பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது??

? ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது? குளிப்பாட்டும் போது என்ன ஓதுவது? யார் குளிப்பாட்டுவது? என்ற விவரங்களைத் தெளிவுபடுத்தவும்.


ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் ஹதீஸ்களில் இல்லை. என்றாலும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.

நபிகளாரின் மகளை பெண்களே குளிப்பாட்டியுள்ளார்கள்.
(புகாரி 1260)

கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் குளிப்பாட்ட விரும்பினால் அவர்களிடையே எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் அதைத் தடுக்க முடியாது. சில ஊர்களில் முஅத்தின் (மோதினார்) தான் குளிப்பாட்ட வேண்டும் என்று எழுதப்படாத விதிகள் உள்ளன. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குளிப்பாட்டும் முறை தெரிந்த யாரும் குளிப்பாட்டலாம்.

அடுத்து, குளிப்பாட்டும் முறையைக் காண்போம்.

முதலில் மய்யித்தின் ஆடைகளை விரும்பினால் களைந்து விட்டுக் குளிப்பாட்டலாம்.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். மற்றவர்களின் ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பாட்டுவது போல் நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா? என்பது தெரியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். நபி (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள் என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்கு தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீர் ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் (2733)

மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டுவது போன்று என்ற வாசகம் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து விட்டு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை அறிவிக்கின்றது. இது தவறு என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் அன்றே மாற்றியிருப்பார்கள். எனவே இதை அடிப்படையாகக் கொண்டு ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டலாம்.

அடுத்து, குளிப்பாட்டும் போது மய்யித்திடம் அங்கக் குறைபாடுகள் ஏதேனும் தென்பட்டால் அதை மற்றவர்களிடம் கூறக் கூடாது.

யார் இறந்து விட்ட ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டி, அவரது குறையை மறைத்து விடுகின்றாரோ, அல்லாஹ் அவருக்கு நாற்பது முறை பாவ மன்னிப்பை வழங்கி விடுகின்றான். யார் குழி தோண்டி அடக்கம் செய்கின்றாரோ அவருக்கு ஒரு முஸ்லிமைக் குடியமர்த்தியவருக்குரிய கூலியைப் போன்று (அவரது) கூலியை நிரந்தரமாக்கி விடுகின்றான். யார் (இறந்து விட்ட) முஸ்லிமுக்குக் கபன் ஆடை அணிவிக்கின்றாரோ, இறுதி நாளில் அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தின் ஸுன்துஸ், இஸ்தப்ரக் ஆகிய பட்டாடைகளை அணிவிக்கின்றான்.

அறிவிப்பாளர் அபூராபிஃ (ரலி)
நூல் ஹாகிம் (பாகம்: 1, பக்கம்: 505), பைஹகீ (பாகம்: 3, பக்கம்: 395)

குளிப்பாட்டும் போது முதலில் வலப் புறத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது மகளைக் குளிப்பாட்டுவது குறித்துப் பெண்களிடம் கூறுகையில், அவருடைய வலப் பக்கத்திலிருந்தும், உளூச் செய்ய வேண்டிய உறுப்புக்களிலிருந்தும் (கழுவ) ஆரம்பியுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்: புகாரி (167)

ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீரை ஊற்ற வேண்டும். கற்பூரத்தை தண்ணீரில் பயன்படுத்த வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் மகள்களில் ஒருவர் இறந்து விட்டதும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாக நீராட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நீராட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்எனக் கூறினார்கள். நீராட்டி முடிந்து தெரிவித்ததும் தமது கீழாடையை (சடலத்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும் நாங்கள் சடலத்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப் புறமாகப் போட்டு வைத்தோம்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்: புகாரி (1263)

பெண்கள் சடைபோட்டிருந்தால் அதைப் பிரித்துக் குளிப்பாட்ட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் மகளின் சடலத்திற்குத் தலை(முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிருந்தார்கள். பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவி விட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்: புகாரி (1260)

இதே மய்யித்தைக் குளிப்பாட்டும் முறையாகும். குளிப்பாட்டும் போது தனியான துஆக்களோ, திக்ருகளோ கிடையாது. ஜனாஸா சட்டங்களை முழுமையாக அறிந்து கொள்ள சகோதரர் பி.ஜே. அவர்கள் எழுதிய ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நூலை வாங்கிப் படியுங்கள்.

--> Q/A Dheengula Penmani Feb 2008

No comments:

Post a Comment