பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

பெண்கள் அழகு நிலையங்களுக்குச் ???

நவீன காலத்துப் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்களே! இது கூடுமா?




ஒரு பெண் மார்க்கத்திற்கு முரண் இல்லாத வகையில் இறைவன் ஏற்படுத்திய அமைப்பில் எதையும் அகற்றாமலும் சிதைக்காமலும் அழகு படுத்திக் கொள்வதில் குற்றமில்லை. ஆனால் இன்றைய அழகு நிலையங்களில் பெண்களுடைய புருவங்களையும் பற்களையும் அழகிற்காக செதுக்குகிறார்கள்.


சில பேர் புருவத்தை மழித்து எடுத்து விட்டு ஸ்டிக்கர் புருவத்தை விதவிதமாக ஒட்டிக் கொள்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அளவில் முகத்தில் வளரும் முடிகளைக் கூட விட்டு வைக்காமல் அவற்றை மழித்து எடுத்து விடுகிறார்கள். இது போன்று உருவத்தை சிதைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

''பச்சைக் குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல் வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி (5931)

ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான் இறைவனுடைய அமைப்பை மாற்றுவார்கள் என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.

''அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4:119)

இந்த வசனம், இறைவனுடைய அமைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. இன்னும் இறைவன் நம்மை அழகான படைப்பாக படைத்ததாகச் சொல்லிக் காட்டுகிறான்.

அப்படியிருக்க நாம் நம் அமைப்பை மாற்றும் போது இறைவனுடைய படைப்பை அசிங்கமானதாக நாம் கருதி விடுகிறோம். நம் கண்ணிற்கு அசிங்கமாகத் தெரிந்தாலும் அல்லாஹ் அதில் ஏதோ ஒரு அழகை மறைத்திருப்பான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4)

அதே நேரத்தில் மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக உடல் அமைப்பு அமைந்திருந்தால் அவற்றைச் சரி செய்வது கூடும். உதாரணத்திற்கு, பெண்களுக்கு மீசை முளைத்திருந்தால், பற்கள் முன்பாக நீண்டிருந்தால் இவை போன்றதை அகற்றுவதில், சரி செய்வதில் குற்றம் இல்லை.

இன்னும் இந்த நவீன காலத்துப் பெண்கள் நாகரீகம் என்று எண்ணிக் கொண்டு ஆண்கள் உடுத்துகின்ற ஜீன்ஸ் டிசர்ட் போன்ற ஆடைகளை அழகிற்காக உடுத்துகிறார்கள். இதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது. ஆண் உடுத்துபவற்றை பெண் அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெண் அணிவதை அணியக் கூடிய ஆணையும் ஆண் அணிவதை அணியக் கூடிய பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் (3575)

தீன்குலப் பெண்மணி (ஜூன் 2006)

No comments:

Post a Comment