பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 27, 2010

சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு

சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு



நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹ‚ம் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.

இதை‘ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக ஆராயாமல் அவற்றிலிருந்து தவறான முறையில் சட்டம் எடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் எடுத்துக் வைக்கக் கூடிய ஆதாரங்களையும் அதன் நிலைகளையும் காண்போம்.

ஆதாரம்: 1


சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.

"நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். "ருகூவுக்கு முன்பா? அல்லது பின்பா?'' என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "ருகூவிற்குப் பின்பு'' என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத்

நூல்: நஸயீ 1061

மறுப்பு

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு குனூத் ஓதியதாக வந்துள்ளது. இது இன்றைக்கு‘ஷாஃபி மத்ஹபினர் ஓதிவரக் கூடிய குனூத் அல்ல. மாறாக இது சோதனையான காலகட்டங்களில் எதிரிகளுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது சிறிது காலம் மட்டுமே ஓதியுள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடிய இந்த ஹதீஸின் அனைத்துப் பகுதிகளையும் நாம் விரிவாக ஆராய்ந்தால் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு ஓதப்பட்ட இந்த குனூத் சோதனைக் காலகட்டங்களில் ஓதியது தான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் "உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்' என்றும் கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 1201

ஆஸிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்: குனூத் பற்றி அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "குனூத் (நபி (ஸல்) காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்'' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று நான் கேட்டேன். அதற்கு, "ருகூவுக்கு முன்பு தான்'' என்று கூறினார்கள். "ருகூவிற்குப் பிறகு என்று நீங்கள் கூறியதாக ஒருவர் எனக்குக் கூறினாரே'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்டேன். "அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்'' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 1002

"நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். "ருகூவுக்கு முன்பு ஓதி இருக்கிறார்களா?'' என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "ருகூவிற்குப் பின்பு சிறிது காலம் (நபி (ஸல்) அவர்கள்) குனூத் ஓதினார்கள்'' என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத்

நூல்: புகாரி 1001

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதியுள்ளார்கள். அதுவும் ஒரு மாத காலம் தான் ஓதியுள்ளார்கள். ஷாஃபி மத்ஹபினர் சுபுஹ் தொழுகையில் ஓதக் கூடிய குனூத் சபித்தலுக்குரியதல்ல. மேலும் அதனை நிரந்தரமாகச் செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட ஹதீஸில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு வாதத்திற்கு சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை வைத்து ஷாஃபி மத்ஹபினர் ஆதாரம் எடுத்தாலும் அவர்கள் சுபுஹ் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து தொழுகையிலும் ஓத வேண்டும்.

ஏனெனில் சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்த குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்துத் தொழுகையிலும் ஓதியுள்ளார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது.

நூல்: புகாரி 798, 1004

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்குச் சார்பாகவும் (கொடுஞ் செயல் புரிந்த) இறை மறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.

நூல்: முஸ்லிம் 1198

இரண்டாவது ஆதாரம்


சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு இரண்டாவது ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்

அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)

நூல்: தாரமி 1549, அஹ்மத் 17913

மறுப்பு

மேற்கண்ட ஹதீஸ‚ம் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில் ஓதி வருகின்ற குனூத்திற்கு ஆதாரமானதல்ல. பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிக்கின்ற மேற்கண்ட ஹதீஸில் சுப்ஹ் தொழுகை என்று மட்டும் வந்திருந்தாலும் அவர்கள் வழியாக வருகின்ற அதிகமான அறிவிப்புகளில் நபியவர்கள் ஃபஜ்ருடன் சேர்த்து மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓதியதாகவே வந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1207, 1208

இன்னும் பல நூல்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

"நபியவர்கள் ஃபஜ்ரிலும், மஃரிபிலும் குனூத் ஓதினார்கள்'' என்று பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிப்பதிலிருந்தே இது சோதனைக் காலத்தில் ஓதுகின்ற பிரார்த்தனை தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தியிலிருந்து சுப்ஹில் குனூத் ஓதலாம் என்று வைத்துக் கொண்டாலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓத வேண்டும். ஆனால் நடைமுறையில் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மேற்கண்ட செய்தியிலும் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில் ஓதி வரும் குனூத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மூன்றாவது ஆதாரம்


நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். அதில் (பிஃரு மஊனாவில் தன்னுடைய தோழர்களைக் கொன்ற) முஷ்ரிகீன்களைச் சபித்து பிரார்த்தித்தார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

