பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

பெண்கள் இமாமத் செய்வதற்கு அனுமதி..?

? எங்கள் ஊர் பள்ளிவாசலில் பெண்கள் ஜும்ஆ தொழுகைக்குச் செல்கிறோம். ஆண் இமாமைப் பின்பற்றித் தொழுகின்றோம். நாங்கள் வெளியூர் சென்றிருந்த போது ஜமாஅத்தாகத் தொழலாம் என்ற போது, பெண்கள் இமாமத் செய்வதற்கு அனுமதியில்லை என்று என் உறவுக்காரப் பெண் கூறி விட்டாள். இது சரியா? விளக்கவும்.




பெண்கள் இமாமத் செய்வதில் பல கருத்துக்கள் அறிஞர்களிடையே உள்ளன.

--> பெண்கள் அறவே யாருக்கும் இமாமத் செய்யக் கூடாது.

-->  பெண்கள் பெண்களுக்கு மட்டும் இமாமத் செய்யலாம். ஆண்களுக்கு இமாமத் செய்யக் கூடாது.

--> மணமுடிக்கத் தடுக்கப் பட்ட ஆண்கள், தள்ளாத வயதுடைய ஆண்கள், சிறுவர்கள் ஆகியோருக் கும் பெண்களுக்கும் இமாமத் செய்யலாம்.

என்று அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.

பெண்கள், பெண்களுக்குக் கூட இமாமத் செய்யக் கூடாது எனக் கூறுவோர் அதற்குத் தெளிவான எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை. எனவே அந்தக் கருத்தை எடுத்த எடுப்பிலேயே நாம் நிராகரித்து விடலாம்.

பெண்கள், பெண்களுக்கு மட்டும் இமாமத் செய்யலாம்; ஆண்களுக்கு இமாமத் செய்யக் கூடாது எனக் கூறுவோர் முக்கியமாக நான்கு ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.

1. தன்னை வாள் அல்லது சாட்டையைக் கொண்டு நிர்ப்பந்திக்கும் ஓர் அரசனுக்குப் பயந்தாலே தவிர, ஒரு பெண் ஆணுக்குத் தொழுவிக்க வேண்டாம். ஒரு கிராமப்புற அரபி ஒரு முஹாஜிருக்குத் தொழுவிக்க வேண்டாம். ஒரு கெட்டவர் ஒரு முஃமினுக்குத் தொழுவிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா)

2. ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 4:34)

3. பெண்கள் தலைமைப் பொறுப்பு ஏற்கும் சமுதாயம் வெற்றி பெறாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

4. ஜமாஅத்தில் பெண்கள் பங்கெடுத்தால் முதல் வரிசையில் ஆண்கள் நிற்க வேண்டும். இரண்டாவதாக சிறுவர்கள் நிற்க வேண்டும். கடைசியாகப் பெண்கள் நிற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

இந்த நான்கு சான்றுகளைத் தான் அவர்கள் முன் வைக்கிறார்கள்.

இவற்றில் முதலாவது ஆதாரமான இப்னுமாஜா ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள அல்வலீத் பின் புகைர் அபூ ஹன்னாப் என்பவரும் அலீ இப்னு ஜைத் என்பவரும் பலவீனமானவர்கள். அப்துல்லாஹ் பின் முஹம்மது அல் அதவீ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் விடப்பட்டவர். ஆகவே இந்த அறிவிப்பை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மற்ற மூன்று ஆதாரங்களும் நேரடியாக இமாமத் குறித்துப் பேசும் ஆதாரங்களாக இல்லாவிட்டாலும் பொதுவாக தலைமை எனக் கூறப்படுவதால் இமாமத்தையும் எடுத்துக் கொள்ளும் என்பது இவர்களது வாதம்.

பொதுவாகக் கூறப்படும் போது இமாமத்தும் இதில் அடக்கமாகும் என்ற வாதம் சரியானது என்றாலும் பெண்கள் இமாமத் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) வேறு விதமாகக் கூறி விட்டதால் இமாமத் இதற்குள் அடங்காது என்பதைக் கவனிக்கத் தவறி விட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்ற போது உம்மு வரகா (ரலி) அவர்கள், ''உங்களுடன் போருக்கு வர எனக்கு அனுமதி தாருங்கள். எனக்கும் ஷஹாதத் எனும் வீர மரணத்தை அல்லாஹ் தருவான்'' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''நீ வீட்டிலேயே இருந்து கொள். அல்லாஹ் உனக்கு வீர மரணத்தைத் தருவான்'' எனக் கூறினார்கள்.

