? பயிர் விளைச்சலில் நீர் பாய்ச்சி விளைபவற்றில் 5 விழுக்காடும், தானாக விளைபவற்றில் 10 விழுக்காடும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இறை வசனம் உள்ளது. இது நாம் செய்த செலவு போக கிடைக்கும் இலாபத்திலா? அல்லது மொத்த விளைச்சலிலா?
நீங்கள் கூறும் கருத்தில் இறை வசனம் இல்லை; ஹதீஸ் தான் உள்ளது.
''மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1483
இந்த ஹதீஸில் 'விளைச்சலில்' பத்தில் ஒரு பங்கு அல்லது இருபதில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று பொதுவாகத் தான் கூறப்படுகின்றது. விளைச்சலில் செலவைக் கழித்துக் கொண்டு போக மீதமுள்ள லாபத்தில் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். அவ்வாறு குறிப்பிட்டுக் கூறாததிலிலிருந்து மொத்த விளைச்சலில் தான் ஜகாத்தைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை அறிய முடியும்.
இதற்குப் பின்வரும் வசனமும் சான்றாக அமைந்துள்ளது.
படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 6:141)
விளை பொருட்களை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய ஜகாத்தை வழங்கி விடுங்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. அறுவடை செய்யும் போது, எவ்வளவு தானியங்கள் இருக்கின்றனவோ அதில், அதாவது மொத்த விளைச்சலில் தான் ஜகாத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பதை இந்த வசனத்திலிருந்து விளங்கலாம்.
உதாரணமாக இருபது மூடை நெல் அறுவடை செய்துள்ளோம் என்றால் நஞ்சையாக இருந்தால் அதில் இரண்டு மூட்டை அளவும், புஞ்சையாக இருந்தால் ஒரு மூட்டை அளவும் ஜகாத்தாக வழங்க வேண்டும்.
--> Q/A Ehathuvam Jan 07
No comments:
Post a Comment