பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, July 30, 2010

சந்திர, சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதலாமா?

சந்திர, சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதலாமா?
(சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இவர்களின் வாதங்களையும் அதற்குரிய பதிலையும் கேள்வி பதில் முறையில் இங்கு வழங்குகிறோம்.)

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இமாம் அபூ ஹனீஃபா, இமாம் ஷாபிஈ, இமாம் மாலிக் இவ்வாறு ஓதக்கூடாது என்று கூறியுள்ளார்களே இதில் எது சரி?


பதில் : சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதே சரியாகும்.

கேள்வி : அது எப்படி சரியாகும்? இமாம்களின் கூற்றை விட இக்கருத்து சரியானதா?

பதில் : சூரிய சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதுதான் சரியானதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரிய, சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதியதாக புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தைதான் அலீ பின் அபீதாலிப், அப்துல்லாஹ் பின் யஸீத், பரா பின் ஆஸிப், ஸைத் பின் அர்க்கம், அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, இப்னு முன்திர், அபூயூஸீப் (அபூஹனிபாவின் மாணவர்), முஹம்மத் பின் ஹஸன் (ஹனபி மத்ஹப்) தாவூத் லாஹரி ஆகியோர் (நபிவழியின் கருத்தையே) தேர்ந்தெடுத்துள்ளார்கள். நூல்: அல் மஜ்மூவ், பாகம் : 5, பக்கம் : 58

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகை பகல் தொழுகையாகும். பகலில் தொழும் தொழுகையான லுஹர், அஸர் தொழுகையில் சப்தமின்றிதான் ஓதுகிறோம். எனவே பகலில் தொழும் சூரிய கிரணத் தொழுகை சப்தமின்றி ஓத வேண்டும். இரவு நேரத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுகிறோம். இதைப்போன்று சந்திர கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும் என்று சில கூறுகின்றனரே?

பதில் : பகல் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதில்லை என்பதால் சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதக்கூடாது என்பது சரியான கருத்தாக இருந்தால் பகலில் தொழும் ஜுமுஆத் தொழுகை, பெருநாள் தொழுகை, மழைத் தொழுகை போன்றவற்றிலும் சப்தமில்லாமல்தானே ஓத வேண்டும்? இதற்கு என்ன பதில் சொல்வோம்? நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையிலும் பெருநாள் தொழுகையிலும், மழைத் தொழுகையிலும் சப்தமிட்டு ஓதியுள்ளார்கள் அதனால் இவற்றில் மட்டும் சப்தமிட்டு ஓதுவோம் என்று கூறுவோம். இதைப்போன்று சூரிய கிரகணத் தொழுகையிலும் நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதி உள்ளதால் நாமும் சப்தமிட்டே ஓத வேண்டும்.

கேள்வி : சூரிய கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வில்லை என்ற கருத்தை தரும் ஒரு செய்தி புகாரியில் இடம் பெற் றுள்ளதே!

இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் (ஜமாஅத்தாக கிரகணத் தொழுகை) தொழுவித்தார்கள். அத்தொழுகையில் அல்பகரா (2ஆவது) அத்தியாயம் போன்றதை ஓதும் அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையைவிட குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூச் செய்தார்கள் அந்த ருகூஉ முந்திய ருகூஉவைவிட குறைவானதாக இருந்தது. பின்னர் சஜ்தாச் செய்தார்கள். பிறகு (சஜ்தாவிருந்து) எழுந்து (இரண்டாவது ரக்அத்தில்) நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இந்த நிலை முந்திய நிலையை விட குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முந்திய ருகூஉவைவிட குறைவானதாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிருந்து) நிமிர்ந்து வெகு நேரம் நிலையில் நின்றார் கள். இது முந்திய நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இது முந்திய ருகூஉவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுது முடித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரையாற்றுகையில், சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண் டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (தொழுது கொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிருந்து பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அது கிடைத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிருந்(தப் பழத்தி ருந்)து புசித்திருப்பீர்கள். மேலும் நான் (தொழுது கொண்டிருக்கையில்) நரகம் எனக்குக் காட்டப்பட்டது. இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரக வாசிகல் அதிகமாகப் பெண்களையே கண்டேன் என்று கூறினார்கள்.

மக்கள், ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பெண்கன் நிராகரிப்பே காரணம் என்றார்கள். அப்போது பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க் கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டேதேயில்லை என்று சொல்விடுவாள் என்று பதிலத்தார்கள்

நூல் : புகாரி 1052

கேள்வி : நபி ஸல் அவர்கள் சப்தமிட்டு ஓதியிருந்தால் அதை நமக்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவித்திருப்பார்களா இல்லையா? இந்த நபிமொழியில் அவ்வாறு கூறப்படாததால் நபிகளார் சப்தமில்லாமல்தான் ஓதியுள்ளார்கள் என்று விளங்க முடியகிறதே?