மேற்கண்ட செய்தி அஹ்மத், தாரகுத்னீ, முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக், அஸ்ஸ‚னனுல் குப்ரா, அஸ்ஸ‚னனுஸ் ஸ‚ஃரா, மஃரிஃபதுல் ஆஸார் வஸ்ஸ‚னன் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸின் முதல் பகுதி புகாரி, முஸ்லிம் போன்ற பல நூற்களில் வெவ்வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம் பெற்றுள்ளது. ஆனால் சுப்ஹ‚த் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள் என்ற இரண்டாவது பகுதி நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை

இதனுடைய அனைத்து அறிவிப்புகளிலும் அபூ ஜஃபர் அர்ராஸி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஏற்கத் தகுந்தவை அல்ல. இவரைப் பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இமாம் அஹ்மத் மற்றும் நஸயீ ஆகியோர் "இவர் உறுதியானவர் இல்லை' என்று கூறியுள்ளனர். மேலும் அபூ ஜஃபர் அர்ராஸி ஹதீஸ்களில் மூளை குழம்பியவர் என அஹ்மத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மூளை குழம்பி விட்டார் என அலீ இப்னுல் மதீனி கூறியுள்ளார். இவருடைய செய்தியில் பலவீனம் உள்ளது. நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ்களில் உறுதியானவர் இல்லை என ஸாஜி கூறியுள்ளார்.

"இவர் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கத் தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர். இவர் உறுதியானவர்களின் அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிப்பவற்றைத் தவிர மற்றவற்றை ஆதாரமாக எடுப்பது கூடாது; மேலும் நம்பகமானவர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிப்பதை துணைச் சான்றாகக் கூட எடுப்பது கூடாது'' என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவர் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என ஃபலாஸ் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என இப்னு ஹிராஷ் கூறியுள்ளார்.

இதே செய்தி அம்ரு பின் உபைத் என்பார் வழியாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுபவர்களாகவே இருந்தார்கள். நான் அபூபக்கர் சித்தீக் பின்னால் தொழுதிருக்கிறேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாவே இருந்து வந்தார்கள். நான் உமர் பின் கத்தாப் பின்னால் தொழுதிருக்கின்றேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாகவே இருந்து வந்தார்கள்.

அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக்(ரலி)

மேற்கண்ட செய்தி ஒரு சில வார்த்தைகள் கூடுதல் குறைவுடன் பைஹகீ, தாரகுத்னீ, ஷரஹ் மஆனில் ஆஸார் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான அறிவிப்பாகும்.

இச்செய்தியை அறிவிக்கக் கூடிய அம்ரு பின் உபைத் என்பார் பொய்யர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

அம்ரு பின் உபைத் ஹதீஸ்களில் பொய்யுரைப்பவராக இருந்தார் என யூனுஸ் கூறியுள்ளார்.

நான் அம்ர் பின் உபைத் இடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். இவர் அனஸ் அவர்களின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவராக இருந்தார் என ஹுமைத் கூறியுள்ளார்.

பக்ர் பின் ஹும்ரான் என்பவர் கூறுகிறார்: நாங்கள் இப்னு அவ்ன் என்பாரிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் ஒரு சட்டத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கவர் எனக்குத் தெரியாது என்று கூறினார். அதற்கவர், "ஹஸன் அவர்களிடமிருந்து அம்ருப்னு உபைத் இவ்வாறு கூறியுள்ளாரே' என்று கேட்ட போது, "எங்களுக்கும் அம்ரு பின் உபைத்திற்கும் என்ன சம்பந்தம்? அவரோ ஹஸன் மீது பொய்யுரைப்பவராக இருந்தார்' என இப்னு அவ்ன் கூறினார்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த ஒன்றிலும் நான் அம்ரு பின் உபைத்தை உண்மையாளராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என மதர் என்பவர் கூறியுள்ளார்.

யஹ்யா மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் அம்ர் பின் உபைத்திடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார்.

அம்ரு பின் உபைதிடமிருந்து எதையும் அறிவிப்பதற்குத் தகுதியானவராக இல்லை என அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்.

அம்ரு பின் உபைத் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என்று யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார்.

