பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

உடலை பிரேத பரிசோதனை??

? ஒருவர் இறந்த பின்பு அடக்கம் செய்யப்பட்ட உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக தோண்டி எடுத்து பார்க்கலாமா? இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

! உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்கள் உள்ளன. அடக்கம் செய்யப்பட்ட பின் அடக்கத் தலத்தைத் தோண்டி இறந்தவரின் உடலை வெளியே எடுக்கலாமா? என்பது முதல் விஷயம். சாதாரண மரணமா? அல்லது மர்மமான மரணமா என்பதைக் கண்டறிவதற்காக நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனை செய்யலாமா என்பது இரண்டாவது விஷயம்.

அடக்கம் செய்யப்பட்ட உடலை முக்கியமான காரணம் இல்லாமல் அற்பமான காரணத்துக்காகக்கூட தோண்டி எடுக்கலாம். வேறு இடத்தில் அடக்கம் செய்யலாம். பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறியலாம்.

உஹதுப் போர் சமயத்தில் என் தந்தை என்னை அழைத்தார்கள். ''நபித் தோழர்களில் இப்போரில் கொல்லப்படுவோரில் முதல் அணியில் நானும் சேர்வேன் என்று நினைக்கிறேன். நபிகள் நாயகத்துக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் முக்கியமானவன் நீ தான். எனவே எனக்குச் சில கடன்கள் உள்ளன. அவற்றை நீ அடைத்து விடு. உன் சகோதரிகள் விஷயத்தில் நல்லபடியாக நடந்து கொள் என்று என்னிடம் கூறினார். விடிந்ததும் முதலில் கொல்லப்பட்டவர்களில் அவரும் சேர்ந்தார். என் தந்தையுடன் சேர்த்து இன்னொருவரும் ஒரே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டனர். இன்னொருவருடன் சேர்ந்து என் தந்தை அடக்கம் செய்யப்பட்டது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே ஆறு மாதங்களுக்குப் பின் அவரை அந்த அடக்கத்தலத்திலிருந்து வெளிப்படுத்தினேன். அவரது காதைத் தவிர மற்ற உறுப்புகள் இன்று தான் சற்று முன்னர் அடக்கம் செய்தது போல் அவரது உடல் இருந்தது என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி 1351


உஹதுப் போர் நடந்து ஆறு மாதங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது என்பதால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நடந்துள்ளது. மேலும் உடலுக்கு எந்தச் சேதமும் இல்லாமல் இருந்ததால் இந்தச் செய்தி மக்களிடம் பரவலாகச் சென்றிருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

அப்படியே அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்று வைத்துக் கொண்டாலும், நபிகள் நாயகம் (ஸல்) வாழும் போது நடந்த இந்தச் சம்பவம் தவறு என்றால் இறைவன் உடனே அதைத் தவறு என்று நபிகள் நாயகத்துக்கு அறிவித்திருப்பான். இஸ்லாமியக் கொள்கை கோட்பாட்டுடன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை தடை செய்யும் வகையில் எந்த ஆதாரமும் இல்லாததால் மார்க்கத்தின் அனுமதியாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.

அற்பமான காரணத்துக்காக ஜாபிர் (ரலி) அவர்கள் தமது தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்திருக்கும் போது முக்கியமான காரணத்துக்காகவே உடலைத் தோண்டி எடுப்பது எந்த வகையிலும் குற்றமாகாது. விஷம் வைத்தோ, கழுத்து நெறித்தோ, வேறு வகையிலோ ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? சாதாரணமாக மரணித்தாரா? என்பதை அறிவதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாமா என்றால் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

உஸாமா (ரலி) அவர்கள் ஸைதின் மகனாவார். ஆனாலும், உஸாமாவின் தோற்றத்துக்கும், ஸைதின் தோற்றத்துக்கும் ஒற்றுமை இருக்கவில்லை. இதனால் நயவஞ்சகர்கள் பலவிதமாக, அவதூறைப் பரப்பினார்கள். உஸாமா ஸைதுக்குப் பிறந்தவரல்ல என்று கதை கட்டினார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள்.

இந்த நிலையில், கால்களின் ரேகைகளை ஆய்வு செய்பவர் ஒருவர் மதீனா வந்தார். உஸாமா, ஸைத் ஆகிய இருவரின் பாதங்களையும் உன்னிப்பாக கவனித்த அவர் இவ்விருபாதங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்றார். இதைத் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) மிகவும் மகிழ்ச்சியடைந்து வீட்டுக்கு வந்தனர். இந்தச் செய்தியை தமது மனைவி ஆயிஷாவிடம் மகிழ்வுடன் தெரிவித்தனர். இந்தச் செய்தி புகாரி 6770, 3555, 3731, 6771 ஆகிய எண்களில் பதிவாகியுள்ளது.

ஒருவர் யாருக்குப் பிறந்தார் என் பதைக் கண்டறிய அன்று இருந்த ஒரு தொழில்நுட்பத்தையும், அதன் அடிப்படையில் செய்யப்பட்ட முடிவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்று அங்கீகரித்துள்ளனர்.

எனவே அதைவிட உறுதியான, நம்பகமான ஆய்வுகள் மூலம் உண்மைகளைக் கண்டறியலாம். தேவைப்பட்டால் இது கட்டாயமானதாகவும் ஆகிவிடும். கொலை செய்து விட்டு அவசரம் அவசரமாக அடக்கம் செய்து விட்டால் தப்பித்து விடலாம், உடலைப் பரிசோதிக்க மாட்டார்கள் என்று எண்ணும் குற்றவாளிகளைப் பாதுகாக்க இஸ்லாம் துணை நிற்காது என்ற அடிப்படையில் இதை நாம் முடிவு செய்ய முடியும்.

No comments:

Post a Comment