பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 27, 2010

?சுன்னத் ஜமாஅத்தினரால் ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பள்ளிவாசலில் இருக்கும் ஜனாஸா பெட்டியைத் தர மறுக்கிறார்கள் என்றால் எப்படி மய்யித்தைக் கொண்டு போய் அடக்கம் செய்வது? மேலும் ஜனாஸா தொழுûயை வீட்டு முன்பாகத் தொழுது விட்டு ஜனாஸாவைக் கொண்டு போய் அடக்கம் செய்யலாமா?



இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

முஸ்லிம்களில் யாருக்கும் ஜனாஸா பெட்டி தர மறுப்பதற்கோ, அல்லது அடக்கம் செய்வதைத் தடுப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு தடுப்பவர்கள் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அடக்கம் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

இனி கேள்விக்கு வருவோம்.

ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கென குறிப்பிட்ட வடிவில் ஒரு பெட்டியைப் பயன்படுத்த வேண்டும் என்று மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள வடிவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாப் பெட்டி இருந்ததில்லை.

ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். ''அபூ ஹம்ஸாவே நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். ''நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?'' என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் இதைக் கவனத்தில் வையுங்கள் என்றார்கள்.
நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779, இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640

''நல்ல மனிதரின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் 'என்னை முற்படுத்துங்கள்!' என்று அது கூறும். கெட்ட மனிதனின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் 'எனக்குக் கேடு தான்! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?' என்று அது கேட்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1882

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கட்டிலில் வைத்து ஜனாஸா எடுத்துச் செல்லப் பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து வழக்கம். உடலை வளையாமல் எடுத்துச் செல்வது தான் முக்கியமே தவிர குறிப்பிட்ட வடிவம் முக்கியம் அல்ல.

இப்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் சந்தாக் பெட்டியில் எடுத்துச் செல்வதும் கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வதும் சமமானது தான்.

எனவே பள்ளிவாசலில் ஜனாஸா பெட்டி தரவில்லை என்றால் அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. சாதாரண கட்டிலில் வைத்துக் கொண்டு போய் அடக்கம் செய்யலாம்.

அது போன்று ஜனாஸா தொழுகையும் பள்ளிவாசலில் தான் தொழ வேண்டும் என்பதில்லை. வீட்டில் கூட ஜனாஸாவை வைத்துத் தொழுது விட்டுப் பின்னர் அடக்கத்தலம் கொண்டு சென்று அடக்கலாம்.

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள், அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். (தொழுவிப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா
நூல்கள்: ஹாகிம் 1350, பைஹகீ 6699

--> Q/A Ehathuvam Sep 2007

No comments:

Post a Comment