பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 24, 2010

'இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்' ...???

? டிசம்பர் மாத ஏகத்துவத்தில், 'இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸ இல்லை என்று கூறுகின்றீர்களே! மேற்கண்ட ஹதீசுக்கு என்ன விளக்கம்?


"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளை அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 366, 1542, 1842

இந்த ஹதீஸில் இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணியக் கூடாது என்று கூறியிருப்பதால் இஹ்ராமைக் களைந்தவுடன் அவற்றை அணிய வேண்டும் என்பது தான் பொருள் என்று கூறுகின்றீர்கள்.

தொப்பிக்கு இதிலிருந்து இப்படிச் சட்டம் எடுப்பவர்கள் இதே ஹதீஸில் இடம் பெற்றுள்ள சட்டை, பேண்ட், காலுறை போன்றவற்றுக்கு இவ்வாறு சட்டம் எடுப்பதில்லை.

அதாவது இஹ்ராமைக் களைந்த உடன் சட்டை, பேண்ட், காலுறை ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்தாக வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். விரும்பினால் அவற்றை அணியலாம்; அல்லது அணியாமல் இருக்கலாம்; அது அவரவர் விருப்பம் என்று விளங்கிக் கொள்கிறோம்.

இதே நிலை தான் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

சட்டை, பேண்ட், காலுறை போன்றவற்றை அணிவது எப்படி மார்க்கக் கடமை இல்லையோ அது போன்று தொப்பி அணிவதும் மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்று தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.

தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

--> Q/A Ehathuvam Feb 07

No comments:

Post a Comment