? ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மையில்லாதவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று பி.ஜே. கூறி வருகின்றார். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித் பின் கைஸ் (ரலி) கறுப்பாகவும், குள்ளமாகவும், அருவருப்பான தோற்றம் உடையவராகவும் இருந்தார்; அதனால் தான் அவரது மனைவி அவரை விவாகரத்துச் செய்தார் என்று எழுதப் பட்டுள்ளது. இதில் எது சரி?
இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன் ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறோம். ஏகத்துவத்திற்கு வரும் கேள்விகள் சிலவற்றில் இது போன்று அந்த அறிஞர் அப்படிக் கூறினார்; இந்த அறிஞர் இப்படிக் கூறினார் என்று பொத்தாம் பொதுவாக சிலர் குறிப்பிட்டு அதற்கு விளக்கம் கேட்கின்றனர். எழுத்துப்பூர்வமான விஷயங்களைக் குறிப்பிட்டுக் கேட்டால் தான் நாம் அதற்கு உரிய விளக்கம் அளிக்க முடியும். ஏனென்றால் இந்த நூலில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறும் போது அதை எடுத்துப் பார்த்து அதற்கு விளக்கமளிக்க முடியும்.
சொற்பொழிவுகளைப் பொறுத்த வரை எழுத்துக்களைப் போன்று வார்த்தைகள் திட்டமிட்டுக் கூறப் படுவதில்லை. சில விளக்கங்களைக் கூறும் போது வார்த்தைகள் முன்பின்னாக வந்து விடலாம்; வாய் தவறி ஏதாவது கூறி விடலாம்.
எனவே சொற்பொழிவுகளில் பேசியதைக் குறிப்பிட்டு இப்படிக் கேள்வி கேட்டால், அது எந்த நிகழ்ச்சி, எங்கு நடைபெற்றது? எப்போது பேசினார்? அவர் அப்படிப் பேசினாரா? இல்லையா? பேசியிருந்தால் எந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்? என்ற விபரங்கள் தெரியாத நிலையில் இது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பது சாத்தியமில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
தற்போது ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் குறித்த உங்கள் கேள்விக்கு வருவோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ''சரி'' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ''தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409
ஸாபித் பின் கைஸ் (ரலி) குறித்து அவரது மனைவி கூறியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தான் இடம் பெற்றுள்ளது.
ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆண்மையற்றவர் என்றோ, அவர் அருவருப்பான தோற்றமுடையவர் என்றோ ஆதாரப்பூர்வமான செய்திகளை நாம் காண முடியவில்லை.
அவர் அருவருப்பான தோற்றம் உடையவராக இருந்தார் என்ற கருத்தில் இப்னுமாஜா, அஹ்மது போன்ற நூற்களில் இடம் பெற்றுள்ள செய்தி பலவீனமானதாகும்.
''இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைவனுக்கு மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்று அந்தப் பெண்மணி கூறுவதிலிருந்து அவரது தேவையைப் பூர்த்தி செய்யும் கணவராக இருக்கவில்லை என்பது மட்டும் தெரிகின்றது. இது தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸிலிருந்து கிடைக்கும் விளக்கமாகும்.
பெண்களின் விவாகரத்து உரிமையான 'குல்உ' குறித்து விளக்கும் போது, காரணம் எதையும் கூறாமலேயே பெண்கள் விவாகரத்துக் கோரலாம் என்பதை விளக்குவதற்காக இந்தச் செய்தியை மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுவதுண்டு.
அந்த நபித்தோழர் எப்படிப் பட்டவர்? என்று ஆய்வு செய்வதால் அதிலிருந்து ஏதேனும் சட்ட விளக்கம் கிடைக்கும் என்றால் அது குறித்து ஆய்வு செய்யலாம். ஆனால் இந்தச் சட்டத்தைப் பொறுத்த வரை அவ்வாறு ஆய்வு செய்வதால் அதற்கு எந்த வலுவும் ஏற்படப் போவதில்லை. எனவே இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளில் நாம் ஈடுபடத் தேவையில்லை.
--> Q/A Ehathuvam Dec 06
No comments:
Post a Comment