பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

மஹர் என்பது இஸ்லாமிய அடிப்படையில் மணப்பெண்ணிற்கு உரியது தானே?

? ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க, அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பி.ஜே. அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மஹர் என்பது இஸ்லாமிய அடிப்படையில் மணப்பெண்ணிற்கு உரியது தானே? எனவே இதை எவ்வாறு விளங்க வேண்டும் என்று விளக்கம் தரவும்.
''எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 28:27)

மூஸா நபியவர்கள் ஒரு பெண்ணை மணமுடிப்பதற்கு அப்பெண்ணின் தந்தையிடம் எட்டு அல்லது பத்து ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்கள். அதாவது அவர்கள் பார்த்த வேலையின் ஊதியத்தை மஹராகத் தந்துள்ளார்கள் என்பது இதன் பொருள்.

இதனடிப்படையில் பெண்ணுக்குத் தர வேண்டிய மஹர் தொகையை அவளின் தந்தையிடம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளீர்கள்.

ஒருவர் தமது மகளின் மஹர் தொகையைக் குறித்து மூஸா நபியிடத்தில் கூறுகின்றார். இந்த உரையாடலின் போது சம்பந்தப்பட்ட பெண்களும் அருகில் தான் இருக்கின்றார்கள். அவர்களது சம்மதத்தின் பேரில் தான் இந்த மஹர் தொகை முடிவு செய்யப்படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் மூஸா நபியவர்களை வேலைக்கு அமர்த்துமாறு பரிந்துரை செய்வதே அந்தப் பெண்களில் ஒருவர் தான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

''என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள். (அல்குர்ஆன் 28:26)

மஹர் என்பது பெண்ணிற்கு உரியது தான் என்றாலும் அதை விரும்பினால் யாருக்கும் விட்டுத் தருவதற்கு அவளுக்கு உரிமையுள்ளது. அந்த அடிப்படையில் அந்தப் பெண் தனது தந்தையிடம் அதை வழங்கியிருக்கலாம். அல்லது மூஸா நபியவர்கள் வேலை பார்த்தற்கான ஊதியத்தை தமது மகளிடம் தந்தையார் வழங்கியிருக்கலாம்.

இந்த இரண்டில் எது நடந்திருந்தாலும் அது மஹர் குறித்த சட்டத்திற்கு மாற்றமானதல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

-> Q/A Ehathuvam Sep 06

No comments:

Post a Comment