அம்ர் பின் உபைத் ஹதீஸ் துறையில் விடப்படக்கூடியவர். பித்அத்தான அனாச்சாரங்களுக்குச் சொந்தக்காரர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். (அல்ஜரஹ் வ தஃதீல்)

நான் அம்ரு பின் உபைதைச் சந்தித்தேன் அவர் ஒரு ஹதீஸின் மீது என்னிடம் சத்தியம் செய்தார். அவர் பொய்யர் என்பதை நான் அறிந்து கொண்டேன் என வர்ராக் கூறியுள்ளார். (தாரீகுல் கபீர்)

இன்னும் சில அறிவிப்புகளில் இவருடைய மாணவரான இஸ்மாயில் பின் முஸ்லிம் அல்மக்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.

யஹ்யா பின் கத்தான் அவர்களிடம் இஸ்மாயீல் மக்கீயைப் பற்றி கேட்கப்பட்ட போது அவர் மூளை குழம்பியவராகவே இருந்து வந்தார். ஒரே ஹதீஸை மூன்று விதங்களில் எங்களுக்கு அறிவிப்பார் என கூறினார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும் என அஹ்மத் கூறியுள்ளார். இஸ்மாயில் அல்மக்கீ ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். நான் இவருடைய ஹதீஸ்களை எழுத மாட்டேன்; இவரைப் பற்றி என்னுடைய தந்தையிடம் கேட்டேன். இவர் ஹதீஸ்களில் பலவீனமானர், குழப்பக் கூடியவர் என்று என் தந்தை கூறினார் என இப்னுல் மதனீ கூறியுள்ளார். (அல் ஜரஹ் வதஃதீல்)

இன்னும் பல அறிஞர்கள் இவரைப் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களைக் கூறியுள்ளனர்.

மேலும் இதே செய்தியை அனஸ் அவர்களிடமிருந்து அபூ ஹ‚சைன் என்பவர் அறிவிப்பதாக அத்தஹ்கீக் ஃபீ அஹாதீஸில் ஹிலாஃப் என்ற நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியிலும் கைஸ் பின் ரபீஉ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

இவர் எதற்கும் தகுதியானவர் இல்லை என யஹ்யா கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களில் அதிகம் தவறிழைக்கக் கூடியவர்; மேலும் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என அஹ்மத் கூறியுள்ளார். மேலும் இவருடைய மாணவராக அம்ரு பின் அய்யூப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்வதற்கு தகுதியானவரில்லை என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

மேலும் தீனார் பின் அப்தில்லாஹ் என்பவரும் இதே செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்து உள்ளதாக மேற்கண்ட நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தீனார் பின் அப்துல்லாஹ் என்பார் இட்டுக்கட்டக் கூடியவராவார். இவர் இட்டுக் கட்டப்பட்ட பல விஷயங்களை அனஸிடமிருந்து அறிவித்துள்ளார். குறை கூறுவதற்காக மட்டும் தான் இவருடைய கூற்றுக்களை நூல்களில் குறிப்பிட வேண்டும் என இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்.

எனவே, நபியவர்கள் மரணிக்கும் வரை சுபுஹில் குனூத் ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிப்பதாக வரக் கூடிய செய்திகள் மிகப் பலவீனமாக இருக்கின்றன. அத்துடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் ஸஹீஹான ஹதீஸ் இதற்கு நேர் முரணான கருத்தைத் தருகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தைச் சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள்


அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: இப்னு ஹுசைமா

ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத், சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும். இதைத் தவிர வேறு எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும்.

எனவே நபியவர்கள் மரணிக்கும் வரை குனூத் ஓதினார்கள் என்று வரக் கூடிய செய்தி பலவீனமாக இருப்பதுடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக வரக் கூடிய சரியான ஹதீஸிற்கு மாற்றமாகவும் இருப்பதால் அது அறவே ஆதாரத்திற்குத் தகுந்ததில்லை என்பது மேலும் தெளிவாகிறது.

நான்காவது ஆதாரம்


சுபுஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தியையும் எடுத்து வைக்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.

இச்செய்தி ஸுனன் பைஹகி அல்குப்ரா, அபூ முகம்மது ஃபாகி, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.

இதனுடைய அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் என்ற அறிவிப்பாளரின் ஆசிரியராக அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்றே அறியப்படாதவர். அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் நம்பமானவராவார். ஆனால் இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின் நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே யாரென்றே அறியப்படாதவர் வழியாக இச்செய்தி வருவதால் இது பலவீனம் என்பது உறுதியாகிறது.

