பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா?

இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா?



இமாம் தக்பீர் கூறிய உடன் இன்னொருவர் உரத்த குரலில் அதை எடுத்துக் கூறலாமா?

அய்யம்பேட்டை அலீம், ஷார்ஜா




கூட்டுத் தொழுகை என்பது இமாமின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொண்டால் தான் முழுமை பெறும்.

சில நேரங்களில் இமாமுடைய குரல் உரத்த சப்தமாக இருக்காது. இதனால் கடைசியில் இருப்பவர்களுக்குக் கேட்காத போது குழப்பம் ஏற்படும்.

அல்லது ஒரு தளத்தில் இமாம் இருக்கும் போது மற்றொரு தளத்தில் நிற்கும் மக்களுக்கு இமாமுடைய சப்தம் கேட்க முடியாமல் போய் விடும்.

அல்லது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால் இமாம் இப்போது என்ன செய்கிறார் என்பது தொலைவில் இருக்கும் மக்களுக்குத் தெரியாமல் போய் விடுவதுண்டு.

இமாமுடைய ஓதுதல் சிலருக்குக் கேட்காவிட்டாலும் டுகூவு ஸஜ்தா போன்றவற்றுக்காக அவர் கூறும் தஸ்பீஹ்கள் மக்களுக்குக் கேட்டால் தான் அவரைப் பின்பற்ற முடியும். எனவே இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களால் சப்தமாக ஓத முடியவில்லை. அவர்கள் ஓதுவதும் தக்பீர் கூறுவதும் அருகில் இருந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தான் கேட்டது. பின்னால் இருந்த மக்களுக்குக் கேட்கவில்லை. அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தக்பீர் கூறிய உடன் அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் சொன்னார்கள்.

712 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போய் விட்டார்களோ அந்த நோயின் போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற்காக வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான், (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது என்று கூறினேன். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் உடல் நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்ட போது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல் தம்மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டு(க் கொண்டு அவர்கள் புறப்ப)ட்டு வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக் கொண்டார்கள். நபி (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்)தார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள்

புஹாரி 712, 664, 683, 687, 713

No comments:

Post a Comment