பதில் : இந்த ஹதீஸில் சப்தமிட்டு ஓதவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சூரியகிரணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள் என்றோ அல்லது சப்தமில்லாமல் ஓதினார்கள் என்றோ எந்த தகவலும் இல்லை. எனவே இதை வைத்துக் கொண்டு சப்தமில்லாமல் ஓதினார்கள் என்று கூறமுடியாது.

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சூரிய கிரணத் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களிடமிருந்து எந்த சப்தத்தையும் செவியுறவில்லை என்ற செய்தி அஹ்மத், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளதே? மேலும் இதை பதிவு செய்த இமாம் ஹாகிம் இந்த செய்தி புகாரி, முஸ்லிம் அறிஞர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று சொல்லியுள்ளார்களே?

பதில் : அல்லாஹ் அருள் புரியட்டும், ஹாகிம் அவர்கள், நபிமொழியை ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதில் அலட்சியப்போக்கு உள்ளவர். பல பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஆதாரப்பூர்வமானது என்று கூறியுள்ளார்கள். எனவே இவர் ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதை மட்டும் வைத்து அது நம்பகமான செய்தி என்று முடிவு செய்யக் கூடாது. இந்த செய்தி இடம் பெற்ற அனைத்து இடங்களிலும் ஸஅலபா பின் இபாத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் புகாரி, முஸ்லிமின் அறிவிப்பாளரில் உள்ளவர் இல்லை. எனவே இந்த செய்தி புகாரி, முஸ்லிம் அறிஞர்களின் நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூற முடியாது.

கேள்வி : புகாரி, முஸ்லிமின் நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூற முடியாவிட்டால் அதை ஆதாரமாக கொள்ளக்கூடாதா?

பதில் : ஆதாரமாகக் கொள்ளலாம். அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவராக இருந்தால். ஆனால் ஸஅலபா பின் இபாத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னுல் முதைனி, இப்னு ஹஸ்ம், இப்னுல் கத்தான், இஜ்லி, தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். இவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாததால் இந்த செய்தி பலவீனம் அடைகிறது. மேலும் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, இப்னுமுன்திர், இப்னு குஸைமா, ஹாகிம், பைஹகி, இப்னு ஹிப்பான், தப்ரானி கபீர் ஆகிய அனைவர்களும் இந்த செய்தியை ஸஅலபா என்பவர் வழியாகத்தான் பதிவு செய்துள்ளார்கள்.

கேள்வி : நான் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் சூரிய கிரணத் தொழுகைத் தொழுதேன். அவர்களிடமிருந்து ஒரு எழுத் தைக்கூட செவியுறவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர் கள் அறிவிக்கும் செய்தி முஸ்னத் அபீ யஃலா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதே?

பதில் : இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது இல்லை. இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள நான்காவது அறிவிப்பாளர் இப்னு லஹீஆ என்பவர் பல வீனமானவராவார். எனவே இந்த செய்தியை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. எனவே சூரிய, சந்திர கிகரணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவதுதான் நபிவழியாகும்.

கேள்வி : சந்திர, சூரிய கிரகணத் தொழுகையின்போது சப்தமிட்டு ஓதுவதற்கு ஹதீஸ்களில் நேரடி ஆதாரம் உள்ளதா?

பதில் : ஆம்! கீழ்க்கண்ட ஹதீஸை காண்க...

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின் னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள், தக்பீர் (தஹ்ரீமா), கூறி / நீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர், சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் ஓதினார்கள். ஆனால் இது முதலில் ஓதியதைவிட குறைந்த நேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிட குறைந்த நேரமே அமைந்திருந்தது. பின்னர், சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் / ரப்பனா வல(க்) கல் ஹம்து, என்று கூறி (நிமிர்ந்து) விட்டு/ சஜ்தாச் செய்தார்கள். பிறகு இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். அப்போது நான்கு சஜ்தாக் (கள் கொண்ட இரண்டு ரக்அத்)களில் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்தற்கு முன் (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான குணஙகளைக் கூறிப் போற்றி(ய பின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள் (தமது உரையில்)/ (சூரியன், சந்திரன்) இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீஙகள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்... என்று கூறினார்கள். (இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் (எனக்கு இதையறிவித்த) உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்/ மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்ட தினம் உங்கள் சகோதரர் (அப்துல்லாஹ் பின் ஸுபைர் - ரலி) இரண்டு ரக்அத்களைவிட கூடுதலாக்கா மல் சுப்ஹுத் தொழுகை போன்று தொழுவித்தார்களே... என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் ஆம்! (அவர் அவ்வாறு தொழுவித்தார்கள்.) அவர் நபி வழியை தவறவிட்டார்... என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாகவும் இதுபோன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அது கஸீர் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), புஹாரி : 1046

-->யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்
--> Dheengula Penmani Feb 2010

No comments:

Post a Comment