பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய முடியும்? மேலும் தலாக் சொன்ன பெண்களுக்கு வாழ பொருள் கொடுக்க வேண்டுமா?

? நீங்கள் மணம் முடிக்கும் பெண்களுக்கு மஹர் தொகையைக் கொடுத்து விடுங்கள் என்று இறைவன் கூறுகின்றான். ஆனால் 2:236 வசனத்தில், ''அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையில் விவாகரத்து செய்வது குற்றமில்லை'' என்று கூறுகின்றான். மேலும் விவாகரத்துச் செய்த பெண்களுக்கு பொருளும் கொடுக்கச் சொல்கிறது திருக்குர்ஆன். மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய முடியும்? மேலும் தலாக் சொன்ன பெண்களுக்கு வாழ பொருள் கொடுக்க வேண்டுமா? விளக்கவும்.



ஒரு பெண்ணை மணம் முடிக்கும் ஒருவர் அவள் கேட்கும் மஹர் தொகையைக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் மஹரைப் பொறுத்த வரை மார்க்கம் அந்த உரிமையை முழுக்க முழுக்க பெண்களிடம் விட்டுள்ளது.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)

அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாக ரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (அல்குர்ஆன் 2:236)

அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாக ரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன் 2:237)

ஒரு பெண் எவ்வளவு மஹர் வாங்க வேண்டும்? அந்த மஹரை எப்போது வாங்க வேண்டும்? அதிலிருந்து கணவனுக்கு ஏதேனும் கொடுக்கலாமா?

திருமணத்திற்கு முன்பே வாங்கலாமா? அல்லது மஹர் தொகையைத் தீர்மானித்து விட்டு அதைத் திருமணத்திற்குப் பின் வாங்கிக் கொள்ளலாமா? அல்லது மஹர் தொகை இவ்வளவு எனத் தீர்மானிக்காமல் இருக்கலாமா?

இதில் எந்த ஒன்றை வேண்டுமானாலும் ஒரு பெண் தீர்மானித்துக் கொள்ளலாம். அந்த உரிமையைப் பெண்களிடம் மார்க்கம் வழங்கியுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து விளங்கலாம்.

பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்த உரிமைகளில் ஒன்று தான், மஹர் தொகையைத் தீர்மானிக்காமல் திருமணம் முடித்த பின் முடிவு செய்து மஹரை வாங்கிக் கொள்வதாகும். இதைத் தான் அந்த வசனம் குறிப்பிடுகின்றது.

இந்த வசனத்தின் அடிப்படையில் தலாக் சொல்லப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளீர்கள்.

பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும்.

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (அல்குர்ஆன் 2:241)

இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

ஆயினும் முஸ்லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே இந்த வசனம் குறிக்கிறது என்று நினைக்கின்றனர்.

இதை ''இத்தா காலத்தில்'' என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் ''அழகிய முறையில் லி நியாயமான முறையில்'' என்று கூறுகிறான்.

ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.

தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப்படுகிறதோ அது தான் நியாயமானது.

வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (அல்குர்ஆன் 2:236)

இந்த வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் தொகை கொடுக்க வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாக இருக்க முடியும்.

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப, பெரும் தொகையைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.

விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது. விவாகரத்துக்காக எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை.

முஸ்லிம் சமுதாயம் இந்த இறைக் கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் பலவிதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றனர், இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கு இது பயன்படுத்தப்படுகிறது. போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.

எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! (அல்குர்ஆன் 65:6)

இந்த வசனத்தில், கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி 2:241 வசனத்தில் கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது.

--Q/A Ehathuvam Magazine Mar 06

No comments:

Post a Comment