பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

தரீக்கத்துன் முஃப்லிகீன் என்ற ஒரு அமைப்பினர்..??

? இலங்கையில் முஸ்லிம்கள் 100 சதவிகிதம் வாழும் ஒரு பிரதேசத்தில் தரீக்கத்துன் முஃப்லிகீன் என்ற ஒரு அமைப்பினர், தொழுகை போன்ற வணக்கங்கள் தேவையில்லை என்றும் திக்ர் மட்டும் போதும் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் வணக்கத்தலத்தில் சுப்ரபாதம் போன்ற இசை நிறைந்த பாடல்களைப் பாடுவதோடு, உயிருடன் இருப்பவர்கள் பெயரில் கந்தூரி எடுத்து வருகின்றனர். இவர்களை எதிர்ப்பவர்கள், அந்த அமைப்பினரின் சொத்துக்களைத் தீயிட்டும், சேதப்படுத்தியும் வருகின்றனர். இது போன்று மார்க்கத்திற்கு எதிராகச் செயல்படும் இந்தக் கூட்டத்தினரின் சொத்துக்களை சேதப்படுத்தி அவர்களை அழித்து ஒழிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
தாங்கள் கூறுவது போன்று மார்க்கத்தை மாற்றும் கூட்டத்தாருக்கு இஸ்லாமிய ஆட்சியாக இருந்தால் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாமிய ஆட்சி இருந்தாலும் ஆட்சியாளர்கள் தான் அந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமே தவிர பொதுமக்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

பொதுவாக குர்ஆன், ஹதீஸில் கூறப்படும் கட்டளைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று சாதாரணமாக எல்லோரும் செயல் படுத்த வேண்டிய கட்டளைகள். மற்றொன்று ஆட்சியாளர்களால் செயல் படுத்தப்பட வேண்டிய கட்டளைகள்.

தொழுகை, நோன்பு போன்றவை எல்லோரும் லி ஒவ்வொரு தனி மனிதனும் லி செயல் படுத்த வேண்டிய கட்டளைகள். இதுபோல் ஆட்சியாளர் களால் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டிய கட்டளைகளும் உள்ளன. அவற்றை தனி மனிதர்களாக இருந்து கொண்டு செயல்படுத்த முடியாது.

உதாரணமாக ஜிஹாது சம்பந்தமான வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர் களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! (அல்குர்ஆன் 9:5)

இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தற்போது இணை வைப்பவர்களை வெட்ட வேண்டும் என்று கூற முடியுமா? இது போல் ஜிஹாதைப் பற்றிக் கூறும் எல்லா வசனங்களையும் உதாரணமாகக் கூறலாம்.

திருடினால் கையை வெட்ட வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. அதனால் திருடியவனின் கையை நாமே வெட்டிவிட முடியாது. இஸ்லாமிய ஆட்சி இருக்கும் போது தான் அதை செயல் படுத்த முடியும். அதுவும் இஸ்லாமிய அரசு தான் அந்தச் சட்டத்தை செயல் படுத்த வேண்டும். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை இஸ்லாத்தில் இல்லை.

எனவே இஸ்லாத்தை மாற்றும் இந்தத் தரீக்காவாதிகளை அழிப்பதற்கோ, அல்லது அவர்களது சொத்துக்களைச் சேதப்படுத்துவதற்கோ தனி நபர்கள் எவருக்கும் அதிகாரம் இல்லை. இஸ்லாமிய அரசு தான் அதற்கான தண்டனையை நிறைவேற்ற முடியும்.

இஸ்லாமிய ஆட்சி இருந்தால் கூட தனி நபர் எவரும் இதைச் செய்ய முடியாது எனும் போது, இந்தியா, இலங்கை போன்ற இஸ்லாமிய ஆட்சி அல்லாத நாடுகளில் ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் இருக்கும் நாம் இந்தக் காரியங்களை ஒரு போதும் செய்ய முடியாது.

இது போன்ற சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

''உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70

இந்த ஹதீஸின் அடிப்படையில் கையினால் தடுக்க முடியாத பட்சத்தில் நாவினால் தடுக்க வேண்டும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நமக்குப் பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு இது போன்ற தரீக்காக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள முடியும்.

ஏகத்துவவாதிகள் குறைந்த எண்ணிக்கையில் பலவீனமாக இருக்கும் ஊர்களில் பிரச்சாரமும் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கலாம். இந்த இடங்களில் ஈமானின் இறுதி நிலை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற படி இத்தீமைகளில் கலந்து கொள்ளாமல் மனதால் வெறுத்து ஒதுங்கி விட வேண்டும்.

அதே சமயம் நமக்கு வழங்கப் பட்டுள்ள பேச்சுரிமை, எழுத்து உரிமையைக் கொண்டு இயன்ற வரை இந்தத் தீமைகளை சமுதாயத்துக்கு உணர்த்த முயற்சிக்க வேண்டும்.

-> Q/A Ehathuvam Sep 06

No comments:

Post a Comment