பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

விபச்சார வழக்கில் சாட்சியாக ஒருவர் இருந்தால் ?

? விபச்சார வழக்கில் சாட்சியாக ஒருவர் இருந்தால் அவருக்கு 80 கசையடிகள் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றதே! அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினாலும் கசையடி உண்டா?



சாட்சி கூறுபவருக்கு தண்டனையா? என்ற கோணத்தில் தங்கள் கேள்வி அமைந்துள்ளது. ஆனால் பெண்கள் மீது அவதூறு கூறுவோருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது தான் தாங்கள் குறிப்பிடும் சட்டம்.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராத வர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 24:4)

ஒரு பெண் விபச்சாரம் செய்து விட்டாள் என்று ஒருவர் கூறுகின்றார் என்றால் அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்.

நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர் களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

நான்கு சாட்சிகள் இல்லாமல் குற்றம் சுமத்துபவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினாலும் தண்டனை யிலிருந்து தப்ப முடியாது.

இந்த விஷயத்தில் மார்க்கம் இவ்வளவு கடுமை காட்டுவதற்குக் காரணம், பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்பு படுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.

தனக்குப் பிடிக்காத பெண்ணையோ, அல்லது தனது ஆசைக்கு இணங்காத பெண்ணையோ ஒருவர் விபச்சாரி என்ற பட்டம் சுமத்தி விட வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அவதூறு கூறுபவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலை இருந்தால் அதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். எனவே தான் இந்த விஷயத்தில் மார்க்கம் கடுமை காட்டுகின்றது. இதில் கணவன் மனைவிக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது.

ஒருவர் தன் மனைவி மீது விபச்சாரக் குற்றம் சுமத்தினால் அவரிடம் நான்கு சாட்சிகள் இல்லை என்றால் அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து, ஐந்தாவது முறை, 'தான் கூறுவது பொய் என்றால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்'' என்று கூற வேண்டும். இது போன்று அந்தப் பெண்ணும் தன் மீதுள்ள குற்றத்தை மறுத்து சத்தியம் செய்தால் இருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். இது கணவன் மனைவிக்கு மட்டும் உள்ள தனிச் சட்டமாகும்.

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்). ''அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும். ''அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (அல்குர்ஆன் 24:6லி9)


-> Q/A Ehathuvam June 06

No comments:

Post a Comment