இதனால் அப்பெண்மணி வீர மரணத்தைத் தழுவுபவர் என்றே குறிப்பிடப்படலானார். அவர் குர்ஆனை ஓதத் தெரிந்தவராக இருந்தார். வயதான முதியவரை முஅத்தினாக ஏற்படுத்திக் கொண்டு தனது வீட்டாருக்கு இமாமத் செய்ய அனுமதி கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி யளித்தார்கள். அவரிடம் ஒரு ஆண் அடிமையும் ஒரு பெண் அடிமையும் இருந்தனர். தமது மரணத்திற்குப் பின் அவர்கள் விடுதலையாகலாம் என்று எழுதிக் கொடுத்திருந்தார். அவ்விருவரும் உமர் (ரலி) காலத்தில் அவரைக் கொன்றனர். (இதன் மூலம் வீர மரணம் அடைவார் என்ற முன்னறிவிப்பு நிறைவேறியது.) கொலையாளிகள் சிலுவையில் அறையப்பட்டனர்.

நூல்: அபூதாவூத் 591, 592

உம்மு வரகா என்ற பெண்மணி ஒரு முதியவருக்கும், தனது ஆண் அடிமைக்கும் இமாமத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர். ''அவரது குடும்பத்தினருக்கு'' என்ற வாசகம் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் கூட இமாமத் செய்வதை அனுமதிக்கும் வகையில் உள்ளது.

ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்பது குடும்ப நிர்வாகத்தைக் கூறுகிறது. இந்த ஹதீஸ் இமாமத்தைக் குறிப்பிட்டுக் கூறுவதால் இவ்வசனத்தின் கருத்தில் இது அடங்காது.

பெண்கள் ஆட்சி செய்வதைக் குறித்த ஹதீஸ் பொதுவானதாக உள்ளது. இதுவோ குறிப்பாக இமாமத் பற்றிப் பேசுகின்றது. எனவே அந்த ஹதீஸில் இமாமத் அடங்காது.

வரிசையில் நிற்கும் போது ஆண்கள் முதல் வரிசை, சிறுவர்கள் அடுத்த வரிசை, பெண்கள் அதற்கு அடுத்த வரிசை என்பது இமாமாக நிற்பவருக்குப் பொருந்தாது. அது மஃமூம்களையே குறிக்கும்.

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், ''மக்களுக்கு என்ன? மக்களுக்கு என்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?'' என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.

அதற்கு அவர்கள், ''அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார்'' என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், ''அவரை அவருடைய குலத்தாருடன் விட்டு விடுங்கள். ஏனெனில் அவர்களை அவர் வென்று விட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)'' என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றி நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், 'இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்' என்று சொன்னார்கள்'' என்று கூறினார்.

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது, நான் பயணிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை.

ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய சிறுவனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டி வந்தது.

ஆகவே அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ''உங்கள் ஓதுவோரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார். ஆகவே, அவர்கள், (துணி) வாங்கி எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல் வேறெதனாலும் மகிழ்ச்சி அடைந்ததில்லை.

அறிவிப்பவர்: அம்ர் பின் சலிமா (ரலி)
நூல் : புகாரி 4302

இந்த ஹதீஸில் சிறுவர் இமாமத் செய்யும் போது பெரியவர்கள் பின்னால் நின்றுள்ளனர். சிறுவர் முந்தியும், பெரியவர் பிந்தியும் இருந்துள்ளனர் என்பதால் இவர்கள் சுட்டிக் காட்டும் நான்காவது ஆதாரமும் ஏற்புடையதல்ல.

பெரும்பாலோர் இரண்டாவது கருத்தில் தான் உள்ளனர். எனினும் மூன்றாவது கருத்தே ஹதீசுக்கு ஒத்த முடிவாகவுள்ளது.

எனவே மஹ்ரமானவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் ஆகியோருக்குப் பெண்கள் இமாமத் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் அனுமதித்ததை நாமும் அனுமதித்துக் தான் ஆக வேண்டும்

-> Q/A Ehathuvam August 06

No comments:

Post a Comment