? நபி (ஸல்) அவர்கள் முடி களைந்த போது நபித்தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதை எடுத்து வைத்துக் கொண்டனர் என்றும், துப்பினால் கைகளில் உடம்பில் தேய்த்துக் கொண்டனர் என்றும் இடம் பெறக் கூடிய செய்திகள் உண்மையா? இதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்களா?
நீங்கள் குறிப்பிடுவது போன்று இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் பல இருந்தாலும் இதே கருத்தில் சில ஹதீஸ்கள் இருப்பதும் உண்மை தான்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரையும், அவர்களது எச்சிலையும் புனிதம் என்று கருதி அதற்காக நபித் தோழர்கள் போட்டி போட்டுள்ளார்கள் என்று ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.
இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பாகும். இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி, சில ஏமாற்றுப் பேர்வழிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
நபி (ஸல்) அவர்களின் எச்சிலுக்குப் புனிதம் இருந்தது என்றால் அது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதமாகும். இது போன்ற அற்புதத்தை வேறு யாருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை.
(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நாளை (இஸ்லாமியப் படையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகின்றேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான்'' என்று சொன்னார்கள். ஆகவே மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கினார்கள். காலையானதும் மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், ''அலீ பின் அபீதாலிப் எங்கே?'' என்று கேட்டார்கள். மக்கள், ''அவருக்குக் கண் வலி, அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ''அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரரி) அவர்கள் வந்தவுடன், அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அலீ (ரலி) அவர்கள் குணமடைந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 3701
இந்த ஹதீஸில் அலீ (ரலி) அவர்களின் கண்களில் நபி (ஸல்) அவர்கள் எச்சில் உமிழ்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்தவுடன் அலீ (ரலி) அவர்களுக்கு இருந்த கண் நோய் குணமாகி விட்டது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் எச்சிலைப் போன்று தனது எச்சிலும் புனிதமானது என்று யாரேனும் கூறினால் அவர் அதை நிரூபித்துக் காட்ட வேண்டும். அதுவும் இந்த ஹதீஸில் இடம் பெறுவதைப் போன்று உமிழ்ந்தவுடன் குணம் கிடைக்க வேண்டும். இப்படி ஒரு அற்புதத்தை வேறு யாருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
--Q/A Ehathuvam Magazine Apr 06
No comments:
Post a Comment