பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 28, 2010

பயணம் செய்வதற்காக மக்ரிப், இஷாவை ஜம்உ செய்து ??

? நான் பயணம் செய்வதற்காக மக்ரிப், இஷாவை ஜம்உ செய்து இஷாவையும் சேர்த்துத் தொழுது முடித்து விட்டேன். பிறகு பயணம் ரத்தாகி விட்டது. இஷா நேரத்தில் நான் ஊரில் தான் இருக்கிறேன். எனவே மீண்டும் இஷா தொழ வேண்டுமா? அல்லது தொழாமல் இருக்கலாமா? விளக்கம் தரவும்.


பயணத்தை முன்னிட்டு மக்ரிப், இஷாவை சேர்த்துத் தொழுத பின்னர் பயணம் ரத்தாகி விட்டால் மீண்டும் இஷா தொழுவது அவசியமில்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் பயணம், அச்சம், மழை போன்ற எந்தக் காரணமும் இன்றி ஜம்உ செய்து தொழுதுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பயமோ, மழையோ இன்றி லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 172

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1267

மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் ஜம்உ செய்து தொழுத பின்னர் பயணம் ரத்தாகி விட்டாலும் இஷா தொழுகையின் கடமை நிறைவேறி விடும். மீண்டும் தொழுவது கட்டாயமில்லை. எனினும் ஜமாஅத்துடன் தொழுவதன் நன்மை கருதி மீண்டும் இஷாவை நிறைவேற்றினால் அதுவும் தவறில்லை. ஆனால் இஷா நேரத்தில் பள்ளியில் இருந்தால் கண்டிப்பாக ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுதாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். "நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), "அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்'' என்று கூறினார். "நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புஸ்ர் பின் மிஹ்ஜன்
நூற்கள்: நஸயீ 848, அஹ்மத் 15799

--> Q/A Ehathuvam Magazine June 2008

No comments:

Post a Comment