மேலும் பைஹகியில் இடம் பெற்றுள்ள இச்செய்தியில் அப்துல் மஜீத் இப்னு அப்துல் அஸீஸ் என்ற மற்றொரு பலவீனமான அறிவிப்பாளரும் இடம் பெறுகிறார். இவர் மனனத் தன்மையில் மோசமானவர் என ஹதீஸ் கலை வல்லுநர்களால் விமர்சிக்கப் பட்டுள்ளார்.

மேலும் இச்செய்தியை இப்னு ஜுரைஜிடமிருந்து அபூ ஸஃப்வான் அல் உமவி என்பவர் அறிவித்துள்ளார். அவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியராக அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவருக்கு பதிலாக அப்துல்லா பின் ஹுர்முஸ் என்ற பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நிலை அறியப்பட்டுள்ளது என்றாலும் இச்செய்தி ஸஹாபி விடுபட்டுள்ள முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும் என பைஹகி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த வரிசையும் பலவீனம் என்பது தெளிவாகிறது.

மேலும் இதே செய்தி பலமான அறிவிப்பாளர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவையனத்திலுமே அல்லாஹும் மஹ்தினி என்ற இத்துஆவை நபியவர்கள் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவே வந்துள்ளது. எனவே பலமான இந்த அறிவிப்புக்கு மாற்றமாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளதால் அது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம்


நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போது அல்லாஹும் மஹ்தினீ..... என்ற இத்துஆவை ஓதுவார்கள்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

இச்செய்தி ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இச்செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீமான நிலையில் உள்ளதாகும். இதில் அப்துல்லாஹ் பின் ஸயீத் அல் முக்பிரீ என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை; மேலும் இவர் ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர் என அஹ்மத் பின் ஹன்பல், அம்ருப்னு அலீ ஆகியோர் கூறியுள்ளனர்.

இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என அஹ்மத் கூறியுள்ளார். ஒரு அவையில் இவருடைய பொய்மை எனக்கு வெளிப்பட்டது என யஹ்யா இப்னுல் கத்தான் கூறியுள்ளார். இவர் ஒரு பொருட்டானவரில்லை; இவருடைய ஹதீஸ்கள் எழுதப்பட மாட்டாது என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். இவர் கைவிடப்பட வேண்டியவர்; ஹதீஸ்களில் களவாடக் கூடியவர் என தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் வேண்டுமென்றே இதைச் செய்துள்ளார் என நமது உள்ளம் எண்ணுமளவிற்கு இவர் ஹதீஸ்களைப் புரட்டக் கூடியவர்; செய்திகளில் தவறிழைக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே மேற்கண்ட செய்தியும் மிகப் பலவீனமானதாகும்.

சுபுஹ் குனூத் தொடர்பாக வரக் கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. அத்துடன் பலமான, ஸஹீஹான ஹதீஸ்களுடன் நேரடியாக மோதும் வகையிலும் அமைந்துள்ளன.

"என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி)யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?'' என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் "அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்'' என விடையளித்தார்.

அறிவிப்பவர்: அபூ மாலிக் அஷ்ஜயீ

நூல்: திர்மிதி 368, இப்னு மாஜா 1231

எனவே தற்காலத்தவர் ஓதி வருகின்ற சுப்ஹ் குனூத் என்பது நபியவர்கள் காலத்திற்குப் பின் உருவாக்கப்பட்ட அனாச்சாரம் என்பது மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாகின்றது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தை சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: இப்னு ஹுசைமா

ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத் சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும்.

இதைத் தவிர வேறு எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதாகும்.

எனவே சுபுஹ் குனூத் என்பது விடப்பட வேண்டிய ஒரு பித்அத்தான காரியமாகும்.

பலவீனமாக இருந்தாலும், பொய்யர்கள் அறிவித்தாலும் அதை நான் பின்பற்றுவேன் என ஒருவர் கூறினால் அவருக்கு நபியவர்கள் கூறுகிறார்கள்:

பொய்யெனக் கருதப்படக் கூடிய ஒரு செய்தியை என்னிடமிருந்து ஒருவன் அறிவித்தால் அவன் பொய்யர்களில் ஒருவனாவான்.


நூல்: முஸ்லிம்


என் மீது யார் வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.


நூல்: புகாரி

அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.சி.
Ehathuvam Jan 2008

No comments:

Post a Comment