தர்ஹாவிற்கு ஜியாரத்திற்காகச் செல்லலாமா?
பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் தர்ஹாவிற்குச் செல்வதற்கு அனுமதி இல்லை. நபி (ஸல்) அவர்கள் கப்ரை ஜியாரத் செய்ய அனுமதி தந்துள்ளார்களே என்று கூறி இதை நியாயப்படுத்த முடியாது.
நபி (ஸல்) அவர்கள் பொது மையவாடிக்குச் செல்வதற்குத் தான் அனுமதியளித்தார்கள். அவர்கள் சென்றதும் பகீஃ என்ற பொது மையவாடிக்குத் தான். ஆனால் இன்று பொது மையவாடிக்குச் சென்று ஜியாரத் செய்யாமல் மார்க்கம் தடை செய்த இடத்திற்குச் சென்று மார்க்கம் அனுமதிக்காத செயல்களைச் செய்கிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அபுல்ஹய்யாஜ் என்பவரை அழைத்து, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பினார்களோ அதே பணிக்காக நான் உன்னை அனுப்பட்டுமா? நீ எந்த ஒரு சிலையைக் கண்டாலும் அதை அழிக்காமல் விட்டு விடாதே! உயர்ந்திருக்கும் எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம் (1609)
நபிகளார் இடித்துத் தரைமட்டமாக்குமாறு கட்டளையிட்ட ஒரு இடத்தில் கட்டடம் கட்டிக் கொண்டு ஜியாரத் அடிப்படையில் செல்கிறோம் என்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. போவதாக இருந்தால் முதலில் தர்ஹாவை உடைத்து விட்டு அடுத்த வேலைகளைச் செய்யட்டும்.
இது மட்டுமல்லாமல் பெருமானார் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும் அதன் மேல் கட்டடங்கள் கட்டுவதையும் தடை செய்தார்கள். பெருமானார் விதித்த இவ்வளவு பெரிய தடையை மீறி தர்ஹாக்களில் கப்ருகளைப் பூசியும் அதன் மேல் கட்டடங்களை எழுப்பியும் உள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மேல் கட்டடங்கள் எழுப்பப்படுவதையும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் (1610)
நபி(ஸல்) அவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தார்கள். பள்ளிவாசலில் ஆண்களை முதலாவ தாகவும், சிறுவர்களை ஆண்களுக்கு அடுத்தும், சிறுவர்களுக்கு அடுத்து பெண்களும் அமர வேண்டும் என்று ஒரு வழிமுறையை ஏற்படுத்தினார்கள்.
தொழுகை முடிந்த உடன் முதலில் பெண்களும் அவர்கள் சென்ற பின்பு தான் ஆண்களும் செல்ல வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளார்கள். பள்ளிக்கு ஆண்களைக் கவரும் வண்ணம் நறுமணங்களைப் பூசி வரக் கூடாது என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் ஆலயத்தில் வருவதற்குக் கூட இவ்வளவு வரம்புகளைப் பெண்கள் பேண வேண்டும். ஆனால் இன்று தர்ஹாக்களில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஆண்கள், பெண்களோடு மோதிக் கொண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும், ஆண்களைக் கவரும் வண்ணம் பெண்கள் அலங்கரித்து வருவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. மாற்று மதத்தவர்களின் வணக்கஸ்தலங்களில் நடக்கும் வழிபாட்டிற்கும் தர்ஹாவில் நடக்கும் வழிபாட்டிற்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை.
குர்ஆன் ஹதீஸை இழிவுபடுத்தும் இடங்களுக்கு நாம் செல்லக் கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிடுகிறான். இக்கட்டளையை மீறி நாம் அங்கு கலந்து கொண்டால் அவர்களைப் போன்றே நாமும் நபிவழிக்கு மாற்றமாக நடந்தவர்களாக ஆகி விடுவோம்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே! (அல்குர்ஆன் 4:140)
தர்ஹாவிற்குச் செல்வது கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் கூறினால் நன்கு புரியும். பள்ளிவாசல்கள் என்பது தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய இடம். ஆனால் ஒரு பள்ளியில் நிர்வாகிகள் சினிமா பாடல்களைப் பாட விடுகிறார்கள். இப்பொழுது நாம் பள்ளியில் தொழுவதற்கு அனுமதி உள்ளதே என்று நினைத்து பாட்டை கேட்டுக் கொண்டு அந்தப் பள்ளிக்குச் செல்வோமா அல்லது பாடல்கள் இல்லாமல் அமைதியாக இருக்கும் மற்றொரு பள்ளிக்குச் செல்வோமா? பாடல் இல்லாத பள்ளிவாசலுக்குத் தான் செல்வோம். இது போன்று தான் தர்ஹாவும்.
நாம் ஜியாரத்தே செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. பெருமானார் கற்றுத் தந்த முறையில் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம். பெருமானார் காலத்தில் பெருமானாருக்கு விருப்பமான எவ்வளவோ நபர்கள் இறந்தார்கள். அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யும் பொது மையவாடிக்குக் கொண்டு சென்று சாதாரணமாக அடக்கம் செய்தார்களே தவிர தர்ஹாக்களை உருவாக்கவில்லை. தடுக்கப்பட்டக் காரியங்கள் நடைபெறும் இடங்களில் இறைவனுக்குப் பிடித்தமான வணக்கங்களை செய்யக் கூடாது என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
கர்தம் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! நான் சில ஆடுகளை புவானா என்ற இடத்தில் அல்லாஹ்விற்காக அறுப்பதாக நேர்ச்சை செய்துள்ளேன்'' என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அங்கே சிலைகள் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். பெருமானார் (ஸல்) அவர்கள், ''அப்படியானால் அல்லாஹ் விற்காக நீ செய்த நேர்ச்சையை நிறைவேற்று!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: மைமூனா பின்த் கர்தம் (ரலி) நூல்: இப்னு மாஜா (2122)
கர்தம் (ரலி) அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றலாமா? என்று கேட்ட போது பெருமானார், ''அந்த இடத்தில் சிலை ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கிறார்கள். ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அங்கு இஸ்லாத்திற்கு எதிரான எந்த அம்சங்களும் இருக்கக் கூடாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் பெருமானார் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்கள். எனவே தர்ஹாவில் இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்கள் நடைபெறுவதால் அங்கு செல்லக் கூடாது. மாறாக பொது மையவாடிகளுக்கு முறையோடு செல்வது கூடும்.
தீன்குலப் பெண்மணி (ஜூன் 2006)
No comments:
Post a Comment