்பைப் பெற்றார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:37)

ஆதம் (அலை) அவர்கள், இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட வார்த்தைகள் எவை? என்று இந்த வசனத்தில் கூறப்படவில்லை. அந்த வார்த்தைகளை ஏழாவது அத்தியாயத்தின் 23வது வசனம் தெளிவுபடுத்துகிறது.

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் 7:23)

இதைப் போன்று சில வசனங்களின் விளக்கங்கள் வேறு சில வசனங்களில் இடம் பெற்றிருக்கும்.

சில வசனங்களின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர் (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள், நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கிறோமே! என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: முஸ்லிம் (3834)

இதைப் போன்று நபிகளாரின் விளக்கங்கள் மூலம் தெளிவுபெறும் வசனங்களும் உள்ளன. வேறு சில வசனங்கள் அன்றைய அரபு மக்கள் பயன்படுத்திய முறையை வைத்துக் கொண்டும் விளங்கலாம். ஏனெனில் இது அரபி மொழியில் மக்கள் விளங்குவதற்காக இறக்கப்பட்டுள்ளதால் அந்த மக்கள் ஒரு வார்த்தையை எந்தப் பொருளில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு நாம் விளங்கலாம்.

இந்த அடிப்படையை வைத்து விளங்கும் வசனங்களில் உள்ளது தான் மூஸா (அலை) அவர்கள் பயன்படுத்திய உங்களையே கொன்று விடுங்கள் என்ற வாசகமும்.

பல விரிவுரையாளர்கள் இதற்கு நேரடியான பொருளையே கொடுத்துள்ளனர். பொதுவாக எந்த வசனத்திற்கும் நேரடியான பொருளைத் தான் கொடுக்க வேண்டும் என்றாலும் மற்ற வசனங்களுக்கு மாற்றமாக வரும் போது இதற்கு வேறு விதமான பொருளை அரபியர்கள் பயன்படுத்தி உள்ளார்களா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.

உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)

இந்த வசனம் நேரடியான பொருள் செய்யத் தடுக்கிறது. மேலும் தற்கொலை செய்தால் நிரந்தரமான நரகம் என்று நபிகளார் விளக்கியுள்ளார்கள். இவ்வாறு அல்லாஹ் தடை செய்த முறையை இறைத்தூதர் கூற மாட்டார். எனவே இதற்கு வேறுவிதமான பொருள் இருக்கிறதா என்று நாம் பார்க்கும் போது இதற்கு வேறுவிதமான பொருளையும் அரபியர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

தப்ஸீர் அல்பஹ்ருல் முஹீத் என்ற திருக்குர்ஆன் விளக்கவுரை நூலில் இந்த வசனத்திற்கு விளக்கம் எழுதும் போது இதற்கு மூன்று விதமான பொருளைத் தருகின்றனர். 1. அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும். 2. அவர்கள் அனைவரும் தாமாகக் கொல்லப்படுவதற்கு முன்வர வேண்டும். 3. அவர்களையே அவர்கள் இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் மூன்றாவது பொருளில் நபிகளார் காலத்தில் மிகப் பிரபலமான கவிஞர் ஹஸ்ஸான் அவர்களின் கவிதையில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றையும் அந்த நூலாசிரியர் தருகிறார். இந்த மூன்று கருத்துக்களில் இறுதியாகக் கொடுத்த கருத்தே மற்ற திருக்குர்ஆன் வசனங்களுக்கும் நபிமொழிக்கும் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே, உங்களை நீங்களே கொல்லுங்கள் என்பதற்குத் தமிழ் நடையில், செத்துத் தொலையுங்கள் என்ற கருத்து தரப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உட்பட பலர் இதற்கு மாற்றமாக வேறு விதமான கருத்துக்கள் கூறியிருப்பதால் நமது கருத்தைப் புறக்கணிக்க முடியாது. காரணம், ஏராளமான வசனங்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்துக்கு மாற்றமாகப் பல ஹதீஸ் கலை வல்லுநர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறியுள்ளார்கள். உதாரணமாக 2:44 வசனத்திற்கு கதாதா அவர்கள் ஒரு விளக்கத்தையும், இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு விளக்கத்தையும், அப்துர்ரஹ்மான் பின் அஸ்லம் அவர்கள் ஒரு விளக்கத்தையும் கூறியுள்ளதை தப்ஸீர் இப்னு கஸீரில் (தமிழில்) 148,149வது பக்கத்தில் பார்க்கலாம். இப்படி ஏராளமான சான்றுகளை நாம் எடுத்துக் காட்டலாம். எனவே சரியான கருத்து எது? என்பதைப் பார்த்தே எதையும் முடிவு செய்ய வேண்டும்.

--> Q/A Dheengula Penmani Mar 2008

No comments:

Post a Comment