பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 28, 2010

மஹ்ரமான ஆண் துணையுடன் ஹஜ்ஜுக்கு அனுப்ப??

? நான் சவூதியில் இருந்த போது இரண்டு முறை ஹஜ் செய்து விட்டேன். தற்போது என் மனைவியை (வயது 58) ஹஜ்ஜுக்கு அனுப்ப விண்ணப்பித்துள்ளேன். விண்ணப்பத்தில் மஹ்ரமான ஆண் துணைக்கு, எனக்குத் தெரிந்த ஒருவரை (வயது 68) சித்தப்பா முறை என்று எழுதி அனுப்பியுள்ளேன். என் மகன் சவூதியில் வேலை பார்க்கிறார். அங்கு சென்று விட்டால் மகனுடன் சென்று என் மனைவி ஹஜ் செய்வார். இவ்வாறு ஹஜ்ஜுக்கு அனுப்புவது சரியா?



"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்'' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233

இந்த ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும். வயது, வசதி, பாதுகாப்பு இது போன்ற காரணங்களால் மஹ்ரமான துணை தேவையில்லை என்று ஒரு பெண் கருதினால் தனியாக ஹஜ் செய்யச் செல்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது'' என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள்.

"அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?'' என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்'' என்று சொன்னார்கள். நான், "(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

"ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்'' என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 3595

தனியாக ஹஜ்ஜுக்கு வரும் பெண்ணைப் பற்றி இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள். அந்த முன்னறிவிப்பு நிறைவேறியதையும் நபித்தோழர் அறிவிக்கின்றார். தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்துப் பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

எனவே ஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

மஹ்ரமான துணை அவசியம் என்ற ஹதீஸின் அடிப்படையில் ஹஜ் விண்ணப்பத்தில் இவ்வாறு கேட்டிருப்பார்கள். இதில் பொய்யான தகவலைக் குறிப்பிட்டது தான் மார்க்க அடிப்படையில் குற்றமே தவிர தனியாக ஹஜ்ஜுக்கு அனுப்பி வைப்பதில் தவறில்லை.

மேலும் சவூதிக்குச் சென்ற பின் மகனுடன் சேர்ந்து தான் ஹஜ் செய்யப் போகின்றார் என்பதால் விமானப் பயணத்தின் போது மட்டுமே தனியாகச் செல்லும் நிலை இருக்கின்றது. எனவே இது எந்த விதத்திலும் மார்க்கத்திற்கு முரணானது கிடையாது.

--> Q/A Ehathuvam Magazine Nov 2008

No comments:

Post a Comment